style="text-align: center;">திருவரங்கத்தமுதனார் அருளிச் செய்த
இராமானுச நூற்றந்தாதி
தனியன்
முன்னை வினை அகல் அமூங்கிற் குடி அமுதன்
பொன்னங் கழற் கமலப் போதிரண்டும் – என்னுடைய
சென்னிக்கு அணியாச் சேர்த்தினேன் தென்புலத்தார்க்கு
என்னுக் கடவுடையேன் யான்?
நயந்தரு பேரின்பம் எல்லாம் பழுதின்றி நண்ணினர்பால்
சயந்தரு கீர்த்தி இராமானுச முனிதாள் இணைமேல்
உயர்ந்த குணத்துத் திருவரங்கத்து அமுது ஓங்கும் அன்பால்
இயம்பும் கலித்துறை அந்தாதி ஓத இசை நெஞ்சமே
இனி என் குறை நமக்கு? எம்பெருமானார் திருநாமத்தால்
முனிதந்த நூற்றெட்டுச் சாவித்திரி என்னும் நுண்பொருளை
கனிதந்த செஞ்சொற் கலித்துறை அந்தாதி பாடித் தந்தான்
புனிதன் திருவரங்கத்து அமுதாகிய புண்ணியனே!
வேதப்பிரான் பட்டர் அருளியவை
சொல்லின் தொகை கொண்டு உனது அடிப்போதுக்குத் தொண்டு செய்யும்
நல்லன்பர் ஏத்தும் உன் நாமம் எல்லாம் என் தன் நாவினுள்ளே
அல்லும் பகலும் அமரும்படி நல்கு அறுசமயம்
வெல்லும் பரம; இராமானுஜ! இது என் விண்ணப்பமே!
– அபியுக்தர் ஒருவர் அருளியது
இராமானுச நூற்றந்தாதி
3893
பூமன்னுமாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த
பாமன்னு மாறன் அடி பணிந்து உய்ந்தவன் பல்கலையோர்
தாம் மன்ன வந்த இராமாநுசன் சரணாரவிந்தம்
நாம் மன்னி வாழ நெஞ்சே! சொல்லுவோம் அவன் நாமங்களே! 1
3894
கள் ஆர் பொழில் தென் அரங்கன் கமலப் பதங்கள் நெஞ்சில்
கொள்ளா மனிசரை நீக்கி, குறையல் பிரான் அடிக்கீழ்
விள்ளாத அன்பன் இராமானுசன் மிக்க சீலம் அல்லால்
உள்ளாது என் நெஞ்சு; ஒன்று அறியேன் எனக்கு உற்ற பேர் இயல்வே.. 2
3895
பேர் இயல் நெஞ்சே! அடி பணிந்தேன் உன்னை பேய்ப் பிறவிப்
பூரியரோடு உள்ள சுற்றம் புலர்த்தி பொருவு அரும் சீர்
ஆரியன் செம்மை இராமானுசமுனிக்கு அன்பு செய்யும்
சீரிய பேறு உடையார் அடிக்கீழ் என்னைச் சேர்த்ததற்கே!.. 3
3896
என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி மருள் சுரந்த
முன்னைப் பழவினை வேர் அறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமானுசன் வ்ரன் பாதமும் என்
சென்னித் தரிக்க வைத்தான் எனக்கு ஏதும் சிதைவு இல்லையே.. 4
3897
எனகு உற்ற செல்வம் இராமானுசன் என்று இசையகில்லா
மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னிய சீர்
தனக்கு உற்ற அன்பர் அவன் திருநாமங்கள் சாற்றும் என் பா
இனக்குற்றம் காணகில்லார் பத்தி ஏய்ந்த இயல் இது என்றே.. 5
3898
இயலும் பொருளும் இசையத் தொடுத்து ஈன் கவிகள் அன்பால்
மயல் கொண்டு வாழ்த்தும் இராமானுசனை மதி இன்மையால்
பயிலும் கவிகளில் பத்தி இல்லாத என் பாவி நெஞ்சால்
முயல்கின்றனன் அவன் தன் பெருங்கீர்த்தி மொழிந்திடவே.. 6
3899
மொழியைக் கடக்கும் பெரும் புகழான், வஞ்ச முகுறும்பு ஆம்
குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண் கூடியபின்
பழியைக் கடத்தும் இராமாநுசன் புகழ் பாடி அல்லா
வழியைக் கடத்தல் எனக்கு இனி யாதும் வருத்தம் அன்றே.. 7
3900
வருத்தும் புற இருள் மாற்ற, என் பொய்கைப் பிரான் மறையின்
குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத்
திரித்து அன்று எரித்த திருவிளக்கைத் தன் திருவுளத்தே
இருத்தும் பரமன் இராமானுசன் எம் இறையவனே.. 8
3901
இறைவனைக் காணும் இதயத்து இருள் கெட ஞானம் என்னும்
நிறை விளக்கு ஏற்றிய பூதத் திருவடித் தாள்கள் நெஞ்சத்து
உறைய வைத்து ஆளும் இராமானுசன் புகழ் ஓதும் நல்லோர்
மறையினைக் காத்து இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே ..9
3902
மன்னிய பேர் இருள் மாண்ட பின், கோவலுள் மாமலராள்
தன்னொடும் ஆயனைக் கண்டமை காட்டும் தமிழ்த்தலைவன்
பொன் அடி போற்றும் இராமானுசற்கு அன்பு பூண்டவர்தாள்
சென்னியில் சூடும் திருவுடையார் என்றும் சீரியரே ..10