புத்தாண்டு பலன்கள் – 2011
https://www.dinamani.com/edition/astview.aspx?sid=newyear&ast=12
மீனம் :
நாளை முதல், ஏப்ரல் மாதம் வரையில் உள்ள கால கட்டத்தில் உங்களின் எண்ணங்கள் அனைத்தும் நல்லபடி ஈடேறும். நம்பிக்கை பலப்படும். பொருளாதார ரீதியில் நிம்மதி நிலவும். முக்கியப் பணிகளைத் தள்ளிப் போடாமல் உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். பயணங்களாலும் நன்மைகளை அடைவீர்கள். திட்டங்களைச் சரியாகத் தீட்டி நல்லபடியாக நிறைவேற்றுவீர்கள். தேக ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். பெற்றோர் உடல் நலனிலும் குறை ஏற்படாதென்பதால் மருத்துவச் செலவுகளும் குறையும். பொதுக் காரியங்களில் ஈடுபட்டு நற்பணிகளைச் செய்வீர்கள். நேர்மையான பாதையில் உங்கள் வாழ்க்கையை நடத்துவீர்கள். பெரியோர்களின் நல்லுரைகளைக் கேட்டு, அதன்படி செயலாற்றுவீர்கள்.
இந்தக் காலகட்டத்தில் கேது பகவான் உங்களுக்குத் தலைமை தாங்கும் பண்பை வழங்குவார். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். உங்களைச் சுற்றி உள்ளவர்களிடம் ஆரோக்யமான நட்பை உருவாக்கிக் கொள்வீர்கள். மனிதாபிமான அடிப்படையில் உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்கு உதவி செய்வீர்கள். உங்களின் பேச்சினால் அனைவரையும் கவர்வீர்கள். அதேநேரம் உடல் நலத்தைப் பற்றித் தேவையில்லாத பயம் உருவாகும்; அதை உதறித் தள்ளுங்கள்!
ராகு பகவான், சுய கௌரவம் பாதிக்கப்படாமல் உங்களை செயல்பட வைப்பார். நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளிடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பல தரப்பட்ட துறைகளில் ஆர்வம் காட்டுவீர்கள். மறைமுகப் போட்டி, பொறாமைகளையும் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். அதேநேரம் கடுமையாக உழைக்கும் காலகட்டமிது.
இந்த ஆண்டு மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் நீங்கள் தினந்தோறும் ஏதோ ஒரு வகையில் புதிய விஷயங்களைக் கற்று அறிவீர்கள். அனைத்துக் காரியங்களிலும் உங்கள் அனுபவ அறிவு கைகொடுக்கும். உற்றார், உறவினர்களுடன் சுமுகமாக நடந்து கொள்வீர்கள். அதேநேரம் அவ்வப்போது சிறு மன சஞ்சலங்களும் உருவாகும்.
ராகு பகவானால் கடல் கடந்த நாடுகளுக்குச் சென்று பொருளீட்டும் வாய்ப்பும் சிலருக்குக் கிடைக்கும். கடமைகளில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். அதேநேரம் விரும்பத்தகாத நபர்களின் தொடர்பும், நீங்கள் எதிர்பாராத வகையில் ஏற்பட்டுவிடும். எனவே புதிதாக அறிமுகமாகும் நபர்களிடம் கவனமாக இருக்கவும்.
ஆயினும் இந்தக் காலகட்டத்தில் கேது பகவான் உங்களை விவேகத்துடன் செயல்பட வைப்பார். நீங்கள் எப்போதோ செய்த முயற்சிகளுக்கு இந்தக் காலத்தில் நல்ல பலன்கள் விளையும். உங்களின் நண்பர்கள் உங்களுக்கும் உங்கள் சகோதர, சகோதரிகளுக்கும் இடையே இருந்த சச்சரவுகளைத் தீர்த்து வைப்பார்கள்.
உத்யோகஸ்தர்கள், அலுவலக வேலைகள் அனைத்தையும் சாதுர்யத்துடன் செய்து முடிப்பீர்கள். மேலும் சக ஊழியர்களின் ஆதரவால் வேலைப் பளு குறையும். உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். மேலதிகாரிகளை மதித்து நடந்துகொள்வீர்கள். பண வரவு அதிகரிக்கும். விரும்பிய இடமாற்றங்களையும் இந்த ஆண்டு பெறுவீர்கள்.
வியாபாரிகளுக்கு சமூகத்தில் புதிய அந்தஸ்து கிடைக்கும். கடையை நவீனப்படுத்தி வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சீராக இருக்கும். புதிய முதலீடுகளுக்கான முயற்சிகளும் வெற்றியைக் கொடுக்கும். வங்கிகளிடமிருந்து எதிர்பார்த்த கடன்களைப் பெறுவீர்கள். கூட்டாளிகள் உங்கள் சொல்கேட்டு நடப்பார்கள். போட்டிகளிலும் வெற்றி காண்பீர்கள்.
விவசாயிகள், தானிய விற்பனையை லாபகரமாகச் செய்து முடிப்பீர்கள். போட்டிகளுக்குத் தகுந்தவாறு நடவடிக்கைகளை எடுப்பீர்கள். வருமானம் எதிர்பார்த்ததற்கும் அதிகமாகக் கிடைக்கும். அதே சமயம் கால்நடைகளுக்காகவும், பூச்சி மருந்துக்காகவும் அதிகம் செலவு செய்ய நேரிடும். கூடுதலாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
அரசியல்வாதிகளுக்குப் பெயரும், புகழும் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். தொண்டர்களின் ஆதரவினால் பெரும் சாதனைகளைச் செய்வீர்கள். கட்சியில் முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும். எதிர்கட்சியினரையும் உங்கள் வாக்கு சாதுர்யத்தால் கவர்வீர்கள். உங்கள் செயல்கள் அனைத்தும் வெளிப்படையாகவே இருக்கும்.
கலைத்துறையினர், புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தித் தங்களின் திறமையை வெளிப்படுத்துவீர்கள். நீங்கள் செய்யும் முயற்சிகள் அனைத்தும் பெரும் வெற்றிகளைக் கொடுக்கும். இந்த ஆண்டு அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். சிலருக்கு விருது பெறும் யோகமும் உண்டாகும். கலை சம்பந்தமாக வெளிநாட்டுப் பயணங்களைச் செய்து, அதனால் கணிசமான வருமானத்தையும் காண்பீர்கள்.
பெண்மணிகளைப் பொறுத்தவரை கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். அதோடு குடும்பத்தினரோடு விட்டுக் கொடுத்து நடந்துகொண்டால் குழப்பங்களைத் தவிர்க்கலாம். மற்றபடி குழந்தைகள் உங்கள் சொல் கேட்டு நடப்பார்கள். ஆகார விஷயங்களில் கவனமாக இருந்து வயிறு சம்பந்தமான உபாதைகளிலிருந்து காத்துக் கொள்ளவும்.
மாணவமணிகள், விளையாட்டில் ஈடுபடும் நேரத்தைக் குறைத்துக் கொண்டு கல்வியில் மட்டுமே நாட்டம் செலுத்தவும். இதனால் கடுமையாக உழைத்து சராசரிக்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெறுவீர்கள். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் பழகவும்.
பரிகாரம்: முருகப் பெருமானை வழிபட்டு வரவும். தினசரி ஏதேனும் ஒரு ‘திருப்புகழ்’ பாராயணம் செய்தால் தீவினைகள் மாண்டு, நல்லனவே நடக்கும்!