8ஆம் பத்து

திருமங்கையாழ்வார்

 

 

 

style="text-align: center;">8ஆம் பத்து 9ஆம் திருமொழி

1728

கைம்மான மதயானை யிடர்தீர்த்த கருமுகிலை

மைம்மான மணியை அணிகொள் மரகதத்தை,

எம்மானை யெம்பிரானை யீசனை யென்மனத்துள்

அம்மானை, அடியே னடைந்துய்ந்து போனேனே. (2) 8.9.1

1729

தருமான மழைமுகிலைப் பிரியாது தன்னடைந்தார்,

வருமானம் தவிர்க்கும் மணியையணியுருவில்,

திருமாலை யம்மானை அமுதத்தைக் கடற்கிடந்த

பெருமானை அடியே னடைந்துய்ந்து பிழைத்தேனே. 8.9.2

1730

விடையேழன் றடர்த்து வெகுண்டு விலங்கலுற

படையாலாழி தட்ட பரமன் பரஞ்சோதி,

மடையார் நீலம்மல்கும் வயல்சூழ் கண்ணபுரமொன்

றுடையானுக்கு அடியேன் ஒருவர்க் குரியேனோ? (2) 8.9.3

1731

மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்

புக்கானைப் புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை

தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த

அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே. (2) 8.9.4

1732

வந்தாயென் மனத்தே வந்துநீ புகுந்தபின்னை,

எந்தாய். போயறியாய் இதுவே யமையாதோ

கொந்தார் பைம்பொழில்சூழ் குடந்தைக் கிடந்துகந்த

மைந்தா உன்னையென்றும் மறவாமைப் பெற்றேனே. 8.9.5

1733

எஞ்சா வெந்நரகத் தழுந்தி நடுங்குகின்றேற்கு,

அஞ்சேலென் றடியேனை ஆட்கொள்ள வல்லானை,

நெஞ்சே நீநினையாது இறைப்பொழுதுமிருத்திகண்டாய்,

மஞ்சார் மாளிகைசூழ் வயலாலி மைந்தனையே. 8.9.6

1734

பெற்றார் பெற்றொழிந்தார் பின்னும்நின் றடியேனுக்கு,

உற்றானாய் வளர்த்து என்னுயிராகி நின்றானை,

முற்றா மாமதிகோள் விடுத்தானை யெம்மானை

எத்தால் யான்மறக்கேன் இதுசொல்லெனனேழைநெஞ்சே. 8.9.7

1735

கற்றார் பற்றறுக்கும் பிறவிப் பெருங்கடலே

பற்றா வந்தடியேன் பிறந்தேன் பிறந்தபின்னை

வற்றா நீர்வயல்சூழ் வயலாலி யம்மானைப்

பெற்றேன் பெற்றதும் பிறவாமை பெற்றேனே. 8.9.8

1736

கண்ணார் கண்ணபுரம் கடிகை கடிகமழும்

தண்ணார் தாமரைசூழ் தலைச்சங்க மேல்திசையுள்

விண்ணோர் நாண்மதியை விரிகின்ற வெஞ்சுடரை

கண்ணாரக் கண்டுகொண்டு களிக்கின்றதிங் கென்றுகொலோ. (2) 8.9.9

1737

செருநீர வேல்வலவன் கலிகன்றி மங்கையர்கோன்

கருநீர் முகில்வண்ணன் கண்ண புரத்தானை

இருநீ ரின்தமிழ் இன்னிசை மாலைகள் கொண்டுதொண்டீர்,

வருநீர் வையமுய்ய இவைபாடி யாடுமினே. (2) 8.9.10

Leave a Reply