திருமங்கையாழ்வார் சரிதம்

திருமங்கையாழ்வார்

திருமங்கையாழ்வார் சரிதம்

காவிரி நதி பாய்ந்து வளப்படுத்தும் பூமி சோழ வள நாடு. அந்த நாட்டின் பல உட்பிரிவுகளில் திருவாலி நாடு என்பதும் ஒன்று. அந்நாடு தன்னகத்தே பல ஊர்களைக் கொண்டது. அவ்வூர்களுள் சிறப்புற்றுத் திகழ்வது திருக்குறையலூர் என்ற ஊர். இந்தத் திருக்குறையலூரில் நான்காம் வர்ணத்தில் ஆலிநாடுடையார்க்கும் அவருடைய மனைவி வல்லித்திரு அம்மைக்கும், (கி.பி. 8-ம் நூற்றாண்டு) அவதரித்தார் திருமங்கையாழ்வார்.

ஆலிநாடர் சோழனின் படைத் தலைவராக இருந்தார். வீரமும் அன்பும் ஒருங்கே வாய்க்கப் பெற்றவர் அவர். ஆலிநாடர் தனக்குப் பிறந்த அந்தப் பிள்ளைக்கு நீலன் என்று பெயரிட்டு அழைத்தார். நீலன் தம் ஐந்தாம் வயது தொடங்கி, கற்க வேண்டியவற்றைக் கற்று, பெரும் புலமை பெற்றார். வடமொழியிலும் தமிழிலும் புலமை பெற்று ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நிலைபெற்று வளர்ந்தார். திருமாலடியாரான அவர், திருமாலின் திருவருளாலே, ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தார கவி என நான்கு வகைக் கவிகளையும் பாடும் திறமையும் வல்லமையும் பெற்றிருந்தார்.

வீரர் மரபில் தோன்றியவர் என்பதால், வாள், வில், வேல் முதலிய படைக் கலங்களை பயன்படுத்தி போர் செய்வதில் வல்லவராகத் திகழ்தார். யானை, தேர், குதிரை, காலாட்படை ஆகிய நான்கு சேனைகளையும் நல்ல முறையில் நடத்திச் சென்று, பகைவரை சுலபமாக வெற்றி கொள்ளும் தன்மை அவருக்கு வாய்க்கப் பெற்றிருந்தது. அவருடைய கல்வியறிவையும் திறமைகளையும் வீரத்தையும் கண்ட சோழ மன்னன் அவரைத் தன் படைத் தளபதியாக ஆக்கிக் கொண்டான்.

அந்தக் காலத்தில் நாலுகவிப் பெருமான் என்னும் சிறப்புடைய புலவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் மற்றைய புலவர்களை எல்லாம் வாதில் வென்று, புலவரேறு என்னும் பெருமையால் அகங்காரம் கொண்டிருந்தான். அவனுக்கு நீலனைப் பற்றித் தெரிய வந்தது. தன் கல்விச் செருக்கால், நீலனிடம் வாதிட்டு அவரை வாதில் வென்று காட்டிட ஆசை மிகக் கொண்டான். இந்தச் செய்தி தெரிந்து, அவரும் அந்தப் புலவனிடம் வாதிட முன்வந்தார். வாதப் போர் பலமாக நடைபெற்றது. இறுதியில் புலவன் தோல்வியைத் தழுவினான். ஆகவே தனக்கு இது வரை இட்டுவந்த நாலுகவிப் பெருமான் என்ற பட்டத்தை இனியும் தான் வைத்திருக்க விரும்பவில்லை. எனவே தன் பட்டத்தினை, நீலருக்கு இட்டு, நாலுகவிப் பெருமான் என்கிற விருதை அவருக்கு அளித்தான்.

இதையறிந்த சோழ மன்னன், நீலரை அழைத்து, அவருக்கு மேலும் விருதுகளை அளித்து, பாராட்டினான். பின்னர் நீலர் அந்தச் சோழனுக்காக போர்கள் பலவற்றை மேற்கொண்டு, எதிரிகளை ஓடஓட விரட்டி வெற்றிவாகை சூடினார். இதனால் மகிழ்ந்த சோழ மன்னன், நீலரின் வீரத்தையும் அறிவுக் கூர்மையையும் வியந்து பாராட்டி, தன்னுடைய ஆட்சியின் கீழ் இருந்த திருமங்கை என்னும் ஊரைத் தலைநகராகச் செய்து, ஆலிநாட்டுக்கு மன்னனாக்கி மகிழ்ந்தான்.

பகைவர்களுக்குக் காலன் போன்று திகழ்ந்ததால், பரகாலர் என்ற பெயரும் நீலருக்கு உண்டாயிற்று. பரகாலர் என்பதற்கு காலத்தைக் கடந்து நிற்பவர் என்னும் தத்துவ விளக்கப் பொருளும் உண்டு.

