ஆழ்வார் சரிதம்

தொண்டரடிப்பொடியார்
style="text-align: center;">{jcomments on}தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருச்சரிதம்

சோழ நாட்டில் இருந்த திருமண்டங்குடி எனும் திருத்தலத்தில் (கி.பி. 8-ம் நூற்றாண்டு) ஸ்ரீவனமாலையின் அம்சராக முன்குடுமிச் சோழிய அந்தணர் குடும்பத்தில் அவதரித்தார் தொண்டரடிப்பொடியாழ்வார்.

வைணவக் குடும்பத்தைச் சேர்ந்த சோழிய மரபில் அவதரித்த இவருக்கு, இவருடைய தந்தையார் இட்ட பெயர் விப்ரநாராயணர் என்பது. தகுந்த காலத்தில் இவருக்கு உபநயனம் முதலிய வைதிகச் செயல்கள் நடைபெற்றன.

விப்ரநாராயணர் திருமணம் செய்துகொள்வதில் சிறிதும் விருப்பம் இல்லாதவராக இருந்தார். பல தலங்கள் தோறும் சென்று, இறைவனை தரிசிக்க எண்ணம் கொண்டார். திருத்தல தரிசன எண்ணம் மேலோங்க, முதலில் திருவரங்கம் பெரிய கோயிலை அடைந்தார். அங்கே பள்ளி கொண்டிருக்கும் அரங்கநாதனைச் சேவித்து, அவரது அழகில் உள்ளம் பறிகொடுத்தவராக அவருடைய கைங்கர்யத்தையே இனி தன் வாழ்நாள் பணி என்று ஏற்றுக்கொண்டார். எனவே, திருவரங்கப் பெருமான் திருக்கோயில் அருகில் வனப்புள்ள நந்தவனத்தை அமைத்தார். பெரியாழ்வாரைப் போன்று அரங்கனுக்கு மாலை கட்டித் திருப்பணி மேற்கொண்டு அந்த நந்தவனத்திலேயே வசிக்கலானார்.

இவர் இவ்வாறு அரங்கனுக்கு நந்தவனக் கைங்கரியம் செய்துவரும் காலத்தே, திருவரங்கத்துக்கு வடக்கிலுள்ள உத்தமர்கோயிலில், தேவதேவி என்ற பெயருடைய தேவதாசிப்பெண் ஒருத்தி இருந்தாள். மிகுந்த அழகுடையவளாகத் திகழ்ந்தாள் தேவதேவி. தேவதாசி குலத்தில் பிறந்த நங்கையான அவள் தன் தமக்கையுடன் நடனமாட உறையூருக்குச் சென்றாள். சோழன் முன்னிலையில் நடனமாடிப் பல பரிசுகள் பெற்றுத் திரும்புகையில், அவள் விப்ரநாராயணரது நந்தவனத்துக்கு அருகே வந்தாள்.

அந்த நந்தவனத்தின் அழகில் மனத்தை பறிகொடுத்தாள். அப்படியே அந்த நந்தவனத்துக்குரியவனைத் தன் வயப்படுத்த எண்ணினாள். ஆனால், அவளது தமக்கையோ, தங்கையை நோக்கி, விப்ரநாராயணர் என்பவர்தான் இந்த நந்தவனத்தை அமைத்து பாதுகாத்து வருகிறார். அவர் இறை வழிபாட்டில் ஈடுபட்டுள்ளவர். ஆதலால் அவரை உன் வயப்படுத்துதல் என்பது தகாது. அந்தச் செய்லும் உன்னால் முடியாது என்று உரைத்தாள். தங்கையாகிய தேவதேவி தன் தமக்கையிடம், அவரை என் வயப்படுத்தாவிடின் உனக்கு ஆறுமாத காலம் அடியவளாவேன் என உறுதி கூறினாள்.

