ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி

ஸ்ரீமத் ராமானுஜர்

 

3903

சீரிய நான்மறைச் செம்பொருள் செந்தமிழால் அளித்த

பார் இயலும் புகழ்ப் பாண்பெருமாள் சரண் ஆம் பதுமத்

தார் இயல் சென்னி இராமானுசன் தன்னைச் சார்ந்தவர் தம்

கார் இயல் வண்மை என்னால் சொல்லொணாது இக் கடல் இடத்தே ..11

 

3904

இடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன் இணை அடிப்போது

அடங்கும் இதயத்து இராமானுசன் அம் பொற் பாதம் என்றும்

கடம்கொண்டு இறைஞ்சும் திருமுனிவர்க்கு அன்றி காதல் செய்யாத்

திடம் கொண்டு ஞானியர்க்கே அடியேன் அன்பு செய்வதுவே ..12

 

3905

செய்யும் பசுந்துளவத் தொழில் மாலையும் செந்தமிழில்

பெய்யும் மறைத் தமிழ் மாலையும் பேராத சீர் அரங்கத்து

ஐயன் கழற்கு அணியும் பரந்தாள் அன்றி ஆதரியா

மெய்யன் இராமானுசன் சரணே அதி வேறு எனக்கே ..13

 

3906

கதிக்குப் பதறி வெம் கானமும் கல்லும் கடலும் எல்லாம்

கொதிக்கத் தவம் செய்யும் கொள்கை அற்றேன் கொல்லி காவலன்சொல்

பதிக்கும் கலைக்கவி பாடும் பெரியவர் பாதங்களே

துதிக்கும் பரமன் இராமானுசன் என்னைச் சோர்விலனே ..14

 

3907

சோராத காதல் பெருஞ் சுழிப்பால் தொல்லை மாலை ஒன்றும்

பாராது அவனைப் பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் தாள்

பேராத உள்ளத்து இராமானுசன் தன் பிறங்கிய சீர்

சாரா மனிசரைச் சேரேன் எனக்கு என்ன தாழ்வு இனியே? ..15

 

3908

தாழ்வு ஒன்று இல்லா மறை தாழ்ந்து தலமுழுதும் கலியே

ஆள்கின்ற நாள் வந்து அளித்தவன் காண்மின் அரங்கர் மௌலி

சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல் அருளால்

வாழ்கின்ற வள்ளல் இராமானுசன் என்னும் மாமுனியே ..16

 

3909

முனியார் துயரங்கள் முந்திலும்; இன்பங்கள் மொய்த்திடினும்

கனியார் மனம் கண்ணமங்கை நின்றானை கலை பரவும்

தனி ஆணையைத் தண் தமிழ் செய்த நீலன் தனக்கு உலகில்

இனியானை எங்கள் இராமானுசனை வந்து எய்தினரே ..17

 

3910

எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால்

செய்தற்கு உலகில் வரும் சடகோபனைச் சிந்தையுள்ளே

பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம்

உய்தற்கு உதவும் இராமனுசன் எம் உறு துணையே ..18

 

3911

உறுபெருஞ் செல்வமும் தந்தையும் தாயும் உயர்குருவும்

வெறிதரு பூமகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்

நெறிதரும் செந்தமிழ் ஆரணமே என்று இந் நீள் நிலத்தோர்

அறிதர நின்ற இராமானுசன் எனக்கு ஆர் அமுதே .. 19

 

3912

ஆரப் பொழில் தென் குருகைப் பிரான் அமுதத் திருவாய்

ஈரத் தமிழின் இசை உணர்ந்தோர்கட்கு இனியவர் தம்

சீரைப் பயின்று உய்யும் சீலம் கொள் நாதமுனியை நெஞ்சால்

வாரிப் பருகும் இராமானுசன் என் தன் மாநிதியே!.. 20

 

Leave a Reply