திருமங்கைக்கு நீலர் மன்னரானதும் அவரை எல்லோரும் திருமங்கை மன்னன் என்றே அழைக்கலாயினர். இவரிடம் சாயை பிடிப்பான், தாளூதுவான், தோளாவழக்கன், உயரத்தொங்குவான் முதலான அமைச்சர்களும் இருந்தார்கள். இவர் ஆடல்மா என்று பெயர்பெற்ற குதிரையில் ஏறி எங்கும் செல்வாராம்.

இப்படி இருக்கையில், சுமங்கலை என்னும் பெயர் கொண்ட தேவகன்னி ஒருத்தி, தன்னுடைய தோழியர் குழாத்துடன் இமயமலையின் வளங்களைச் சுற்றிப் பார்த்துக்கொண்டு வந்தாள். அப்போது, திருமாலின் அம்சராக எழுந்தருளியிருந்த கபில முனிவர், தன்னுடைய சீடர்களுக்குப் பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். சுமங்கலை அந்த இடத்துக்கு வந்து, இதைக் கண்ணுற்றாள். அப்போது அவருடைய சீடர்களுள் ஒருவர் விகார வடிவத்தில் இருந்ததைக் கண்டு சுமங்கலை ஏளனம் செய்தாள். அதனைக் கண்ட கபில முனிவர் பெருவருத்தமும் கோபமும் அடைந்தார். அவர் சுமங்கலையை நோக்கி, தேவ கன்னியான நீ இதே பூமியில் மானிடப் பெண்ணாகப் பிறந்து, ஒரு மனிதனின் மனைவியாக வாழக் கடவாய் என்று சபித்தார். இந்த சாப வார்த்தையைக் கேட்ட அவள் அஞ்சி நடுங்கினாள். தன்னுடைய செயலைப் பொறுத்து, தன்னை மன்னிக்குமாறு வேண்டினாள். கபில முனிவரோ அவளை நோக்கி, நீ பரகாலரின் மனைவியாகி, அவருடைய போர்க்கள வேள்வியைப் போக்கி, அவரை திருமாலின் நல்லடியாராகத் திருத்தி, அவருடன் வாழ்ந்து, அதனால் உன் குறை தீர்ந்து, உன் பொன்னாட்டை அடைவாயாக என்று அருள் புரிந்தார்.

கபில முனிவருடைய சாபத்தின்படி, சுமங்கலை திருவாலி நாட்டிலுள்ள திருநாங்கூர்ப் பொய்கையில் தோழியருடன் நீராடி, குமுத மலரைக் கொய்து விளையாடிக் கொண்டிருந்தாள். தோழியர் இவளை அங்கேயே விட்டுவிட்டு அவர்களுடைய பொன்னாட்டுக்குப் போனார்கள். சுமங்கலை குமுத மலரையே தன் தாயாகவும் பிறப்பிடமாகவும் கொண்டு, அதனருகில் ஒரு மானிடக் குழந்தையாகத் தோன்றினாள்.

அந்த நேரத்தில், திருமாலடியாரும், திருநாங்கூரில் வசித்து வருபவருமாகிய மருத்துவர் ஒருவர், அந்தப் பொய்கைக்கு நீராட வந்தார். அப்போது இந்தக் குழந்தையைக் கண்டார். சுற்றுமுற்றும் பார்த்தார். அருகில் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார். குழந்தையின் பொறுப்புக்கு யாரும் அங்கு இல்லாத காரணத்தால், அக்குழந்தையைத் தன் இல்லத்துக்கு எடுத்துச் சென்று மனைவியிடம் மகிழ்ச்சியுடன் அளித்தார். அவர்கள் இருவரும் அக்குழந்தைக்கு, குமுத மலரின் அருகில் கிடைத்ததால், குமுதவல்லி என்னும் பெயரிட்டு அழைத்தனர். அக்குழந்தையைத் தாம் பெற்றெடுத்த குழந்தையைப் போன்று செல்வ வளத்தோடு வளர்க்கலாயினர்.

இப்படி வளர்ந்து வந்த குமுதவல்லி, திருமணப் பருவம் எய்தினாள். குமுதவல்லியைப் பற்றிய செய்தி பரகாலரை எட்டியது. அவர் திருநாங்கூரிலுள்ள மருத்துவர் இல்லத்துக்குச் சென்று, அவரது வளர்ப்புப் பெண்ணாகிய குமுதவல்லியைத் தனக்குத் திருமணம் செய்து தரவேண்டும் என்று விண்ணப்பித்தார். ஆனால் குமுதவல்லியாரோ, திருவிலச்சினையும், திருநாமமும் உள்ளவர்க்கு அன்றி மற்றவர்க்கு என்னைப் பேசவிடேன் என்று மறுத்துரைத்தாள்.

