திருமாலை

தொண்டரடிப்பொடியார்

892:

பணிவினால் மனம தொன்றிப் பவளவா யரங்க னார்க்கு,
துணிவினால் வாழ மாட்டாத் தொல்லைநெஞ் சே.நீ சொல்லாய்,
அணியனார் செம்பொ னாய அருவரை யனைய கோயில்,

மணியனார் கிடந்த வாற்றை மனத்தினால் நினைக்க லாமே? (21)

893 :
பேசிற்றே பேச லல்லால் பெருமையொன் றுணர லாகாது,
ஆசற்றார் தங்கட் கல்லால் அறியலா வானு மல்லன்,
மாசற்றார் மனத்து ளானை வணங்கிநா மிருப்ப தல்லால்,
பேசத்தா னாவ துண்டோ ? பேதைநெஞ் சே.நீ சொல்லாய். (22)

894:
கங்கயிற் புனித மாய காவிரி நடுவு பாட்டு,
பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழி லரங்கந் தன்னுள்,
எங்கள்மா லிறைவ னீசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்,
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையே னேழை யேனே. (23)

895:
வெள்ளநீர் பரந்து பாயும் விரிபொழி லரங்கந் தன்னுள்,
கள்ளனார் கிடந்த வாறும் கமலநன் முகமும் கண்டு
உள்ளமே. வலியை போலும் ஒருவனென் றுணர மாட்டாய்,
கள்ளமே காதல் செய்துன் கள்ளத்தே கழிக்கின் றாயே. (24)

896:
குளித்துமூன் றனலை யோம்பும் குறிகொளந் தணமை தன்னை,
ஒளித்திட்டே னென்க ணில்லை நின்கணும் பத்த னல்லேன்,
களிப்பதென் கொண்டு நம்பீ. கடல்வண்ணா. கதறு கின்றேன்,
அளித்தெனக் கருள்செய் கண்டாய் அரங்கமா நகரு ளானே. (25)

897:
போதெல்லாம் போது கொண்டுன் பொன்னடி புனைய மாட்டேன்,
தீதிலா மொழிகள் கொண்டுன் திருக்குணம் செப்ப மாட்டேன்,
காதலால் நெஞ்ச மன்பு கலந்திலே னதுதன் னாலே,
ஏதிலே னரங்கர்க்கு எல்லே. எஞ்செய்வான் தோன்றி னேனே. (26)

898:
குரங்குகள் மலையை தூக்கக் குளித்துத்தாம் புரண்டிட்டோடி,
தரங்கநீ ரடைக்க லுற்ற சலமிலா அணிலம் போலேன்,
மரங்கள்போல் வலிய நெஞ்சம் வஞ்சனேன் நெஞ்சு தன்னால்,
அரங்கனார்க் காட்செய் யாதே அளியத்தே னயர்க்கின் றேனே. (27)

899:
உம்பரா லறிய லாகா ஒளியுளார் ஆனைக் காகி,
செம்புலா லுண்டு வாழும் முதலைமேல் சீறி வந்தார்,
நம்பர மாய துண்டே? நாய்களோம் சிறுமை யோரா,
எம்பிராற் காட்செய் யாதே எஞ்செய்வான் தோன்றி னேனே. (28)

900:
ஊரிலேன் காணி யில்லை உறவுமற் றொருவ ரில்லை,
பாரில்நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி,
காரொளி வண்ணனே என் கண்ணனே கதறுகின்றேன்,
ஆருளர்க் களைக்கணம்ம அரங்கமா நகரு ளானே. (29)

901:
மனத்திலோர் தூய்மை யில்லை வாயிலோ ரிஞ்சொ லில்லை,
சினத்தினால் செற்றம் நோக்கித் தீவிளி விளிவன் வாளா,
புனத்துழாய் மாலை யானே. பொன்னிசூழ் திருவ ரங்கா,
எனக்கினிக் கதியென் சொல்லாய் என்னையா ளுடைய கோவே. (30)

 

 

Leave a Reply