பின்பு தேவதேவி தனியே அந்த நந்தவனத்தருகே வந்தாள். மெல்லிய ஒரு செங்காவிச் சேலை உடுத்தி, விப்ரநாராயணரை அடுத்துத் திருவடிகளில் விழுந்து வணங்கினாள். அவர், நீ யார்? என்று கேட்டார். அதற்கு அவள், நான் முன்வினைப் பயனால் தாசி குலத்தில் பிறந்தேன்; எனினும் அத்தொழிலைச் செய்ய உடன்படாமல் தேவரீரது திருவடியைச் சரணடைந்து உய்வுபெற நாடி வந்துள்ளேன் என்று பசப்பு வார்த்தைகளால் நாடகமாடினாள். அதன்பின், செடிகளுக்கு நீர் ஊற்றுதல், பூக்களைக் கொய்து மாலை கட்டுதல், சோலையைப் பாதுகாத்தல் முதலிய பணிவிடைகளில் எதை நியமித்தாலும் அதைச் செய்துவரக் காத்திருக்கிறேன் என்று மிகுந்த வணக்கத்துடன் சொன்னாள்.

விப்ரநாராயணரும் அவளது கபட நாடகத்தை உணராமல், அவளுடைய மொழிகளுக்கு உடன்பட்டு தாம் அமுது செய்து மிகுந்த உணவினைக் கொடுத்துவந்தார். அவளும் அதனை வாங்கி உட்கொண்டு, பாத்தி கொத்துதல், நீர் ஊற்றுதல் முதலான செயல்களை ஊக்கத்துடன் செய்து, அவருக்குத் தன்னிடத்தே நம்பிக்கை உண்டாகும்படி நல்லவள்போல் நடித்து வந்தாள். இவ்வளவு இருந்தும், தம் குடிலில் அவளுக்கு இடம் தராமல், ஒதுங்கியே இருந்தார் விப்ரநாராயணர்.

மாதங்கள் பல இப்படியே கழிந்தன. ஒரு நாள் பெருமழை பொழிந்து கொண்டிருந்தது. அப்போது குடிலுக்கு வெளியே தேவதேவி கொட்டும் மழையில் நனைந்தவளாக படபடக்க நின்றிருந்தாள். கருணை உள்ளம் கொண்ட விப்ரநாராயணர் வெளியிலே வந்து பார்த்தார். தேவதேவி நனைந்து வருதலைப் பார்த்து, அவளை உள்ளே வந்து நிற்கும்படி கூறினார். அவளும் விப்ர நாராயணரின் அருகில் வந்து, தனது மென்மொழிகளாலும், மேனி மினுக்கினாலும் அவரது மனத்தைக் கவர்ந்தாள். அவரைத் தன் வயமாக்கிச் சில காலம் அவருடன் இருந்து, பின்பு பொருள் இல்லாத அவரை பொருட்டாக எண்ணாமல், அவரைக் கைவிட்டு தன் ஊருக்குச் சென்றாள்.

விப்ரநாராயணருக்கோ தேவதேவியின் பிரிவைத் தாங்க முடியவில்லை. அவள் பிரிவை ஆற்றாமல், அவளது வீட்டு வாசலில் சென்று தயங்கித் தயங்கி நின்றார். தேவதேவியோ தன் சபதம் முடித்தவளாக, பொருளில்லாத அவரை விரட்டிவிட்டாள்.

அவ்வளவுதான்! தன் அடியாரும் குழந்தையுமான விப்ரநாராயணர் அவமானப்படுவதைக் கண்டு தாயாரான திருமகளுக்கு வருத்தம் மேலிட்டது. அவள் திருமாலிடம், முன்போல விப்ரநாரயணனை ஆட்கொண்டு அந்தரங்க பக்தனாக்கி அருள வேண்டும் என்று வேண்டிக்கொண்டாள். இறைவனும் மனித வடிவம் கொண்டு அடியாருக்காக ஒரு திருட்டு வேலையைச் செய்தான்.