இதைக்கேட்ட பரகாலர் சற்றே யோசித்தார். அவள் சொற்படியே செய்வதெனத் தீர்மானித்தார். உடனே திருநறையூரில் நம்பி திருமுன்பே சென்றார். வைணவ லட்சணங்களுக்குரிய திருவிலச்சினை தரித்தார். பன்னிரண்டு திருநாமங்களையும் சாத்திக் கொண்டு குமுதவல்லியிடம் மீண்டும் வந்தார்.

அதன் பின்னரும் குமுதவல்லியார் திருமங்கை மன்னரைப் பார்த்து, ஒரு வருட காலம் நாள்தோறும் ஆயிரத்தெட்டு ஸ்ரீவைணவர்களை அமுது செய்வித்து, அவர்களுடைய ஸ்ரீபாத தீர்த்தமும் தளிகைப் பிரசாதமும் ஏற்றுக்கொண்டு நிறைவேற்றினால், உம்மைப் பதியாக அடைவேன் என்று மொழிந்தாள்.

திருமங்கை மன்னரும் அதற்கு இசைந்து, உறுதிமொழி அளித்தார். ஆதலின் குமுதவல்லியாரும் அவரை மணம் செய்துகொள்ள இசைந்தார். அதன்பின் குமுதவல்லியாரை அவள் பெற்றோர் திருமங்கை மன்னருக்கு நாடும் ஊரும் அறிய நல்லதோர் நாளில் மணம் செய்து கொடுத்தார்கள்.

குமுதவல்லியாரைத் தமது வாழ்க்கைத் துணை ஆக்கிக் கொண்ட திருமங்கை மன்னரும், நாள்தோறும் ஆயிரத்தெட்டு ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அன்னமளித்து ஆராதித்தார். இப்படி நாள்தோறும் நடைபெறும் நல்விருந்தினை நானிலத்தோர் நயம்படப் பலருக்கும் நவின்று வந்தார்கள். இச்செய்தி சோழ மன்னனின் செவிகளுக்கும் எட்டியது.

அவ்வளவுதான்! திருமங்கை மன்னன் தனக்குத் தரவேண்டிய பகுதிப் பணம் தாமதமாவதற்கான காரணம் இதுதானோ என்று எண்ணினான். தன் அரசுக்குச் சேர வேண்டிய பகுதிப் பணம் விரைந்து வந்தாக வேண்டும் என்னும் செய்தி தாங்கிய ஓலையுடன், தன் தூதுவர்களை திருமங்கை மன்னனிடம் அனுப்பினான் சோழமன்னன்.

திருமங்கை சென்ற தூதுவர்கள் பகுதிப் பணத்தை விரைவில் தருமாறு பரகாலரை வற்புறுத்தினார்கள். பரகாலருக்குக் கடுங் கோபம் ஏற்பட்டது. விளைவு – தூதுவர்களை அடித்து விரட்டினார். அவர்கள் அஞ்சி அங்கிருந்து ஓடினார்கள். நேராகத் தம் அரசனிடம் சென்று நடந்த நிகழ்ச்சியைத் தெரிவித்தார்கள். பரகாலர் தனது ஆணையை மீறிவிட்டார் என்பதற்காகக் கோபம் கொண்ட சோழ மன்னன், தனது சேனாதிபதியை அழைத்து, பெரும் படையுடன் திருமங்கை சென்று பரகாலனை பிடித்து வருமாறு ஆணையிட்டான்.

சேனாதிபதியும் யானை, குதிரை, காலாட் படைகளுடன் சென்று பரகாலரை வளைத்துப் பிடிக்கப் போனான். மங்கை மன்னனோ தன் குதிரையின் மேலேறித் தம் படைகளுடன் வந்து, ஆரவாரத்துடன் அவர்கள்மேல் விழுந்து, சேனைகளை எல்லாம் துரத்தியோட்டிவிட்டார். சேனாதிபதி வெட்கப்பட்டு ஓடினான். இதைக் கேள்விப்பட்ட அரசன், கோபத்தால் கண்கள் சிவந்து தனது சதுரங்க சேனைகளுடன் புறப்பட்டு வந்து, பரகாலரைப் பிடிக்கும்படி தன் படை வீரர்களுக்கு உத்தரவு பிறப்பித்தான்.

படையினரும் அவ்வண்ணமே பரகாலரை வளைத்தனர். பரகாலரும் முன்புபோல வாளும் கையுமாக ஆடல்மா என்னும் தனது குதிரைமேல் ஏறி வந்தார். ஆரவாரத்துடன் எதிர்த்து வந்த படையினரைப் பாழாக்கித் துரத்த, எல்லோரும் தோற்று ஓடிவந்து சோழ மன்னன் மேல் விழுந்தார்கள். சோழனும் ஓடுகிறவர்களை சினத்துடன் நிறுத்தினான். பின் பரகாலரை படைகளின் நடுவே அகப்படும்படி வளைத்துக் கொண்டான். பரகாலரும் வீரமுடையவராய்த் தமது கையிலிருந்த வாளின் பலத்தினால் படையை அழிக்கத் தொடங்கினார்.

