2ஆம் பத்து

திருமங்கையாழ்வார்

 

 

2ஆம் பத்து 5ஆம் திருமொழி

1088

பாராய துண்டுமிழ்ந்த பவளத்தூணைப்

பாடுகடலி லமுதத்தைப் பரிவாய்கீண்ட

சீரானை, எம்மானைத் தொண்டர்தங்கள்

சிந்தையுள்ளே முளைத்தெழுந்த தீங்கரும்பினை,

போரானைக் கொம்பொசித்த போரேற்றினைப்

புணர்மருத மிறநடந்த பொற்குன்றினை,

காரானை யிடர்க்கடிந்த கற்பகத்தைக்

கண்டதுநான் கடல்மல்லைத் தலசயனத்தே. (2) 2.5.1

 

1089

பூண்டவத்தம் பிறர்க்கடைந்து தொண்டுபட்டுப்

பொய்ந்_லை மெய்ந்_லென் றென்றுமோதி

மாண்டு,அவத்தம் போகாதே வம்மினெந்தை

என்வணங்கப் படுவானை, கணங்களேத்தும்

நீண்டவத்தைக் கருமுகிலை எம்மான்தன்னை

நின்றவூர் நித்திலத்தைத் தொத்தார்சோலை,

காண்டவத்தைக் கனலெரிவாய்ப் பெய்வித்தானைக்

கண்டதுநான் கடல்மல்லைத் தலசயனத்தே. (2) 2.5.2

 

1090

உடம்புருவில் மூன்றொறாய் மூர்த்திவேறாய்

உலகுய்ய நின்றானை,அன்றுபேய்ச்சி

விடம்பருகு வித்தகனைக் கன்றுமேய்த்து

விளையாட வல்லானை வரைமீகானில்,

தடம்பருகு கருமுகிலைத் தஞ்சைக்கோயில்

தவநெறிக்கோர் பெருநெறியை வையங்காக்கும்,

கடும்பரிமேல் கற்கியைநான்கண்டுகொண்டேன்

கடிபொழில்சூழ் கடன்fமல்லைத் தலசயனத்தே. 2.5.3

 

1091

பேய்த்தாயை முலையுண்ட பிள்ளைதன்னைப்

பிணைமருப்பில் கருங்களிற்றைப் பிணைமான்னோக்கின்,

ஆய்த்தாயர் தயிர்வெண்ணெ யமர்ந்தகோவை

அந்தணர்தம் அமுதத்தைக் குரவைமுன்னே

கோத்தானை, குடமாடு கூத்தன்றன்னைக்

கோகுலங்கள் தளராமல் குன்றமேந்திக்

காத்தானை, எம்மானைக் கண்டுகொண்டேன்

கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. 2.5.4

 

1092

பாய்ந்தானைத் திரிசகடம் பாறிவீழப்

பாலகனா யாலிலையில் பள்ளியின்பம்

ஏய்ந்தானை, இலங்கொளிசேர் மணிக்குன்றன்ன

ஈரிரண்டு மால்வரைத்தோ ளெம்மான்றன்னை,

தோய்ந்தானை நிலமகள்தோள் தூதிற்சென்றப்

பொய்யறைவாய்ப் புகப்பெய்த மல்லர்மங்கக்

காய்த்தானை, எம்மானைக் கண்டுகொண்டேன்

கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. 2.5.5

 

1093

கிடந்தானைத் தடங்கடலுள் பணங்கள்மேவிக்

கிளர்ப்பொறிய மறிதிரிய வதனின்பின்னே

படர்ந்தானைப், படுமதத்த களிற்றின்கொம்பு

பறித்தானைப் பாரிடத்தை எயிறுகீற

இடந்தானை, வளைமருப்பி னேனமாகி

இருநிலனும் பெருவிசும்பு மெய்தாவண்ணம்

கடந்தானை, எம்மானைக் கண்டுகொண்டேன்

கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. 2.5.6

 

1094

பேணாத வலியரக்கர் மெலியவன்று

பெருவரைத்தோ ளிறநெரித்தன் றவுணர்க்கோனை,

பூணாகம் பிளவெடுத்த போர்வல்லோனைப்

பொருகடலுள் துயிலமர்ந்த புள்ளூர்தியை

ஊணாகப் பேய்முலைநஞ் சுண்டான் தன்னை

உள்ளுவா ருள்ளத்தே யுறைகின்றானை,

காணாது திரிதருவேன் கண்டுகொண்டேன்

கடிபொழில்சூழ் கடன்fமல்லைத் தலசயனத்தே. 2.5.7

 

1095

பெண்ணாகி யின்னமுதம் வஞ்சித்தானைப்

பிறையெயிற்றன் றடலரியாய்ப் பெருகினானை,

தண்ணார்ந்த வார்ப்புனல்சூழ் மெய்யமென்னும்

தடவரைமேல் கிடந்தானைப் பணங்கள்மேவி,

என்ணானை யெண்ணிறந்த புகழினானை

இலங்கொளிசே ரரவிந்தம் போன்றுநீண்ட

கண்ணானை, கண்ணாரக் கண்டுகொண்டேன்

கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. 2.5.8

 

1096

தொண்டாயர் தாம்பரவு மடியினானைப்

படிகடந்த தாளாளற் காளாயுய்தல்

விண்டானை, தென்னிலங்கை யரக்கர்வேந்தை

விலங்குண்ண வலங்கைவாய்ச் சரங்களாண்டு,

பண்டாய வேதங்கள் நான்கும்ஐந்து

வேள்விகளும் கேள்வியோ டங்கமாறும்

கண்டானை, தொண்டனேன் கண்டுகொண்டேன்

கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. 2.5.9

 

1097

படநாகத் தணைக்கிடந்தன் றவுணர்கோனைப்

படவெகுண்டு மருதிடைப்போய்ப் பழனவேலி,

தடமார்ந்த கடல்மல்லைத் தலசயனத்துத்

தாமரைக்கண் துயிலமர்ந்த தலைவன்தன்னை,

கடமாரும் கருங்களிறு வல்லான்வெல்போர்க்

கலிகன்றி யொலிசெய்த இன்பப்பாடல்,

திடமாக விவையைந்து மைந்தும்வல்லார்

தீவினையை முதலரிய வல்லார்தாமே. (2) 2.5.10

Leave a Reply