2ஆம் பத்து

திருமங்கையாழ்வார்

2ஆம் பத்து 9ஆம் திருமொழி

1128

சொல்லுவன் சொற்பொருள் தானவை யாய்ச்சுவை

யூறொலி நாற்றமும் தோற்றமுமாய்,

நல்லரன் நான்முகன் நாரண னுக்கிடந்

தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி,

பல்லவன் வில்லவ னென்றுல கில்பல

ராய்ப்பல வேந்தர் வணங்குகழற்f

பல்லவன், மல்லையர் கோன்பணிநத பர

மேச்சுர விண்ணக ரமதுவே. (2) 2.9.1

 

1129

கார்மன்னு நீள்விசும் பும்கட லும்சுட

ரும்நில னும்மலை யும்,தன்னுந்தித்

தார்மன்னு தாமரைக் கண்ணனி டம்தட

மாமதிள் சூழ்ந்தழ காயகச்சி,

தேர்மன்னு தென்னவ னைமுனை யில்செரு

வில்திறல் வாட்டிய திண்சிலையோன்,

பார்மன்னு பல்லவர் கோன்பணிந்த பர

மேச்சுர விண்ணக ரமதுவே. 2.9.2

 

1130

உரந்தரு மெல்லணைப் பள்ளிகொண் டானொரு

கால்முன்னம் மாவுரு வாய்க்கடலுள்,

வரந்தரும் மாமணி வண்ணனி டம்மணி

மாடங்கள் சூழ்ந்தழ காயகச்சி,

நிரந்தவர் மண்ணையில் புண்ணுகர் வேல்நெடு

வாயி லுகச்செரு வில்முனநாள்,

பரந்தவன் பல்லவர் கோன்பணிந் தபர

மேச்சுர விண்ணக ரமதுவே. 2.9.3

 

1131

அண்டமு மெண்டிசை யும்நில னுமலை

நீரொடு வானெரி கால்முதலா

உண்டவன், எந்தைபி ரானதி டமொளி

மாடங்கள் சூந்தழ காயகச்சி,

விண்டவ ரிண்டைக்கு ழாமுட னேவிரைந்

தாரிரி யச்செரு வில்முனைந்து,

பண்டொரு கால்வளைத் தான்பணிந் தபர

மேச்சுர விண்ணக ரமதுவே. 2.9.4

 

1132

தூம்புடைத் திண்கைவன் தாள்களிற் றின்துயர்

தீர்த்தர வம்வெருவ,முனநாள்

பூம்புனல் பொய்கைபுக் கானவ னுக்கிடந்

தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி,

தேம்பொழில் குன்றெயில் தென்னவ னைத்திசைப்

பச்செரு மேல்வியந் தன்றுசென்ற,

பாம்புடைப் பல்லவர் கோன்பணிந் தபர

மேச்சுர விண்ணக ரமதுவே. 2.9.5

 

1133

திண்படைக் கோளரி யினுரு வாய்த்திற

லோனக லம்செரு வில்முனநாள்,

புண்படப் போழ்ந்த பிரானதி டம்பொரு

மாடங்கள் சூழ்ந்தழ காயகச்சி,

வெண்குடை நீழல்செங் கோல்நடப் பவிடை

வெல்கொடி வேற்fபடை முன்னுயர்த்த,

பண்புடைப் பல்லவர் கோன்பணிந் தபர

மேச்சுர விண்ணக ரமதுவே. 2.9.6

 

1134

இலகிய நீண்முடி மாவலி தன்பெரு

வேள்வியில் மாணுரு வாய்முனநாள்,

சலமொடு மாநிலங் கொண்டவ னுக்கிடந்

தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி,

உலகுடை மன்னவன் தென்னவ னைக்கன்னி

மாமதிள் சூழ்கரு வூர்வெருவ,

பலபடை சாயவென் றான்பணிந் தபர

மேச்சுர விண்ணக ரமதுவே. 2.9.7

 

1135

குடைத்திறல் மன்னவ னாயொரு கால்குரங்

கைப்படை யா,மலை யால்கடலை

அடைத்தவ னெந்தைபி ரானதி டம்மணி

மாடங்கள் சூழ்ந்தழ காயகச்சி,

விடைத்திறல் வில்லவன் நென்மெலி யில்வெரு

வச்செரு வேல்வலங் கைப்பிடித்த,

படைத்திறல் பல்லவர் கோன்பணிந் தபர

மேச்சுர விண்ணக ரமதுவே. 2.9.8

 

1136

பிறையுடை வாணுதல் பின்னை திறத்து

முன்னொரு கால்செரு வில்லுருமின்,

மறையுடை மால்விடை யேழடர்த் தாற்கிடந்

தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி,

கறையுடை வாள்மற மன்னர்க்கெ டக்கடல்

போல முழங்கும் குரல்கடுவாய்,

பறையுடைப் பல்லவர் கோன்பணிந் தபர

மேச்சுர விண்ணக ரமதுவே. 2.9.9

 

1137

பார்மன்னு தொல்புகழ்ப் பல்லவர் கோன்பணிந்

தபர மேச்சுர விண்ணகர்மேல்,

கார்மன்னு நீள்வயல் மங்கையர் தந்தலை

வன்கலி கன்றிகுன் றாதுரைத்த,

சீர்மன்னு செந்தமிழ் மாலைவல் லார்த்திரு

மாமகள் தன்னரு ளால்,உலகில்

தேர்மன்ன ராயொலி மாகடல் சூழ்செழு

நீருல காண்டு திகழ்வர்களே. (2) 2.9.10

Leave a Reply