e0af8d-e0aeb5e0ae9e.jpg" style="display: block; margin: 1em auto">
திருப்புகழ்க் கதைகள் 133
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
வஞ்சத்துடன் ஒரு…
திருச்செந்தூர் திருப்புகழ்
அருணகிரிநாதர் அருளியுள்ள தொண்ணூற்றி ஆறாவது திருப்புகழ் ‘வஞ்சத்துடன் ஒரு’ எனத் தொடங்கும் திருச்செந்தூர் தலத்துத் திருப்புகழாகும். “பிரமனைச் சிறை செய்த செந்திற்குமரா, இயமன் வரும் நாளில் வந்து தேவரீரது திருவடி இணையைத் தந்தருள வேண்டும்” என அருணகிரிநாதர் முருகப் பெருமானை இப்பாடலில் வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.
வஞ்சத் துடனொரு நெஞ்சிற் பலநினை
வஞ்சிக் கொடியிடை …… மடவாரும்
வந்திப் புதல்வரும் அந்திக் கிளைஞரு
மண்டிக் கதறிடு …… வகைகூர
அஞ்சக் கலைபடு பஞ்சிப் புழுவுடல்
அங்கிக் கிரையென …… வுடன்மேவ
அண்டிப் பயமுற வென்றிச் சமன்வரும்
அன்றைக் கடியிணை …… தரவேணும்
கஞ்சப் பிரமனை அஞ்சத் துயர்செய்து
கன்றச் சிறையிடு …… மயில்வீரா
கண்டொத் தனமொழி அண்டத் திருமயில்
கண்டத் தழகிய …… திருமார்பா
செஞ்சொற் புலவர்கள் சங்கத் தமிழ்தெரி
செந்திற் பதிநக …… ருறைவோனே
செம்பொற் குலவட குன்றைக் கடலிடை
சிந்தப் பொரவல …… பெருமாளே.
இத்திருப்புகழின் பொருளாவது – தாமரை மலரில் உறைகின்ற பிரமன் அஞ்சுமாறு அவனுக்குத் துயர் புரிந்து அவன் மனம் நோவச் சிறையில் அடைத்த வேலை ஏந்திய வீர மூர்த்தியே. கற்கண்டை ஒத்த இனிய மொழியையுடைய தேவமாதாகிய அழகிய மயில் போன்ற தெய்வயானையம்மையின் கண்பார்வை பாய்கின்ற திருமார்பினரே.
செவ்விய சொற்களையுடைய புலவர்களின் கூட்டம் புகல்கின்ற தமிழைச் சூடிக்கொண்டு செந்திலம்பதி என்ற திருநகரில் உறைகின்றவரே. செம்பொன் நிறத்துடன் வடக்கே நின்ற கிரவுஞ்சமலைக் கடலில் சிந்தி அழியுமாறு போர் புரிவதில் வல்ல பெருமிதம் உடையவரே.
வஞ்சனையுடன் நெஞ்சில் பல நினைவுகளுடன் கூடிய வஞ்சிக்கொடி போன்ற இடையுடைய பெண்களும், வணங்குகின்ற மைந்தர்களும், நெருங்கிய சுற்றத்தார்களும் ஒன்று பட்டுக் கதறுகின்ற செயல் அதிகப்படவும், உறுப்புக்கள் பிரியும்படியான பஞ்சு போன்ற இந்தப் புழுத்த உடம்பு நெருப்புக்கு இரையாகும்படி உடனே செல்லவும், நெருங்கி அஞ்சுமாறும் வெற்றியை உடைய இயமன் வருகின்ற அந்நாளில், உமது இரு திருவடிகளைத் தந்தருளவேண்டும். இத்திருப்புகழில் இடம்பெறும்
செஞ்சொற் புலவர்கள் சங்கத் தமிழ்தெரி
செந்திற் பதிநக …… ருறைவோனே
என்ற வரிகளில் சங்க இலக்கியங்களில்கூட திருச்செந்தூர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளதை அருணகிரியார் குறிப்பிடுகிறார். செஞ்சொற்களை உடைய சங்கப் புலவர்கள் திருச்செந்தூரைச் சிறப்பித்துப் பாடியிருக்கிறார்கள்.
“உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச் சீரலைவாய்”என நக்கீரரும், “திருமணி விளக்கின் அலைவாய்ச் செருமிகு சேஎய்”எனப் பரணரும், “வெண்டலைப் புணரி அலைக்குஞ் செந்தில் நெடுவேள் நிலைஇய காமர் வியன்துறை”என மதுரை மருதன் இளநாகனாரும், “நெடுவேல் திகழ்பூண் முருகன் தீம்புனல் அலைவாய்”எனத் தொல்காப்பியரும், “சீர்கெழு செந்திலும் நீங்கா இறைவன்”ஏன இளங்கோவடிகளும் பாடியுள்ளனர்.
திருப்புகழ்க் கதைகள்: வஞ்சத்துடன் ஒரு… திருச்செந்தூர்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.