இதனைக் கண்ட அரசன் இவரைப் பார்த்து, நீர் எதற்கும் அஞ்சவேண்டுவதில்லை. உமது வீரம் கண்டு மகிழ்ந்தேன். நீர் செய்த தவறுகளை எல்லாம் மறந்தேன். அஞ்சாமல் என்னை நம்பி வாரும் என்று அழைத்தான். பரகாலரும் அரசன் மீதான பகைமை மறந்து உடன் சென்றார். அரசனும் பரகாலரை நோக்கி, தரவேண்டிய பகுதிப் பணத்தை தந்துவிடவேண்டும் எனவும், அதுவரையில் அமைச்சர்களின் பாதுகாவலில் பரகாவலர் இருக்க வேண்டும் எனவும் பணித்தார். அமைச்சர்களும் பரகாலரைப் பிடித்துக்கொண்டு, ஒரு தேவாலயத்தில் சிறை வைத்தனர்.

இப்படி, திருமங்கை மன்னர் அந்தக் கோயிலில் மூன்று நாட்கள் உணவின்றி சிறையிருந்தார். அந்த நேரம், திருமங்கை மன்னரது கனவில் பேரருளாளப் பெருமான் எழுந்தருளி, உமது பகுதிக்கு வரவேண்டிய பணம் நாம் தருகிறோம். காஞ்சிபுரத்துக்கு வாரும் என்று அருளினார். பரகாலரும் மறுநாள் அமைச்சர்களிடம், காஞ்சிபுரத்தில் பணம் புதைத்து வைக்கப்பட்டுள்ளது. அங்கு வந்தால் உங்கள் பகுதியைத் தருகிறேன் என்றார். அமைச்சர்கள் அதனை அரசரிடம் தெரிவித்தனர். அரசரும் இதற்கு உடன்பட்டு, தக்க காவலுடன் பரகாலரை காஞ்சிபுரத்துக்கு அனுப்பி வைத்தார்.

பலத்த காவலுடன் காஞ்சிபுரம் சென்ற பரகாலர், புதையல் பொருளைக் காணாது வருந்திக் கிடந்தார். அவருடைய வருத்தமுற்ற மனத்தை மகிழ்விக்க எண்ணிய காஞ்சி பேரருளாளப் பெருமான், அஞ்சாது நீர் அதை எடுத்துக் கொள்ளும் என்று பணம் இருக்கும் இடத்தை அடையாளமாகக் காட்டியருளினான். பேரருளாளன் காட்டிய இடத்துக்குச் சென்ற பரகாலர், அங்கே பணம் இருக்கக் கண்டு, அதை எடுத்து, கப்பம் செலுத்த வேண்டிய பணத்தைக் கொடுத்துவிட்டு, அதுபோக மீதி இருந்த பணத்தை ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு உணவளிப்பதற்காக வைத்துக் கொண்டார்.

அங்கே நடந்த நிகழ்ச்சியை அரசனுக்கு அறிவித்த அமைச்சர், அரசர் முன்பாக திருமங்கை மன்னர் தந்த கப்பப் பணத்தை வைத்தார். வேந்தனோ, காஞ்சி அருளாளப் பெருமானான வரதராஜப் பெருமாளே பணம் தந்த செய்தியைக் கேட்டு பெருவியப்படைந்தான். இவர் மனிதர்களுள் மேம்பட்ட பெருமை கொண்டவர்; அவரை மதியாமல் இப்படி நடந்துகொண்டோமே என்று வருந்தினான். காஞ்சிப் பேரருளாளன் அளித்த கப்பப் பணத்தை தனது கருவூலத்தில் சேர்க்க அவனுக்கு மனம் வரவில்லை. எனவே திருமங்கை மன்னரை அழைத்தான். அவரிடமே அப்பணத்தையும், சிறப்பாக வெகுமதிகளையும் அளித்து அவற்றை ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு உணவிட வைத்துக் கொள்ளுமாறு வேண்டினான். அதன் மூலம், ஆழ்வாரான திருமங்கை மன்னரை மூன்று தினங்கள் பட்டினி போட்ட பாவத்தைப் போக்கிக் கொண்டான்.

