திருப்பாணாழ்வாரின் திருச்சரிதம்
சோழர்களின் தலைநகராக சிறப்புற விளங்கியது உறையூர் என்ற திருத்தலம். சரித்திரத்தில் பெருமையுடன் பேசப்பட்டுள்ள அந்தத் தலத்தில் செந்நெல் பயிரில் (கி.பி. 8-ம் நூற்றாண்டு) துன்மதி ஆண்டு கார்த்திகை மாதம் தேய்பிறையில் பொருந்திய துவிதியை திதியில் புதன்கிழமையன்று ரோகிணி நட்சத்திரத்தில் திருமாலின் ஸ்ரீவத்ஸ அம்சராக திருப்பாணாழ்வார் அவதரித்தார்.
நண்பகல் நேரம். நெற்பயிர் இருக்கும் அந்த இடத்துக்கு வந்தான் பாணன் ஒருவன். தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த அவனுக்கு பிள்ளைச் செல்வம் இல்லை. திருமாலின் அடியாரான அவருடைய உள்ளம் குழந்தைச் செல்வத்துக்காக ஏங்கித் தவித்தது. தினமும் திருமாலை நோக்கி அழுத கைகளோடு தொழுது நின்றான்.
திருமாலின் அருளால் அவன் அந்த நெற்பயிர் அருகே வந்தபோது, குழந்தை ஒன்று அழும் குரல் கேட்டு ஓடோடிச் சென்று கண்டான். அழகாக ஒரு குழந்தை அங்கே இருப்பதைக் கண்டான். சுற்றும்முற்றும் பார்த்தான். எவரும் இருப்பதாகக் காணோம்.
நாம் தொழுதது வீண் போகவில்லை, மழலைச் செல்வம் இல்லாத குறை தீர்க்க அந்தத் திருமாலே தனக்கு இந்தக் குழந்தையை அளித்திருக்கிறார் என்று எண்ணி, அக்குழந்தையைத் தன் இல்லத்துக்குக் கொண்டு வந்தான். அவனுடைய மனைவியும் அந்தக் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சி, மிகவும் மன மகிழ்ந்தாள்.
திருமால் அருளால் கிடைத்த அந்தக் குழந்தைக்கு, அந்தப் பாணன் தன் குலத்துக்கே உரிய யாழிசையைக் கற்றுக் கொடுத்து அவரை அதில் தேர்ச்சி பெற வைத்தார். அவரும் யாழ் மீட்டுவதில் தேர்ச்சி பெற்று, பாணர் குலத்தில் சிறப்புற்று இலங்கினார். அதனால் யாவரும் அவரை பாணர் குலத் தலைவர் என்ற பெயர் தோன்றும் வண்ணம் திருப்பாணர் என்ற பெயரிட்டு இவரை அழைத்தனர்.
உறையூரின் இந்தப் புறத்தில் இருந்ததால், அவர் காவிரியின் தென் கரைக்குச் சென்று அரங்கநாதனைக் குறித்து ஏதேனும் பாடிக் கொண்டிருப்பார். அரங்கநாதப் பெருமாளைப் பற்றிக் கூறக் கேட்டு, அவர் அரங்கநாதப் பெருமானின் நினைவாகவே ஏக்கத்தோடு வாழ்ந்து வந்தார்.
காரணம் தாம் தாழ்ந்த குலத்தில் வளர்ந்து அந்த அடையாளத்துடனேயே அழைக்கப்பட்டதால், அவரால் திருவரங்கத் திருநகருக்குச் செல்ல முடியவில்லை. என்றாகிலும் ஒருநாள் அந்தத் திருவரங்கனைக் கண்குளிரத் தரிசிக்க வேண்டும் என்ற தீராத அவா மட்டும் உள்ளத்தில் கனன்று கொண்டிருந்தது. ஆனாலும் காவிரிக் கரையைத் தாண்டி அந்தப் பகுதிக்குச் செல்ல மனம் துணியவில்லை. ஜாதி அடையாளம் சமூகத்தில் புதைந்து கிடந்ததால், அவரால் அதை மீறிச் செல்ல இயலவில்லை.
