8ஆம் பத்து

திருமங்கையாழ்வார்

 

 

 

style="text-align: center;">8ஆம் பத்து 4ஆம் திருமொழி

1678

விண்ணவர் தங்கள் பெருமான் திருமார்வன்,

மண்ணவ ரெல்லாம் வணங்கும் மலிபுகழ்சேர்,

கண்ண புரத்தெம் பெருமான் கதிர்முடிமேல்,

வண்ண நறுந்துழாய் வந்தூதாய் கோல்தும்பீ. (2) 8.4.1

1679

வேத முதல்வன் விளங்கு புரிநூலன்,

பாதம் பரவிப் பலரும் பணிந்தேத்தி,

காதன்மை செய்யும் கண்ணபுரத் தெம்பெருமான்,

தாது நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ. 8.4.2

1680

விண்டமல ரெல்லா மூதிநீ யென்பெறுதி,

அண்ட முதல்வ னமரர்க ளெல்லாரும்,

கண்டு வணங்கும் கண்ணபுரத் தெம்பெருமான்

வண்டு நறுந்துழாய் வந்தூதாய் கோல்தும்பீ. 8.4.3

1681

நீர்மலி கின்றதோர் மீனாயோ ராமையுமாய்,

சீர்மலி கின்றதோர் சிங்க வுருவாகி,

கார்மலி வண்ணன் கண்ணபுரத் தெம்பெருமான்,

தார்மலி தண்டுழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ. 8.4.4

1682

ஏரார் மலரெல்லா மூதிநீ யென்பெறுதி,

பாரா ருலகம் பரவப் பெருங்கடலுள்,

காராமை யான கண்ணபுரத் தெம்பெருமான்,

தாரார் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ. 8.4.5

1683

மார்வில் திருவன் வலனேந்து சக்கரத்தன்,

பாரைப் பிளந்த பரமன் பரஞ்சோதி,

காரில் திகழ்காயா வண்ணன் கதிர்முடிமேல்,

தாரில் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ. 8.4.6

1684

வாமனன் கற்கி மதுசூதன் மாதவன்

தார்மன்னு தாச ரதியாய தடமார்வன்,

காமன்றன் தாதை கண்ணபுரத் தெம்பெருமான்,

தாம நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ. 8.4.7

1685

நீல மலர்கள் நெடுநீர் வயல்மருங்கில்,

சால மலரெல்லா மூதாதே, வாளரக்கர்

காலன் கண்ணபுரத் தெம்பெருமான் கதிர்முடிமேல்,

கோல நறுந்துழாய் கொண்டூதாய் கோல்தும்பீ. 8.4.8

1686

நந்தன் மதலை நிலமங்கை நல்துணைவன்,

அந்த முதல்வன் அமரர்கள் தம்பெருமான்,

கந்தம் கமழ்காயா வண்ணன் கதிர்முடிமேல்,

கொந்து நறுந்துழாய் கொண்டூதாய் கோல்தும்பீ. 8.4.9

1687

வண்டமருஞ் சோலை வயலாலி நன்னாடன்,

கண்டசீர் வென்றிக் கலிய னொலிமாலை,

கொண்டல் நிறவண்ணன் கண்ண புரத்தானை,

தொண்டரோம் பாட நினைந்தூதாய் கோல்தும்பீ. (2) 8.4.10

Leave a Reply