நாட்கள் சென்றன. ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ததீயாராதனம் குறைவற நடைபெற்று வந்தது. ஆனால், ஆழ்வாரின் கருவூலத்தில் இருந்த திரவியமோ குறைவுற்று வந்தது. ஆழ்வாரிடம் உள்ள பணம் யாவும் செலவழிந்ததும், ததீயாராதனம் தொடர்ந்து நடைபெற என்ன வழி என்று யோசிக்கலானார் திருமங்கையாழ்வார். வழிப்பறி செய்தேனும் பணம் சேர்த்து ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு உணவளிக்கும் எண்ணம் ஏற்பட்டது. அப்படியே தமக்குத் துணையாக இருந்த நால்வரோடு பொருள் மிகுந்தவரிடமிருந்து வழிப்பறி செய்து பொருள் ஈட்டி, ஸ்ரீவைஷ்ணவ அடியார்களுக்கு உணவளிக்கும் செயலை நடத்தி வந்தார்.

இப்படி இருக்கும்போது, ஒருநாள் ஆழ்வார் வழிப்பறி செய்வதற்காக, திருமணங்கொல்லையில் ஓர் அரச மரத்தில் பதுங்கியிருந்தார். ஸ்ரீவைஷ்ணவர்களுக்காகவே வழிப்பறி செய்யும் பரகாலரது எண்ணத்தை உணர்ந்த பெருமாள், அவ்வழியில் மணமக்கள் கோலம் கொண்டு தேவியுடன், எல்லா அணிகலன்களையும் அணிந்து கொண்டு, பரிவாரம் புடைசூழ பலவகைத் திரவியங்களுடன் வந்து கொண்டிருந்தார்.

இக்கூட்டத்தைக் கண்ட ஆழ்வார் மகிழ்ச்சி மிகக் கொண்டார். உருவிய வாளும் கையுமாக, தன் பரிவாரங்களுடன் அவர்களை வளைத்துக் கொண்டார். உள்ளே மணக் கோலத்தில் அமர்ந்திருந்த திவ்விய தம்பதியிடம் இருந்த அணிகலன்களை எல்லாம் கவர்ந்து கொண்டார். பின் அறுகாழி மோதிரத்தைக் கடித்து வாங்க, எம்பெருமானும் இதைக்கண்டு, நம் கலியனேஎன்று அருளிச் செய்தார்.

பின்னர் அப்படிக் கவர்ந்த அணிகலன்களை எல்லாம் மூட்டையாகக் கட்டி வைத்தார். அந்த மூட்டையை எடுக்கப் பார்க்க, அவை பெயர்க்கவும் முடியாதபடி கனத்து இருந்தது. எவ்வளவோ கனமுள்ள பெரும் பொருட்களை எல்லாம் தூக்கிய கைகளால், இந்தச் சிறு மூட்டையைத் தூக்க முடியாமல் போகவே ஆழ்வார் கொஞ்சம் அசந்து போனார். அவர் மணவாளனாக வந்த அந்த அந்தணனைப் பார்த்து, நீ மந்திரம் ஏதும் செய்தாயோ? என்று கோபத்துடன் கேட்டார். பிறகு, நீ அந்த மந்திரத்தைச் சொல்லாவிடில், இந்த வாளுக்கு இரையாவாய் என்று தம் கையில் வைத்திருந்த வாளைக் காட்டி அதிகாரத்துடன் கேட்டார். மணவாளக் கோலத்திலிருந்த எம்பெருமானும் எட்டு எழுத்தாகி, மூன்று பதமான திருமந்திரத்தை ஆழ்வாரின் வலது திருச் செவியில் உபதேசித்துக் காட்சி கொடுத்தார்.

அவ்வளவுதான்! அதுவரையில் இவருக்கு இருந்த அறியாமை விலகியது. திருமந்திர அர்த்தம் விளங்கப் பெற்ற ஆழ்வார், தாம் அறிந்த திருமந்திரத்தையும், அதற்கு உள்ளீடான ஸ்ரீமந் நாராயணனுடைய வடிவமாகிய உருவத்தையும் அருள்மாரி என்னும் பெரிய பிராட்டியின் அருளாலே நேரில் கண்டு தரிசித்து உள்ளம் களி கொண்டார்.

இதனால் உண்டான ஞானத்தினாலும், அன்பினாலும் அவர் பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் என்கிற ஆறு பிரபந்தங்களையும் அருளிச் செய்தார். நம்மாழ்வார் அருளிச் செய்த நான்கு வேதங்களின் சாரமாகிய நான்கு பிரபந்தங்களுக்கும் ஆறு அங்கமாக ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்கிற நான்கு விதமான கவிகளால் அருளிச்செய்து சிறப்புற்றார். இதனால் பரகாலருக்கு நாலுகவிப் பெருமாள் பட்டப் பெயர் இன்னும் சிறப்புற வழங்கலாயிற்று.