தினமும் காவிரியின் தென்கரைக்கு வருவார் திருப்பாணர். தான் கையில் கொண்டு வந்த யாழினை மீட்டத் தொடங்கிவிடுவார். கண்களில் கண்ணீர் தாரைதாரையாகப் பெருக்கெடுக்க, உதடுகள் அரங்கனின் திருநாமத்தை அப்படியே பாடிக்கொண்டிருக்கும். திருவரங்கன் ஆலயம் இருக்கும் திக்கை நோக்கி அவரின் கைகள் கூப்பித் தொழுது நிற்கும். இவருடைய இந்த பக்தி நிலையைக் காண்போர் பரவசப்பட்டு, இவரின் பக்தியுணர்வை மெச்சிச் சென்றார்கள்.
திருவரங்கப் பெருமானைக் குறித்து பல பாடல்களை, கேட்பவர் செவியும் மனமும் குளிர, எம்பெருமான் திருவுள்ளம் மகிழப் பாடுவார் திருப்பாணர்.
இப்படி நாள்தோறும் வைகறையில் திருப்பாணர் திருவரங்கனைக் குறித்து பக்திப் பரவசத்தில் தம்மை மறந்து பாடிக் கொண்டிருந்தார். ஆற்றில் நீர் குறைந்திருந்தது. இவர் காவிரி நீரில் குளித்து, அரங்கவிமான தரிசனம் கண்டு அவன் நினைவால் யாழ் மீட்டி பாடத் தொடங்கிவிட்டார்.
இப்படி இருக்கும்போது, திருவரங்கநாதனை ஆராதிப்பவரான லோகசாரங்க முனிவர் காவிரியில் நீராடித் திருமண் தரித்து, துளசிமணி மாலையும், தாமரை மணிமாலையும் கழுத்தில் அணிந்துகொண்டு, திருவரங்கநாதனின் திருமஞ்சனத்துக்கு நீர் கொண்டு செல்ல, பொற்குடத்தைக் கையிலேந்தி காவிரிக் கரைக்கு வந்தார். அவர் திருப்பாணரைக் கண்டு கைதட்டிக் கூவி, ஓஅப்பால் செல் என்று சத்தமாகக் கூறினார்.
திருப்பாணருக்கோ ஒன்றும் கேட்கவில்லை. காரணம் அவர்தான் இவ்வுலகத் தொடர்பை மறந்து அரங்கனுடன் மனதால் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறாரே. எனவே லோகசாரங்க முனிவரின் மொழியைச் செவியுறாமல் வாளா நின்றார்.
இதனைக் கண்ட லோகசாரங்க முனிவருக்கு கோபம் தலைக்கேறியது. தரையில் கிடந்த ஒரு கல்லை எடுத்தார். திருப்பாணரைக் குறிபார்த்து வீசினார். அது பாணரின் நெற்றியில் பட்டெனப் பட்டது. அவ்வளவுதான̷் 0; குருதி ஆறாய்ப் பெருகியது. திடீரென ஒரு கல் தன் நெற்றியைப் பதம் பார்த்துவிட்ட அந்த கணத்தில், திருப்பாணரும் தியான நிலையிலிருந்து தெளிவுற்றார்.
தாம் ஏதோ தவறு செய்துவிட்டதாக எண்ணி, திருப்பாணரும் அந்த இடத்தை விட்டு அகன்றார். திடீரென நிகழ்ந்து விட்ட இந்தச் சம்பவத்தால், லோகசாரங்கர் உடலும் உள்ளமும் நடுங்கினார்.
பின்னர் பொற்குடத்தில் காவிரி நீரை முகந்துகொண்டு, திருவரங்கநாதன் திரு முன் சென்றார். திருவரங்கன் சந்நிதியில் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
பக்திப் பெருக்கோடு திருவரங்கநாதன் திருமுக தரிசனம் காண அவன் முகத்தை நோக்கினால்… அட என்ன இது? திருவரங்கப்பெருமானின் நெற்றியிலிருந்து செந்நீர் பெருகி வந்து கொண்டிருக்கிறதே… என்ன ஆயிற்றோ?… என்று நெஞ்சு படபடக்க, இதனை முனிவரும் அர்ச்சகரும் கோயில் அதிகாரிகளுக்கு அறிவித்தனர். அவர்களும் இந்தச் செய்தியை அரசனுக்குத் தெரிவித்தனர்.
