வடக்கே காசி, தெற்கே தென்காசி, நடுவில் சிவகாசி ஆகிய மூன்றும் சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது. சிவகாசியில் காசி விஸ்வநாதர் கோவில் இருக்கிறது. சிவன் காசியில் இருந்து வந்து தங்கிய இடம் என்பதால், இந்த திருத்தலம் ‘சிவன் காசி’ என்று அழைக்கப்பட்டதாகவும், அதுவே நாளடைவில் ‘சிவகாசி’ என்று உருப்பெற்றதாகவும் கூறப்படுகிறது.
பொதிகை மலைப் பகுதியில் உள்ள தென்காசியில் சிவன் கோவில் ஒன்றைக் கட்டினான் அரிகேசரி பராங்குச மன்னன். அங்கு பிரதிஷ்டை செய்ய காசியில் இருந்து சிவலிங்கம் ஒன்றைக் கொண்டு வர, தன் மனைவியுடன் சென்றான். கங்கையில் புனித நீராடி ஒரு காராம் பசு மீது லிங்கத்தை ஏற்றிக்கொண்டு தென்காசி நோக்கி சென்றான்.
பலநாள் பயணம் செய்து வரும் வழியில், தற்போது சிவகாசி நகரம் உள்ள இடத்தில் தங்கினான். அப்போது சிவகாசி வில்வ வனக் காடாக இருந்தது. மறுநாள் அரசனின் மனைவிக்கு பயணம் செய்ய முடியாதபடி உடல்நிலை மோசமானது. உடன் வந்த காராம் பசுவும், மன்னனுடன் வர மறுத்தது. இதனால் சிவலிங்கத்தை தென்காசிக்கு கொண்டு செல்ல முடியாத நிலை உருவானது.
இதையடுத்து மன்னன், காசியில் இருந்து கொண்டு வந்த சிவலிங்கத்தை வில்வ வனக் காட்டிலேயே பிரதிஷ்டை செய்தான். அந்த சிவலிங்கமே காசி விஸ்வ நாதர் என்று அழைக்கப்படுகிறது. அரிகேசரி பராங்குச மன்னனுக்குப் பின் ஆட்சிக்கு வந்த பாண்டிய மன்னர்கள், இந்தக் கோவிலில் மண்டபங்கள், பிரகாரம், தீர்த்தம், சுற்றுமதில், ரத வீதிகளை அமைத்து திருப்பணிகளைச் செய்தனர்.
இந்துக்கள் அனைவரும் தன் வாழ்வில் ஒரு நாளேனும் காசி யாத்திரை சென்று வர வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்கள். ஆனால் இன்றைய நவீன வசதி படைத்த காலத்திலும் கூட பலரால் காசிக்கு சென்று வர முடிவதில்லை. அப்படிப்பட்டவர்கள், சிவகாசியில் உள்ள காசி விஸ்வநாதரை வணங்கி வழிபட்டாலே போதுமானது. காசியில் வழிபட்ட பலனைப் பெறலாம்.
இந்த ஆலயத்தில் காசி விஸ்வநாதருடன், விசாலாட்சி அம்மனும் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இறைவனையும், இறைவியையும் சேர்த்து வணங்கினால் மன அமைதி கிடைக்கும். பவுர்ணமி, சங்கடஹர சதுர்த்தி மற்றும் பிரதோஷ நாட்களில் இந்த ஆலயத்தில் சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன. சிவகாசியில் கோவிலைக் கட்டிய பராங்குச மன்னன், தன் தவ வலிமையில் ஆகாய மார்க்கமாகச் செல்லும் ஆற்றலைப் பெற்றதாக தல புராணம் தெரிவிக்கிறது. துறவு நிலைக்குப் பின்னர், மன்னன் பராசரர் என்று அழைக்கப்பட்டான்.
தினமும் ஆகாய மார்க்கமாகச் சென்று, காசி விஸ்வநாதரை தரிசனம் செய்து விட்டு, திரும்பும் வழியில் சிவகாசி விஸ்வநாதரையும் வணங்கி விட்டு, பின்னர் தென்காசி செல்வதை பராசரர் வழக்கமாக வைத்திருந்தார். விமானப் பயணம் மேற்கொள்பவர்கள், வெளிநாடு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள், தொடர்ந்து 11 வாரங்கள் சிவகாசி காசி விஸ்வநாதரை வணங்கினால், அவர்களின் பிரார்த்தனை நிறைவேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
சிவகாசிக்கு பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, பல ஊர்களைச் சேர்ந்த வணிகர்கள் வியாபாரம் தொடர்பாக வந்து போனார்கள். அவர்கள் இங்குள்ள விஸ்வநாத சுவாமியை வழிபாடு செய்ய தவறுவதில்லை. அவர்களின் தொழில் வளம் பெருக, இந்த இறைவனே காரணம் என்பது அவர்களின் நம்பிக்கை. இன்றும் தொழில் வளம் பெருக, வணிகர்கள் பலரும் விஸ்வநாதரை 11 வாரம் தொடர்ச்சியாக வழிபட்டு சிறப்பு பெற்று வருகின்றனர்.
இந்த ஆலயத்தில் துர்க்கை அம்மன், வள்ளி- தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான், விநாயகர், நடராஜர், மீனாட்சி அம்மன், வீரபத்திரர், பைரவர், தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு தனித் தனி சன்னிதிகள் உள்ளன.