அதன் பிறகு அவர் திருமால் திருத்தல தரிசனம் செய்யும் அவா மிகப் பெற்றார். அப்படியே தலங்கள் தோறும் சென்று, ஆங்காங்கு எழுந்தருளியுள்ள திருமாலை வணங்கிப் பின் சோழ மண்டலத்துக்கு எழுந்தருளினார். அந்த நேரத்தில் ஆழ்வாரின் சீடர்கள், நாலுகவிப் பெருமாள் வந்தார்! நம் கலியன் வந்தார்! ஆலிநாடார் வந்தார்! அருள்மாரி வந்தார்! கொங்கு மலர்க் குழலியர்வேள் வந்தார்! மங்கை வேந்தர் வந்தார்! பரகாலர் வந்தார்! என்று விருது கூறிச் சென்றார்கள்.

அப்போது அங்கேயிருந்த சைவ சமயக் குரவர் நால்வருள் ஒருவரான திருஞானசம்பந்தரின் சீடர்கள், திருமங்கை மன்னர் நாலுகவிப் பெருமாள் என்ற விருது பெற்றவர்போலே விருது கூறல் கூடாது என்று மறுத்துத் தடுத்தனர். விஷயம் திருஞானசம்பந்தருக்குச் சென்றது. அதனால் ஆழ்வார் வெண்ணெயுண்ட மாயனை எழுந்தருளுவித்துக் கொண்டு, சம்பந்தருடன் வாதிக்கச் சென்றார். ஒரு குறளாயிருநிலம் என்ற திருமொழியை அருளிச் செய்து, தம் பெருமையெல்லாம் புலப்படும் வண்ணம் பாடலைப் பாடினார்.

ஞானசம்பந்தர் பிரான் ஆழ்வாரை நோக்கி, உமக்கு நாலுகவிப் பெருமாள் என்னும் விருது பொருந்தும், ஆதலினால் விருதூதிக் கொண்டு செல்வீராக என்று மனமுவந்து கூறினார்.

திருமங்கை மன்னர் பல தலங்கள் தோறும் சென்று தலத்து இறைவனைச் சேவித்து திருவரங்கம் வந்தார். அங்குள்ள பெரிய பெருமாளுக்கும் அழகிய மணவாளனுக்கும் விமானம், மண்டபம், திருத்தளிகை, திருமதில், கோபுரம் முதலிய தொண்டுகள் செய்ய விரும்பினார். அதற்காக நாகப்பட்டினம் சென்று பெரும் பொன்னை எடுத்து வந்தார்; அதனை விற்றுப் பெற்ற பொருளைக் கொண்டு விமானம், மண்டபம் முதலியன கட்டுவித்தார்.

இதனைக் கண்ட தொண்டரடிப்பொடி ஆழ்வார், மலர் பறிக்கும் தமது ஆயுதத்துக்கு திருமங்கை மன்னருடைய பெயர்களுள் ஒன்றான அருள்மாரி என்னும் பெயரினை இட்டு மகிழ்ந்தார்.

பின்னர் திருமங்கையாழ்வார், விமானம், மண்டபம், கோபுரம் முதலிய திருத்தொண்டுகள் செய்து அரங்க நகரைப் பொலிவுடன் திகழச் செய்தார்.

இனி அவருடைய பாசுரங்களில் இருந்து சிறிது அனுபவிப்போம̷் 0;

நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி என்ற பிரிவில் ஏறக்குறைய 1100 பாடல்கள் பாடியுள்ளார். இது போக திருநெடுந்தாண்டகம், திருக்குறுந்தாண்டகம், பெரிய திருமடல், சிறிய திருமடல், திருவெழுகூற்றிருக்கை ஆகியவற்றையும் இயற்றியுள்ளார். நாலாயிர திவ்வியப் பிரபந்தப் பாசுரங்களின் எண்ணிக்கையில் திருமங்கையாழ்வாரின் பங்கு கணிசமானது. கவித்துவமாக, இலக்கணப்படி அமைந்த பல வகைப் பாடல்களையும் இயற்றியுள்ளார். பெரும்பாலான திவ்விய தேசங்களையும் பாடியிருக்கிறார். திருவதரியாசிரமம் (தேவப் பிரயாகை), திருப்பிருதி, நைமிசாரண்யம், பத்ரிகாசிரமம் போன்ற வடநாட்டு திவ்விய தேசங்களைப் பாடியுள்ளார். அதோடு, தென்னாட்டுக் கோயில்களையும் விட்டுவைக்கவில்லை. ஊர் ஊராகச் சென்று பல்வேறு தலங்களையும் பாடியிருக்கிறார்.

திருமங்கையாழ்வாரின் முதல் பாசுரம்:

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்

பெருந்துயர் இடும்பையில் பிறந்து

கூடினேன் கூடி இளையவர் தம்மோடு

அவர்தரும் கலவியே கருதி

ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால்

உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து

நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன்

நாராயணா என்னும் நாமமே

திருமங்கையாழ்வார், தான் எப்படி நாராயண நாமத்தின் பொருளை அறிந்து கொண்டேன் என்பதை விளக்கி, அதை அடைந்த விதத்தையும் தெரிவிக்கிறார். தன் கடந்த காலத் தவறுகளைச் சொல்லி, அதற்காகத் தாம் வருந்துவதையும் தெரிவிக்கிறார். அந்த வருத்தம் தீரவே நாராயணன் தமக்கு அவனுடைய நாம மகிமையை வெளிக்காட்டி உளம் திருத்தினான் என்பதைச் சொல்கிறார்.