அமைச்சர்களுடன் அரசன் கலந்து ஆராய்ந்து பார்த்தும், காரணம் ஒன்றும் புலப்படவில்லை. இறுதியில் திருவரங்கன் திருவடியிலேயே பாரத்தை வைத்து இறைஞ்சி நின்றான் மன்னன்.
இந்த நிகழ்வுகள் நடப்பதற்கு முன்னரே, ஒருநாள் பிராட்டி அரங்கநாதனை நோக்கி, பல காலமாக நம்மைப் பாடிவரும் திருப்பாணன் கோயிலின் புறத்தே நிற்க அதை நீங்கள் பார்த்திருக்கலாமோ? என்று விண்ணப்பம் செய்தாள். அரங்கநாதனோ, திருப்பாணரை விரைவிலேயே தம் அருகில் அழைத்துக் கொள்வதாக வாக்களித்தான்.
திருவரங்கன் பிராட்டிக்கு வாக்கு கொடுத்த அந்தத் தருணமும் இப்போது வந்தது. அவ்வாறே, திருப்பாணருக்கு அருள்புரிந்து அவருடைய அன்பையும் பெருமையையும் உலகத்தார்க்கு எடுத்துக் காட்டுவதற்காக, பகவான் ஒரு திருவிளையாடலை நடத்த எண்ணினான்.
தன் திருவருளுக்கு அன்பே முதன்மையானது என்பதை உலகத்தார்க்கு எடுத்து இயம்பத் திருவுள்ளம் கொண்ட திருவரங்கப் பெருமான், அந்த நாள் இரவில் லோகசாரங்கருடைய கனவில் தோன்றினார். உம்மைப் போல் திருப்பாணனும் என் அன்பன். என் தரிசனத்துக்காக ஏங்கிக் கிடக்கும் அவனை நீர் இப்படிச் செய்யலாமோ? நீர் சென்று எம்முடைய நல்லன்பராகிய திருப்பாணரை இழி குலத்தவர் எனக் கருதாமல் உம் தோள் மீது எழுந்தருளச் செய்து, திரு முன்பு கொண்டு வருவீராக என்று கட்டளையிட்டார்.
காலைப் பொழுது விடிந்தது. வழக்கம்போல் திருப்பாணர் தம் யாழினை எடுத்துக்கொண்டு, காவிரிக் கரைக்குச் சென்று அரங்கநாதனைப் பாட ஆரம்பித்துவிட்டார். அதேபோல் அரங்கப் பெருமானது ஆணையை நிறைவேற்ற எண்ணி, பெரியவர்கள் பலரைத் தம்முடன் அழைத்துக்கொண்டு திருப்பாணர் வழக்கம்போல் நின்று பண்ணொடு பாடல் புனையும் இடத்தை நாடிச் சென்றார் லோகசாரங்கர். சற்றுத் தொலைவில் கூட்டத்தோடு வரும் லோகசாரங்கரைப் பார்த்து பாணர் சற்றே மிரண்டார்.
தொண்டர் தொழுதேத்தும் தன்மையரான திருப்பாணரை அணுகிய, லோகசாரங்கர், தம் தலைமேல் கைகளைக் கூப்பி, மும்முறை வலம் வந்தார். மண்ணில் விழுந்து, திருப்பாணரின் திருவடிகளை வணங்கி எழுந்தார்.
பின் திருப்பாணரை நோக்கி, ஓதேவரீரைத் தம்மிடத்துக்கு எழுந்தருளப் பண்ணுவித்துக் கொண்டுவர வேண்டுமென நம்பெருமாள் அடியேனுக்குக் கட்டளையிட்டுள்ளார்ஔ என்று சொன்னார். திருப்பாணரோ, நீசனான அடியேன் திருவரங்கப் பெருநகரை மிதித்திடுவேனா? என்று தம் ஜாதி இழிவைச் சொல்லி மறுத்தார்.
அதற்கு லோகசாரங்கர், ஓஅப்படியானால் தேவரீர் மிதித்திட வேண்டாம்; பெருமாள் பெரிய திருவடியின் திருத்தோளில் எழுந்தருளுதல் போல தேவரீர் அடியேனது தோளில் ஏறியருளும்ஔ என்று பிரார்த்தித்தார்.
