8ஆம் பத்து

திருமங்கையாழ்வார்

 

 

 

style="text-align: center;">8ஆம் பத்து 8ஆம் திருமொழி

1718

வானோ ரளவும் முதுமுந்நீர்

வளர்ந்த காலம், வலியுருவில்

மீனாய் வந்து வியந்துய்யக்

கொண்ட தண்டா மரைக்கண்ணன்,

ஆனா வுருவி லானாயன்

அவனை யம்மா விளைவயலுள்,

கானார் புறவில் கண்ணபுரத்

தடியேன் கண்டு கொண்டேனே. (2) 8.8.1

1719

மலங்கு விலங்கு நெடுவெள்ளம்

மறுக அங்கோர் வரைநட்டு

இலங்கு சோதி யாரமுதம்

எய்து மளவோர் ஆமையாய்,

விலங்கல் திரியத் தடங்கடலுள்

சுமந்து கிடந்த வித்தகனை,

கலங்கல் முந்நீர்க் கண்ணபுரத்

தடியேன் கண்டு கொண்டேனே. 8.8.2

1720

பாரார் அளவும் முதுமுந்நீர்

பரந்த காலம், வளைமருப்பில்

ஏரார் உருவத் தேனமாய்

எடுத்த ஆற்ற லம்மானை,

கூரார் ஆரல் இரைகருதிக்

குருகு பாயக் கயலிரியும்,

காரார் புறவில் கண்ணபுரத்

தடியேன் கண்டு கொண்டேனே. 8.8.3

1721

உளைந்த அரியும் மானிடமும்

உடனாய்த் தோன்ற ஒன்றுவித்து,

விளைந்த சீற்றம் விண்வெதும்ப

வேற்றோன் அகலம் வெஞ்சமத்து,

பிளந்து வளைந்த வுகிரானைப்

பெருந்தண் செந்நெற் குலைதடிந்து,

களஞ்செய் புறவில் கண்ணபுரத்

தடியேன் கண்டு கொண்டேனே. 8.8.4

1722

தொழுநீர் வடிவில் குறளுருவாய்

வந்து தோன்றி மாவலிபால்,

முழுநீர் வையம் முன்கொண்ட

மூவா வுருவி னம்மானை

உழுநீர் வயலுள் பொன்கிளைப்ப

ஒருபால் முல்லை முகையோடும்

கழுநீர் மலரும் கண்ணபுரத்

தடியேன் கண்டு கொண்டேனே. 8.8.5

1723

வடிவாய் மழுவே படையாக

வந்து தோன்றி மூவெழுகால்,

படியார் அரசு களைகட்ட

பாழி யானை யம்மானை,

குடியா வண்டு கொண்டுண்ணக்

கோல நீலம் மட்டுகுக்கும்,

கடியார் புறவில் கண்ணபுரத்

தடியேன் கண்டு கொண்டேனே. 8.8.6

1724

வைய மெல்லா முடன்வணங்க

வணங்கா மன்ன னாய்த்தோன்றி,

வெய்ய சீற்றக் கடியிலங்கை

குடிகொண் டோட வெஞ்சமத்து,

செய்த வெம்போர் நம்பரனைச்

செழுந்தண் கானல் மணநாறும்,

கைதை வேலிக் கண்ணபுரத்

தடியேன் கண்டு கொண்டேனே. 8.8.7

1725

ஒற்றைக் குழையும் நாஞ்சிலும்

ஒருபால் தோன்றத் தான்தோன்றி,

வெற்றித் தொழிலார் வேல்வேந்தர்

விண்பாற்f செல்ல வெஞ்சமத்து,

செற்ற கொற்றத் தொழிலானைச்

செந்தீ மூன்றும் மில்லிருப்ப,

கற்ற மறையோர் கண்ணபுரத்

தடியேன் கண்டு கொண்டேனே. 8.8.8

1726

துவரிக் கனிவாய் நிலமங்கை

துயர்தீர்ந் துய்யப் பாரதத்துள்,

இவரித் தரசர் தடுமாற

இருள்நாள் பிறந்த அம்மானை,

உவரி யோதம் முத்துந்த

ஒருபா லொருபா லொண்செந்நெல்,

கவரி வீசும் கண்ணபுரத்

தடியேன் கண்டு கொண்டேனே. 8.8.9

1727

மீனோ டாமை கேழலரி

குறளாய் முன்னு மிராமனாய்த்

தானாய் பின்னு மிராமனாய்த்

தாமோ தரனாய்க் கற்கியும்

ஆனான் றன்னை கண்ணபுரத்

தடியேன் கலிய னொலிசெய்த

தேனா ரின்சொல் தமிழ்மாலை

செப்பப் பாவம் நில்லாவே. (2) 8.8.10

Leave a Reply