முதல் பத்துப் பாடல்களும் ஓம் நமோ நாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரத்தின் மகிமையைச் சொல்கின்றன. இந்த எட்டெழுத்து மந்திரப் பொருளை உணர்ந்து தெளிந்தால் உலகு தெளியும். ஆயினும் இந்த எட்டெழுத்து எப்படிப்பட்ட நன்மைகளை எல்லாம் செய்யவல்லது என்பதை ஆழ்வார் தம் அனுபவத்தின்பாற்பட்டு வெளிப்படுத்துகிறார் இப்படி…

குலந்தரும் செல்வம் தந்திடும்

அடியார் படுதுயர் ஆயினவெல்லாம்

நிலந்தரம் செய்யும் நீள் விசும்பருளும்

அருளொடு பெருநிலமளிக்கும்

வலந்தரும் மற்றும் தந்திடும்

பெற்ற தாயினும் ஆயின செய்யும்

நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்

நாராயணா என்னும் நாமம்.

நல்ல சுற்றத்தைத் தரும்; செல்வ வளத்தைத் தரும்; அடியவர்கள் படும் துயரங்களையெல்லாம் நிலந்தரஞ்செய்யும் – அதாவது தரைமட்டமாக்கி விடும்; நீள் விசும்பாகிய பரமபதத்தைக் கொடுக்கும்; அருளோடு பெருநிலமும் வலிமையும் கொடுக்கும்; மற்றெல்லாவற்றையும் தரும்; பெற்ற தாயினும் அதிகமான பரிவைத் தரும்; நல்லதே தரும் திருநாமமே நாராயணாய என்னும் திருமந்திரம்…

நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் கிட்டத்தட்ட ஒரு முழு ஆயிரம் அவருடைய பெரிய திருமொழி பரவி நிற்கிறது.

திருமங்கையாழ்வாரின் திருவெழுகூற்றிருக்கை என்பது மூன்றாவது ஆயிரமாகிய இயற்பாவில் சேர்க்கப்பட்டிருக்கிறது. எழுகூற்றிருக்கை என்பதும் கடினமான பாட்டமைப்பு. ஏழு, கூற்று, இருக்கை என்று பிரிப்பார்கள். ஏழு அறையாக்கி சிறுமிகளின் பாண்டியாட்டம் போல கட்டம் வைத்து புகுந்து வௌதப்படும் அமைப்பு. ஒன்றிலிருந்து ஏழு வரை ஏறியும் இறங்கியும் சொற்கள் அமைக்கப்படும். இதைச் சித்திரக் கவி வகையிலும் சேர்ப்பார்கள்.

திருமங்கையாழ்வாரின் எழுகூற்றிருக்கை 46 அடிகள் கொண்டது. நிலைமண்டில ஆசிரியப்பா வகையைச் சேர்ந்தது. இதை, தேர் வடிவத்தில் கோலம் போல எழுத முடியும். ரதபந்தம் என்று இதற்குப் பெயர்.

தமிழில் அகத்துறை நூல்களில் மடல் ஒரு வகை. இதை பக்தி இலக்கியத்தில் முதலில் பயன்படுத்தியவர் திருமங்கையாழ்வார். சங்க இலக்கியங்கள் மடல் என்று பெரும்பாலும் பனை மடலையே குறிக்கும். விரும்பிய பெண்ணை அடைய முடியாத நிலையில் மடலேறியாவது அவளைப் பெறுவேன் என்று பனை மடல்களால் ஆன குதிரை வடிவம் அமைத்து ஊர் நடுவே காதலன் தோன்றிப் பிடிவாதம் செய்து அடையும் முரட்டுக் காதல் வகை இது. அவன் மேல் இரக்கம் கொண்டு பெண்ணைப் பெற்றவர்கள் திருமணத்துக்கு சம்மதிப்பார்களாம். இந்த வழக்கத்தை மாற்றி மென்மையாக்கிய பெருமை திருமங்கையாழ்வாருக்கு உரியது.

தான் ஒரு ஆண் என்றதால், தன் தன்மைக்கு ஏற்ப மடல் ஏறத் துணிந்தார் ஆழ்வார். ஆனால் உலகில் ஆண் என்ற புருஷாகாரம் பகவான் ஸ்ரீ விஷ்ணுவுக்கே உரியது என்று புருஷ சூக்தம் புகல்வதால், பகவானைத் தவிர அனைவரும் பெண்களே. இதையே தன் சிறிய திருமடலுக்கும் பெரிய திருமடலுக்கும் மூலமாகக் கொள்கிறார் ஆழ்வார்.

