2ஆம் பத்து

திருமங்கையாழ்வார்

 

 

 

2ஆம் பத்து 3ஆம் திருமொழி

1068

விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும்

வேழமும் பாகனும் வீழ,

செற்றவன் றன்னை, புரமெரி செய்த

சிவனுறு துயர்களை தேவை,

பற்றலர் வீயக் கோல்கையில் கொண்டு

பார்த்தன்றன் தேர்முன்நின் றானை,

சிற்றவை பணியால் முடிதுறந் தானைத்

திருவல்லிக் கேணிக்கண் டேனே. (2) 2.3.1

 

1069

வேதத்தை வேதத் தின்சுவைப் பயனை

விழுமிய முனிவர்கள் விழுங்கும்,

கோதிலின் கனியை நந்தனார் களிற்றைக்

குவலயத் தோர்தொழு தேத்தும்,

ஆதியை யமுதை யென்னை யாளுடை

அப்பனை ஒப்பவ ரில்லா

மாதர்கள் வாழும், மாடமா மயிலைத்

திருவல்லிக் கேணிக்கண் டேனே. (2) 2.3.2

 

1070

வஞ்சனை செய்யத் தாயுரு வாகி

வந்தபே யலறிமண் சேர,

நஞ்சமர் முலையூ டுயிர்செக வுண்ட

நாதனைத் தானவர் கூற்றை,

விஞ்சைவா னவர்சா ரணர்சித்தர் வியந்து

துதிசெய்யப் பெண்ணுரு வாகி,

அஞ்சுவை யமுத மன்றளித் தானைத்

திருவல்லிக் கேணிக்கண் டேனே. 2.3.3

 

1071

இந்திர னுக்கென் றாயர்க ளெடுத்த

எழில்விழ வில்பழ நடைசெய்,

மந்திர விதியில் பூசனை பெறாது

மழைபொழிந் திடத்தளர்ந்து, ஆயர்

அந்தமோ டினவா நிரைதள ராமல்

எம்பெரு மானரு ளென்ன,

அந்தமில் வரையால் மழைதடுத் தானைத்

திருவல்லிக் கேணிக்கண் டேனே. 2.3.4

 

1072

இந்துணைப் பதுமத் தலர்மகள் தனக்கும்

இன்பன்நற் புவிதனக் கிறைவன்,

தந்துணை யாயர் பாவைநப் பின்னை

தனக்கிறை மற்றையோர்க் கெல்லாம்

வன்துணை, பஞ்ச பாண்டவர்க் காகி

வாயுரை தூதுசென் றியங்கும்

என்துணை, எந்தை தந்தைதம் மானைத்

திருவல்லிக் கேணிக்கண் டேனே. 2.3.5

 

1073

அந்தகன் சிறுவ னரசர்த்த மரசற்

கிளையவ னணியிழை யைச்சென்று,

எந்தமக் குரிமை செய் எனத் தரியாது

எம்பெரு மானருள் என்ன,

சந்தமல் குழலாள் அலக்கண்நூற் றுவர்த்தம்

பெண்டிரு மெய்திநூ லிழப்ப,

இந்திரன் சிறுவன் தேர்முன்நின் றானைத்

திருவல்லிக் கேணிக்கண் டேனே. 2.3.6

 

1074

பரதனும் தம்பி சத்துருக் கனன்னும்

இலக்கும னோடுமை திலியும்

இரவுநன் பகலும் துதிசெய்ய நின்ற

இராவணாந் தகனையெம் மானை,

குரவமே கமழும் குளிர்ப்பொழி லூடு

குயிலொடு மயில்கள்நின் றால,

இரவியின் கதிர்கள் நுழைதல்செய் தறியாத்

திருவல்லிக் கேணிக்கண் டேனே. (2) 2.3.7

 

1075

பள்ளியி லோதி வந்ததன் சிறுவன்

வாயிலோ ராயிர நாமம்,

ஒள்ளிய வாகிப் போதவாங் கதனுக்

கொன்றுமோர் பொறுப்பில னாகி,

பிள்ளையைச் சீறி வெகுண்டுதூண் புடைப்பப்

பிறையெயிற் றனல்விழிப் பேழ்வாய்,

தெள்ளிய சிங்க மாகிய தேவைத்

திருவல்லிக் கேணிக்கண் டேனே. (2) 2.3.8

 

1076

மீனமர் பொய்கை நாண்மலர் கொய்வான்

வேட்கையி னோடுசென் றிழிந்த,

கானமர் வேழம் கையெடுத் தலறக்

கராவதன் காலினைக் கதுவ,

ஆனையின் துயரம் தீரப்புள் ளூர்ந்து

சென்றுநின் றாழிதொட் டானை,

தேனமர் சோலை மாடமா மயிலைத்

திருவல்லிக் கேணிக்கண் டேனே. (2) 2.3.9

 

1077

மன்னுதண் பொழிலும் வாவியும் மதிளும்

மாடமா ளிகையும்மண் டபமும்,

தென்னன்தொண் டையர்க்கோன் செய்தநன்மயிலைத்

திருவல்லிக் கேணிநின் றானை,

கன்னிநன் மாட மங்கையர் தலைவன்

காமரு சீர்க்கலி கன்றி,

சொன்னசொன் மாலை பத்துடன் வல்லார்

சுகமினி தாள்வர்வா னுலகே. (2) 2.3.10

Leave a Reply