தங்கள் பாதத்திலே தலைவைத்து வணங்க வேண்டிய யான், இக்கொடுந்தொழிலைச் செய்யேன் என்று பாணர் மறுத்துரைத்தார். ஆனால் லோகசாரங்கர் அரங்கனின் ஆணையைக் கூறி வற்புறுத்தி, திருப்பாணரைத் தம் தோள் மீது ஏற்றி, அரங்க நகரை நோக்கிச் சென்றார். திருவரங்கன் திருக்கோயிலுள் நுழைந்த லோகசாரங்கர், திருப்பாணரை அரங்கன் திருமுன் கொண்டுபோய் நிறுத்தினார்.
உடனே திருப்பாணாழ்வார் இறைவனது திருவடி முதல் திருமுடி வரையிலுமுள்ள அழகிய அவயங்களெல்லாவற்றையும் ஒன்றன்பின் ஒன்றாகக் கண் குளிரப் பார்த்து மனமுருகினார். எல்லா அவயங்களிலும் ஈடுபட்டு சேவித்து களிப்பெய்தினார்.
அழகிய மணவாளனின் அழகிற் சிறந்த எல்லா அவயங்களிடமும், தாம் அனுபவித்த அழகையும் இன்பத்தையும் உலகத்தார் எல்லாரும் அனுபவித்து இன்புற்று உய்யத் திருவுள்ளம் கொண்டார்! அரங்கரது திருமேனியழகை மிகச் சிறந்த பத்துப் பாசுரங்களால் பாடினார்.
(திருப்பாணாழ்வாரின் இந்த அருளிச்செயலுக்கு அமலனாதிபிரான் என்று பெயர். அமலன் ஆதிபிரான் என்று தொடங்கும் பத்துப் பாசுரங்களில் முதல் பாசுரத்தின் முதல் அடியையே தலைப்பாக்கி, இன்றும் வைணவர்கள் தினமும் பாராயணம் செய்யும் நித்தியானுசந்தானத் தொகுப்பில் இடம்பெறச் செய்துள்ளனர் பெரியோர்.)
பின்னர் மக்கள் பலரும் காண திருப்பாணாழ்வார், பெரிய பெருமாளின் திருவடிகளை அணுகிக் கீழே விழுந்து வணங்கி, அத்திருவடிகளின் இடத்தேயே மறைந்து பேரின்பப் பெருவீட்டை அடைந்தார்.
திருப்பாணாழ்வார் பாடியது பத்துப் பாசுரங்களாயினும் அவை உயர்ந்த அனுபவத்தைப் பேசுகின்றன. அடி முதல் முடி வரை அரங்கனின் வடிவழகைக் கண்குளிரக் காணும் அனுபவத்தை நமக்குக் காட்டுகின்றன.
ஆழ்வார் முதலில் கண்டு அனுபவித்துப் பரவசப்படுவதும் அந்த அரங்கனின் திருவடிகளைத்தான். முதலில் திருக்கமலப் பாத தரிசனம் கண்டு அதை மனத்துள் நிலைநிறுத்தி, இறுதியில் திருக்கமலக் கண்களைக் கண்டு பேரானந்தம் அடைகிறார்.
அவருடைய முதல் பாசுரம் இது…
அமலன் ஆதிபிரான் அடியார்க்கென்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர்கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீள்மதில் அரங்கத்தம்மான் திருக்
கமலப் பாதம் வந்து என் கண்ணினுள் வொக்கின்றதே
இவ்வாறு திருமாலின் பாதத்திலிருந்து துவங்கி மற்ற அங்கங்களின் அழகையும் அனுபவிக்கிறார். பாதம், சிவந்த ஆடை, உந்தி, உதரம், மார்பு, கழுத்து, வாய், பெரிய கண்கள், நீல நிற மேனி இவை அனைத்தும் தன்னை ஆட்கொண்டதாகப் பாடியிருக்கிறார்.
மந்திபாய் வடவேங்கட மாமலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
– என்னும்போது, வடவேங்கடத்தே நின்ற கோலத்தில் சேவை சாதிக்கும் அந்தப் பிரானே இங்கு செழுநீர் பொன்னி பாயும் திருவரங்கத்து அரவின் அணை மீது கிடந்த கோலத்தில் சேவை சாதிக்கிறான் என்கிறார்.