பெண்கள் மடலேறுதல் தகாது என்று இலக்கணம் சொன்னபோதும், தன்னை ஒரு பெண்ணாக எண்ணி, திருமால் மீது காதல் கொண்ட பெண், அவனை அடைய முடியாத நிலையில் மடல் ஏறத் துணிந்ததாகப் பாடுகிறார்.

அன்ன அறத்தின் பயனாவது?, ஒண்பொருளும்

அன்ன திறத்ததே ஆதலால், – காமத்தின்

மன்னும் வழிமுறையே நிற்றும் நாம் மானோக்கின்

அன்ன நடையார் அலரேச ஆடவர்மேல்,

மன்னும் மடலூரார் என்பதோர் வாசகமும்,

தென்னுரையில் கேட்டறிவதுண்டு, அதனை யாம் தெளியோம்,

மன்னும் வடநெறியே வேண்டினோம்- வேண்டாதார்

தென்னன் பொதியில் செழுஞ் சந்தனக் குழம்பின்,

அன்னதோர் தன்மை அறியாதார், – ஆயன்வேய்

இன்னிசை ஓசைக்கு இரங்காதார், மால்விடையின்

மன்னும் மணிபுலம்ப வாடாதார், – பெண்ணைமேல்

பின்னுமவ் வன்றில் பெடைவாய்ச் சிறுகுரலுக்கு,

உன்னி உடலுருகி நையாதார், … –

அன்ன நடையார் அலரேச ஆடவர் மேல் மன்னு மடலூரார் என்பதோர் வாசகமும் தென்னுரையில் கேட்டதுண்டு அதனை யாம் தெளியோம். – என்றதில், பெண்கள் வதந்தி பரவவேண்டும் என்பதற்காக, ஆண்களுக்காக மடல் ஏற மாட்டார்கள் என்று தமிழ் நூல்களில் (தென்னுரை) கேட்டதுண்டு; யாம் தெரிந்துள்ளோம் என்று தெரிந்திருந்தும் பாடுகிறார்.

திருமங்கையாழ்வார் காலத்துக்கு (8-ம் நூற்றாண்டு) முன்பும் பெண்கள் மடலேறுவதாக சில குறிப்புகள் கலித்தொகை போன்ற சங்க நூல்களில் உள்ளன. ஆனால் அவை, காதலன் கிடைக்கவில்லை என்றால் பெண்ணாகிய நான் சமூக ஒழுங்கை மீறி மடலூர்ந்து வருவேன் என்று அடிபணிய வைக்கும் வகையில் உள்ளன. இங்கும் அதுபோல், கண்ணன் கிடைத்திலன் என்பதன் காரணத்தால் திருமங்கையாழ்வார் பெண்ணாகி மடலேறினார் என்று தெளியலாம்.

ஆழ்வார்களிலேயே மிக அதிக திருத்தலங்களுக்குச் சென்று, ஊர் ஊராகச் சென்று தரிசித்த்ப் பாடியவர் திருமங்கையாழ்வார்தான். இந்த ஆழ்வாரின் பாடல்கள் நம் ஆலயங்களின் பழைமையை நிரூபிக்கும் சரித்திரச் சான்றுகள்.

திருமங்கையாழ்வாரின் வாள் வீச்சைப் போன்றது அவரது கவிதை வீச்சு! இதை, வேறு எவரிடமும் காண முடியாது. இலக்கண வகைகள் பலவற்றையும் முயன்று அருமையான கவிதைகள் படைத்தார். பல கோவில்களைச் செப்பனிடத் திருப்பணிகள் செய்வித்தார்.

எல்லாவற்றையும் விட, கம்பீரமான, முரட்டு பக்தியை இந்த மண்ணில் விதைத்தவர் திருமங்கையாழ்வார்.

திருமங்கையாழ்வார் வாழி திருநாமம்

கலந்த திருக்கார்த்திகையில் கார்த்திகை வந்தோன் வாழியே

காசினியில் குறையலூர்க் காவலோன் வாழியே

நலந்திகழ் ஆயிரத்துஎண்பத்துநாலு உரைத்தான் வாழியே

நாலைந்தும் ஆறுஐந்தும் நமக்கு உரைத்தான் வாழியே

இலங்கு எழுகூற்றிருக்கை இருமடல் ஈந்தான் வாழியே

இம்மூன்றில் இரு நூற்று இருபத்தேழு ஈந்தான் வாழியே

வலந்திகழும் குமுதவல்லி மணவாளன் வாழியே

வாட்கலியன் பரகாலன் மங்கையர்கோன் வாழியே{jcomments on}

Leave a Reply