திருக்கோயில் பாத்திரங்களுள் பொன்வட்டில் ஒன்றை எடுத்துச் சென்று விப்ரநாராயணருக்குத் தெரியாமல் தேவதேவியிடம் வந்து அந்தப் பொன்வட்டிலைத் தந்து, நான் அழகிய மணவாளதாசன், விப்ரநாராயணர் அனுப்ப நான் இங்கு வந்தேன் என்று கூற, தேவதேவியும் விருப்பத்துடன், அவரை உள்ளே வரச் சொல்லும் என்றாள். அடியார்க்கு எளியவனான எம்பெருமான் விப்ரநாராயனரிடம் வந்து, தேவதேவி உங்களை உள்ளே வரச் சொன்னாள் என்று சொன்னார். விப்ரநாராயணரும் உள்ளம் குளிர்ந்து உடல் பூரித்து அவளின் வீட்டினுள்ளே போனார்.

அந்த இரவு அப்படியே கழிந்தது. பொழுதும் விடிந்தது. திருக்கோயிலுக்குள் சென்ற கோயில் காப்போன், பொன் வட்டிலைக் காணாது மனம் பதைபதைத்து ஓடோடிச் சென்று அதை அரசனுக்கு அறிவித்தான். அரசனும் அர்ச்சகர், பரிசாரகர் முதலானவர்களை அழைத்து, பொன்வட்டில் காணாமல் போனதற்காக அவர்களைத் தண்டித்து வருத்தினான்,

பின்னர் ஒற்றர் மூலம் தேவதேவியின் இல்லத்தில் அந்தப் பொன் வட்டில் இருப்பதை அறிந்தான். உடனே தேவதேவியை அழைத்து இந்த வட்டில் எப்படி உன் இல்லத்துக்கு வந்தது என்று கேட்டான். அதற்கு அவள், விப்ரநாராயணர் ஏவலாளாகிய அழகியமணவாளதாசன் மூலம் விப்ரநாராயணர் இதனைக் கொடுத்து அனுப்பினார் என்று மறுமொழி புகன்றாள்.

விப்ரநாராயணரோ, தனக்கு ஒன்றும் தெரியாது என்றும், தனக்கு ஏவலாளன் என்று எவருமே இல்லை என்றும் மறுத்துரைத்தார். அரசனும், களவாடிய பொருளை வாங்கியதற்காக, அதற்குரிய அபராதப் பொருளையும், பொன் வட்டிலையும் தேவதேவியிடமிருந்து பெற்றுக்கொண்டான். அவற்றை பெருமாள் திருப்பணிக்காக கோயிலுக்கு அளித்தான். பின் விப்ரநாராயணரைச் சிறையில் இட்டான்.

விப்ரநாராயணர் படும் துன்பத்தைக் காணப் பொறாத அரங்கநாயகித் தாய், மீண்டும் அரங்கநாதனை அருள் புரியுமாறு வேண்டினாள். பெருமாளும் அரசனது கனவில் தோன்றி, ஓதாசியிடத்தே காதல் கொண்ட இந்த அந்தணருடைய கருமத்தைக் கழித்தல் பொருட்டு, நாமே பொன் வட்டிலைக் கொண்டுபோய்த் தந்து இவனை தண்டித்தோம்; உண்மையில் இவன் கள்வனல்லன்; தூய்மையாளனே என்று தெரிவித்தார்.

கண்விழித்து எழுந்த அரசன், அமைச்சர் முதலியோரிடம் தான் கண்ட கனவினைத் தெரிவித்தான். பிறகு உண்மை தெரிந்துவிட்டதாகக் கூறி, அப்போதே விப்ரநாராயணரை விடுவித்து, எம்பெருமான் சொன்னதைச் சொல்லி, மன்னிக்குமாறு வேண்டினான். அவரை உபசரித்து அனுப்பினான்.