மேலும் இவர் தன் பத்துப் பாசுரங்களுக்குள்ளும் திருமாலின் அவதாரங்களையும் போற்றிப் புகழ்கிறார்.
சதுரமா மதில் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து
உதிரஒட்டி ஓர் வெங்கணை உய்த்தவன் ஓதவண்ணன்
மதுர மா வண்டு பாட மாமயில் ஆடு அரங்கத்தம்மான் திரு வயிற்று
உதரபந்தம் என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே!
– என்ற பாசுரத்தில் இலங்கைத் தலைவன் ராவணனின் பத்துத் தலைகளையும் தம் வெங் கணையால் பறித்த, கடல் ஓத வண்ணன் என்று ராமாவதாரச் சிறப்பையும் பாடி அவன் எழுந்தருளியுள்ள திருவரங்கச் சிறப்பையும் இந்தப் பாசுரத்தில் காட்டியருள்கிறார். அந்த அரங்கனின் உதரபந்த ஆபரணம் என் உள்ளத்துள்ளேயே நின்று உலா வருகின்றது என்கின்ற அனுபவத்தையும் காட்டுகிறார் திருப்பாணாழ்வார்.
பாரமாய பழவினை பற்றறுத்து என்னைத் தன்
வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி என்னுள் புகுந்தான்
கோரமாதவம் செய்தனன்கொல் அறியேன் அரங்கத்தம்மான் திரு
வார மார்பதன்றோ அடியேனை ஆட்கொண்டதே
முன்னைப் பழ வினைகளின் பாரத்தை எல்லாம் அறுத்து, என்னைக் குத்தகை (வாரம்) எடுத்துக்கொண்டுவிட்டான். அதுமட்டுமல்லாது எனக்குள் நுழைந்து கொண்டான். நான் என்ன தவம் செய்திருப்பேனோ தெரியாது, அரங்கத்து அம்மானின் மாலையணிந்த மார்பு என்னை ஆட்கொண்டுவிட்டது.
திருமால் திருவடி அடைய அப்படி எதுவும் பெரிதாக தவம் செய்ய வேண்டியதில்லை; அவன் அர்ச்சாவதார லயிப்பும் அதனைத் தாண்டி அவனுடைய அனுபவமும் எப்போதுமிருந்தால் போதும் என்ற கருத்தை இந்தப் பாசுரங்கள் மூலம் ஆழ்வார் வலியுறுத்துகிறார். திருப்பாணாழ்வார் கடைசியாகச் சொன்ன பாசுரத்தில்,
கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே
என்று முடிக்கும்போது, அவனைக் கண்ட கண்களால் வேறு எதையும் காணலும் தகுமோ?… மேக நிறத்தவன், மாடு மேய்த்தவன், வெண்ணெய் உண்டவன், என் உள்ளம் கவர்ந்தவன், தேவர்களின் தலைவன், திருவரங்கத்து உள்ளவன், என் அமுதான இவனைக் கண்டபின் என் கண்கள் வேறு எதையும் காணாது என்று சொல்லி அரங்கன் திரு முன் ஐக்கியமாகிவிடுகிறார் திருப்பாணாழ்வார்.
பத்துப் பாசுரங்கள்தான் என்றாலும் திருப்பாணாழ்வாரின் பாசுரங்களுக்கு வைணவ இலக்கியத்தில் தனிப் பெருமை உண்டு.
திருப்பாணாழ்வார் வாழி திருநாமம்
உம்பர் தொழும் மெய்ஞ்ஞானத்து உறையூரான் வாழியே
உரோஹிணிநாள் கார்த்திகையில் உதித்த வள்ளல் வாழியே
வம்பவிழ்தார் முனிதோளில் வந்தபிரான் வாழியே
மலர்க்கண்ணை வேறு ஒன்றில் வையாதான் வாழியே
அம்புவியில் மதிள் அரங்கர் அகம் புகுந்தான் வாழியே
அமலனாதிபிரான் பத்தும் அருளினான் வாழியே
செம்பொன் அடி முடி அளவும் சேவிப்போன் வாழியே
திருப்பாணன் பொற்பதங்கள் செகதலத்தில் வாழியே{jcomments on}