பிறவிப் பெருஞ் சிறையிலிருந்து விடுபடுவதற்காக, எம்பெருமான் அடியாராகி, அவரது நந்தவனக் கைங்கர்யம் செய்து வந்த அந்தணராகிய விப்ரநாராயணர், தம் தவறை உணர்ந்தார். துளவத் தொண்டு மறந்து, பொருட் பெண்டிர் பின் சென்று, சிற்றின்ப பொய்மை மயக்கத்தில் ஆழ்ந்திருந்ததற்காக மனம் வருந்தினார். பின்னர் தகுந்த பெரியோர்களைச் சார்ந்து, தமக்கு இதற்கான பிராயச்சித்தம் செய்யுமாறு வேண்டினார். பெரியோர்களும் பல நூற்பொருட்களை ஆராய்ந்து, ஓபாவங்கள் யாவும் நீங்குதற்கு ஏற்ற பிராயச்சித்தம் பாகவதர்களுடைய திருவடித் தீர்த்தத்தை உட்கொள்வதே என்று கூறினர். இதைக்கேட்டு மனம் அமைதியடைந்த, அவர் அங்ஙனமே அதனைப் பெற்றுப் பருகித் துய்மை பெற்றார். வைணவர்களுடைய திருவடித் துளியாய் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடிமைபூண்டு ஒழுகி, அதனால் தமக்கு அதுவே பெயராக அமையும் படி, அவர் தொண்டர் அடிப்பொடி என்று திருநாமம் பெற்றார்.

பின்னர் இறைவனருளால் அர்ச்சாவதாரத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, திருவரங்கப் பெருமானுக்குத் துளவத் தொண்டு புரிந்து வாழ்ந்து, தமது அனுபவத்தைப் பிரபந்தப் பாசுரங்கள் மூலமாகப் பிறர்க்குத் தெரிவிக்கக் கருதி திருமாலை, திருப்பள்ளியெழுச்சி என்ற திவ்வியப் பிரபந்தங்களை அருளிச் செய்து உலகத்தாரை உய்வித்து, பல்லாண்டுகள் திருவரங்கத்திலேயே வாழ்ந்தார்.

தொண்டரடிபொடியாரின் மாற்றம் கண்ட தேவதேவியும், தான் செய்த செயலுக்காக மிக வருந்தி, தான் உய்வு பெறுதல் பொருட்டு, தனது பொருளனைத்தையும் அரங்கனுக்கே அர்ப்பணித்துவிட்டு கோயிலை திருவலகிடுதல், மெழுகுதல், கோலமிடுதல் முதலிய அடிமைத் தொழில்களைச் சில காலம் செய்து கொண்டிருந்து முடிவில் நற்கதி அடைந்தாள்.

தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் பாசுரங்கள் யாவும் இன்னிசை உடையனவாக, பக்திச் சுவையோடு தேனினும் இனிய அனுபவத்தைத் தருவனவாகப் பொலிகின்றன.

இனி அந்தப் பாசுரங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.

முதலாயிரத்தில் திருமாலை 45 பாசுரங்களும் திருப்பள்ளியெழுச்சி 11- பாசுரங்களும் பாடியுள்ளார் தொண்டரப்பொடி ஆழ்வார். மிகவும் உருக்கமான எளிய தமிழில், உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் பாசுரங்கள் இவருடையவை. இவர் பாடிய தலங்களில் நிலவுலகில் உள்ளவை திருவரங்கமும் திருவேங்கடமும். மற்றபடி பரமபதம் குறித்துப் பாடியுள்ளார்.

தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருப்பள்ளியெழுச்சியை, தமிழின் முதல் திருப்பள்ளியெழுச்சி எனலாம்.

கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான்

கனவிருள் அகன்றது காலைஅம் பொழுதாய்

மதுவிரிந்தொழுகின மாமலர் எல்லாம்

வானவர் அரசர்கள் வந்துவந்து ஈண்டி

எதிர்திசை நிறைந்தனர் அவரொடும் புகுந்த

இருங்களிற்றீட்டமும் பிடியொடு முரசும்

அதிர்தலில் அலைகடல் போன்றுளதெங்கும்

அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே (1)

சூரியன் கிழக்கே தோன்றிவிட்டான்; கருமை இருள் அகன்றுவிட்டது. காலைப் பொழுது மலர்கின்றது, மலர்களில் தேன் ஒழுகுகிறது. தேவர்கள் வந்து எதிர்திசையை நிரப்புகிறார்கள். அவர்களுடன் ஆண் -பெண் யானைகளின் கூட்டமும் வந்துள்ளன. முரசு கடல் அலைபோல அதிர்கிறது. அரங்கனே எழுந்திரு என்று அரங்கநாதப் பெருமானை எழுப்புகிறார்.

அந்தரத் தமரர்கள் கூட்டங்க ளிவையோ?

அருந்தவ முனிவரும் மருதரு மிவரோ?

இந்திர னானையும் தானும்வந் திவனோ?

எம்பெரு மானுன் கோயிலின் வாசல்,

சுந்தரர் நெருக்கவிச் சாதரர் நூக்க

இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்,

அந்தரம் பாரிட மில்லைமற் றிதுவோ?

அரங்கத்தம்மா பள்ளி யெழுந்தரு ளாயே. (7)

திருவரங்கப் பெருமானை எழுப்ப வந்த தேவர்கள், கடவுளர், முனிவர், இந்திரன், சுந்தரர், விச்சாதரர், நூக்கர், இயக்கர் என்று அனைவரையும் அழகாகத் தொகுத்துப் பட்டியலிடுகிறார் ஆழ்வார். இவ்வாறு பகவானை எழுப்பும் பாடல்கள் பதினொன்று இந்தத் தொகுப்பில் உள்ளன.

தொண்டரடிப்பொடியாரின் திருமாலைப் பாசுரங்கள் சிலவற்றை நாம் அடிக்கடி கேட்டிருப்போம். இனிமையும் அழகும் சொல்லுவதற்கு எளிமையுமாகத் திகழ்பவை அவை. அவற்றில் சில…

பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்

அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும்

இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்

அச்சுவை பெரினும் வேண்டேன் அரங்கமா நகருளானே.

இந்தப் பாடல் சொன்னாலே அனைவர்க்கும் புரிந்துவிடும் எளிய தமிழ்ப் பதங்களால் ஆனது. தொண்டரப்பொடி ஆழ்வார் பயன்படுத்தியுள்ள சொற்பிரயோகங்கள் பலவும் இன்றும் நாம் பேசும்போதும் பயன்படுத்துகிறோம். பல நூற்றாண்டு கடந்து வந்தும் அந்தச் சொற்கள் இன்றளவும் மாறாமல் நம்மை வந்தடைந்திருக்கின்றன. சீரிளமைத் திறம் கொண்ட தமிழின் சிறப்பும் இதுதான்.

வேதநூல் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவரேலும்

பாதியும் உறங்கிப் போகும் நின்ற திற்பதினையாண்டு

பேதை பாலகனதாகும் பிணி, பசி, மூப்பு, துன்பம்

ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகருளானே!

வேதங்கள் மனிதனுக்கு நூறு வயது என்று கணக்கிட்டுச் சொன்னாலும் அதில் பாதியும் தூக்கத்திலேயே போய்விடுகிறது. பதினைந்து ஆண்டுகள் சிறுவயது பாலகனாகக் கழிந்து விடுகின்றன. வியாதி, பசி, மூப்பு, துன்பம் என்றும் காலம் விரயமாகிறது. இதனால் அரங்கனே யான் பிறவியே வேண்டேன் என்று பிறவாமையை விரும்புதற்குரிய காரணங்களை அடுக்கிக்கொண்டே போகிறார் ஆழ்வார். இங்கே இன்னொன்றையும் யோசித்துப் பார்க்க வேண்டும். குலசேகரப் பெருமான், திருமலையில் படியாகவும் மீனாகவும் இன்னும் என்னவெல்லாம் திருமலையப்பனை அண்டி நிற்கின்றவோ அதெல்லாமும் தான் ஆக பிறப்பெடுக்க வேண்டும் என்று அர்ச்சாவதார எம்பெருமானைப் போற்றி, அவன் பக்கலில் நின்று எப்போதும் அவனையே தரிசித்திருக்க வேணுமாகப் பிரார்த்திக்கிறார். தொண்டரடிப்பொடியாரோ பிறவி வேண்டாம் என்கிறார். இந்தக் கருத்தில், இன்னொரு புகழ்பெற்ற பண்ணும் நமக்கு நினைவுக்கு வரும்.

குனித்த புருவமும் கோவைச் செவ்வாயும் குமிழ்ச்சிரிப்பும்

பனித்த சடையும் பவளம்போல் மேனியில்பால்வெண்ணீரும்

இனித்தமுடன் எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்

மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே ….

– என்றபடி, அர்ச்சாவதாரப் பெருமானின் அழகைக் கண்டுகொண்டே இருத்தலுக்காகவாவது மனிதப் பிறவி எடுக்கவேணும் என்ற பிரார்த்தனையை முன்வைக்கிறார்கள். அதற்கு ஒவ்வொரு பிறவியிலும் அவனை நினைத்துக் கொண்டே இருக்கும் மனமும் வரமும் வேண்டுமே. அவன் கருணையில்லாது அவனிடத்தே மனம் செல்லுவதும் எங்ஙனம் என்று எண்ணி, ஒருவேளை தொண்டரடிப்பொடியார் பிறவியே வேண்டாம் என்று பிரார்த்திக்கிறார் போலும்!

ஆழ்வாரின் இந்தப் பாடலும் மிகவும் புகழ்பெற்ற ஒன்றே…

குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி

வடதிசை பின்பு காட்டித் தென்திசை இலங்கை நோக்கி

கடல்நிறக் கடவுள் எந்தை அரவணைத் துயிலுமா கண்டு

உடல்எனக்கு உருகுமாலோ என்செய்கேன் உலகத்தீரே!

மேற்கில் தலையை வைத்து, கிழக்கே கால்நீட்டி, வட புறம் முதுகு காட்டி, தென்புறம் திருமுகம் நோக்கி, கடல் நிறக் கடவுளான அரங்கன் சயனித்திருக்கும் அழகைக் கண்டு என் உடல் உருகுகிறதே! என் செய்வேன் உலகத்தீரே! என்று அர்ச்சாவதார எம்பெருமானின் அழகை அனுபவித்து உருகுகிறார்.

அரங்கனின் திவ்விய ரூப அழகை மட்டுமா அனுபவித்து இப்படிப் பாடுகிறார்?… அரங்கன் கோயில் கொண்ட திருவரங்கத்தைச் சூழ்ந்துள்ள சோலையையும் அவர் வர்ணித்துப் பாடுகிறார்.

வண்டின முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை

கொண்டல்மீதணவும் சோலை குயிலினம் கூவும் சோலை

அண்டர்கோன் அமரும் சோலை அணி திருவரங்கம் என்னா

மிண்டர் பாய்ந்துண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கிடுமினீரே…

வண்டுகள் பாட, மயில்கள் ஆட, மேகங்கள் அணுகும் (அணவும்), தேவதேவன் அமரும் சோலை திருவரங்கம் என்று அதன் அழகைப் பாடுகிறார். இப்படி திருவரங்கத்தின் அழகைப் பாடாது, அரங்கனை நினையாது சோறு கண்டவுடனே அதைநோக்கி டிச் சென்று உண்ண முயன்றால், அதைத் தட்டி நாய்க்கு இடலாம் என்று கொஞ்சம் கடினமாகவே மொழிகிறார்.

மற்றுமோர் தெய்வமுண்டோ  மதியிலா மானிடர்காள்

உற்றபோதன்றி நீங்கள் ஒருவன் என்று உணரமாட்டீர்

அற்றமே ஒன்றறியீர் அவனல்லால் தெய்வமில்லை

கற்றினம் மேய்த்த கழலிணை பணிமினீரே..

மதியிலாத மானிடர்களே, அவனை விட்டால் வேறு தெய்வம் உண்டா? இதை இறக்கும்போதுதான் உணர்வீர்களா? கன்று மேய்த்த கண்ணனின் அடிபணிந்தால் உங்களுக்கு ஒரு வருத்தமும் (அற்றம்) இருக்காதே!

– தங்களுக்குப் புகல் ஒன்றுமில்லை, இறைவா நீயே எனக்குப் புகல் என்று இறையடியார்கள் அவன் சரண கமலத்தே விழுந்து கதறி அடைக்கலம் புகுதலை நினைவுறுத்தும் பாசுரங்கள் இவர். இந்தப் பாசுரங்களில் இவரின் சரணாகதி எண்ணத்தைக் காணலாம்…கேட்பதற்கு மிகவும் உருக்கமாகவும் இருக்கும் பாசுரங்கள் இவை.

ஊரிலேன் காணியில்லை உறவுமற்றொருவரில்லை

பாரில் நின் பாதம் அல்லால் பற்றிலேன் பரம மூர்த்தி

காரொளி வண்ணனே கண்ணனே கதறுகின்றேன்

ஆருளர் களைகண் அம்மா அரங்கமா நகருளானே

எனக்கு ஊரில்லை, நிலம் இல்லை, உறவில்லை, உன் இணையடி தவிர வேறு பற்றுக்கோல் இல்லை. மேக நிற மேனி கொண்ட கண்ணனே கதறுகிறேன்… எனக்கு வேறு யார் வினை தீர்ப்பவர்கள்?

மனத்திலோர் தூய்மை இல்லை வாயிலோர் இன்சொல் இல்லை

சினத்தினால் செற்றம் நோக்கித் தீவிளி விளிவன்வாளா

புனத்துழாய் மாலையானே பொன்னிசூழ் திருவரங்கா

எனக்கினி கதியென் சொல்லாய் என்னை ஆளுடையகோவே

மனதில் தூய்மை இல்லை, வாயில் இனியசொல் இல்லை. கோபத்தில் விழித்து எதிரிகளை அழித்த, துளசிமாலை யணிந்த பெருமானே எனக்கு இனி என்ன கதி சொல்?

இந்தப் பாசுரங்கள் சரணாகதியின் மகத்துவத்தையும் அணுகும் முறையையும் சொல்கின்றன.

ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ |

அஹம்த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச ||

என்று கீதையின் சரம ஸ்லோகம் கூறுவதுபோலே, இங்கே ஆழ்வார் சரம ஸ்லோகத்தின் சாரத்தை அப்படியே தருகிறார். எல்லா பாரத்தையும் பகவானிடத்தில் விட்டுவிட்டு, அவனை மட்டுமே தொழுவது சரணாகதித் தத்துவம். அந்த சரணாகதித் தத்துவத்தின் சாரமே இந்தப் பாசுரங்கள்.

தொண்டரப்பொடியாழ்வார் வாழி திருநாமம்

மண்டங்குடி அதனை வாழ்வித்தான் வாழியே

மார்கழியில் கேட்டை நாள் வந்து உதித்தான் வாழியே

தெண்டிரை சூழ் அரங்கரையே தெய்வம் என்றான் வாழியே

திருமாலை ஒன்பதஞ்சும் செப்பினான் வாழியே

பண்டு திருப்பள்ளியெழுச்சி பத்துரைத்தான் வாழியே

பாவையர்கள் கலவிதனைப் பழித்தசெல்வன் வாழியே

தொண்டு செய்து துளபத்தால் துலங்கினான் வாழியே

தொண்டரடிப் பொடியாழ்வார் துணைப்பதங்கள் வாழியே

Leave a Reply