புத்தாண்டு பலன்கள் – 2011
https://www.dinamani.com/edition/astview.aspx?sid=newyear&ast=9
" height="85" />தனுசு :
நாளை முதல், ஏப்ரல் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் ஆற்றல் பெருகும். அதிகாரம் தரும் பதவிகள் தேடி வரும். உங்களின் பெயர் பிரபலமாகும். உங்கள் செயல்களை வேகத்துடனும், விவேகத்துடனும் செய்வீர்கள். பண வரவில் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்வீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தர்ம காரியங்களிலும், ஆலயத் திருப்பணிகளிலும் ஈடுபடுவீர்கள். புதிய முயற்சிகளில் இறங்குவீர்கள். வீண் வம்பு செய்பவர்களிடம் நேருக்கு நேர் மோதுவீர்கள்; வெற்றியும் காண்பீர்கள்.
இந்தக் காலகட்டத்தில் ராகு பகவான் உங்களின் சுயமரியாதையை அதிகப்படுத்துவார். பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண்பீர்கள். மறைமுக எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சமாட்டீர்கள். வாழ்க்கை வசதிகள் பெருகும். விலகிச் சென்ற நண்பர்கள் திரும்ப வந்து நட்பு பாராட்டுவார்கள். அதை ஏற்றுக் கொள்ளுங்கள். அதேநேரம் எவரிடமும் மனதில் உள்ளதை முழுமையாக வெளிப்படுத்த வேண்டாம்.
கேது பகவானால் உங்களின் ஞாபக சக்தி வளரும். உங்கள் செயல்களில் பெருந்தன்மையுடன் ஈடுபடுவீர்கள். சிக்கலான விஷயங்களுக்கும் சிறப்பான தீர்வு காண்பீர்கள். உங்கள் மனசாட்சியை மதித்து நடப்பீர்கள்.
இந்த ஆண்டு மே மாதம் முதல், டிசம்பர் மாதம் வரையில் குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். உங்களிடம் தைரியமும், புத்திசாலித்தனமும் கொடி கட்டிப் பறக்கும். வெளிவட்டாரத்தில் உங்கள் முக்கியத்துவம் அதிகரிக்கும். வழக்குகளில் உங்கள் தரப்பு வாதங்களை ஆதாரத்துடன் எடுத்துக் கூறி வெற்றி பெறுவீர்கள். சிலர் சொந்த வீட்டிற்குக் குடிபெயர்வார்கள்.
ராகு பகவான், உங்களைப் பொழுதுபோக்கு விஷயங்களிலும் மகிழ்வுடன் ஈடுபடச் செய்வார்.
பெரிய திட்டங்களைச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு செயல்படுத்துவீர்கள். அதேசமயம் மனதில் உறுதியும், சகிப்புத் தன்மையும் தேவை.
இந்தக் காலகட்டத்தில் கேது பகவான் உங்களின் உழைப்புக்கு ஏற்ற பலன்களை அள்ளிக் கொடுப்பார். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். வருமானம் நன்றாக இருக்கும். உங்களைச் சார்ந்தவர்களுக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். எந்தச் சூழ்நிலையிலும் குறிக்கோளை விட்டு நீங்க மாட்டீர்கள். அதேநேரம் உங்களுக்கு உரிமை இல்லாத இடத்தில் தலையிட்டு ‘பஞ்சாயத்து’ பண்ண வேண்டாம்.
உத்யோகஸ்தர்கள், தங்கள் வேலைகளைக் குறித்த காலத்திற்குள் முடித்து, நற்பெயரைச் சம்பாதிப்பீர்கள். புதிய ஆற்றலைப் பெறுவீர்கள். வருடத்தின் முற்பகுதியில் மேலதிகாரிகள் பெரிதாக உதவாவிட்டாலும் உங்களுக்குத் தொல்லை தர மாட்டார்கள். மற்றபடி ஆண்டின் பிற்பகுதியில் உங்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். அலுவலக ரீதியான பயணங்களை வெற்றிகரமாக மேற்கொள்வீர்கள்.
வியாபாரிகள், புதிய முறைகளைப் பின்பற்றி வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். கடையை அழகாகச் சீரமைப்பீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் உங்களின் கடையை நோக்கி வரத் தொடங்குவார்கள். ஆண்டின் முற்பகுதியை விடப் பிற்பகுதியில் கூட்டாளிகள் சிறப்பான ஒத்துழைப்பை நல்குவார்கள். சமுதாயத்தில் உங்கள் பெயரும், புகழும் வளரும்.
விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். விவசாயப் பணிகளில் சிறு இடையூறுகள் ஏற்பட்டாலும் அவை தானாகவே விலகிவிடும். நீர்வரத்து அதிகமாக இருப்பதால் பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்; மாற்றுப் பயிர்களையும் பயிரிடுவீர்கள். கால்நடைகளை நல்ல முறையில் பராமரிப்பீர்கள். புதிய உபகரணங்களை வாங்கி விளைச்சலைப் பெருக்குவீர்கள்.
அரசியல்வாதிகள், அதிகாரமுள்ள பதவிகளைப் பெறுவீர்கள். உங்களின் பணியாற்றும் திறனைக் கட்சி மேலிடம் நேரில் பாராட்டும். இதனால் உற்சாகம் ஊற்றெடுக்கும். தொண்டர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். எடுத்த காரியங்கள் அனைத்தையும் முடிக்கும் வரை ஓய மாட்டீர்கள். தேவையில்லாத அலைச்சல்கள் இந்த ஆண்டு ஏற்படாது.
கலைத்துறையினரின் விடா முயற்சிகள் அனைத்தும் பெருத்த வெற்றியைத் தேடித் தரும். உங்களின் திறமைகளை முழுமையாகச் செயல்படுத்திப் பாராட்டு மழையில் நனைவீர்கள். பண வரவு நன்றாக இருந்தாலும் மனதில் ஏனோ மகிழ்ச்சி குறைவாகவே இருக்கும். உங்கள் நல்ல பெயரைத் தக்க வைத்துக்கொள்ளக் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். கடவுளை வழிபடுங்கள்! கவலைகள் நீங்கும்!
பெண்மணிகளுக்குக் கணவருடனான ஒற்றுமை நன்றாகவே இருக்கும். ஆன்மீக பலத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். அதேநேரம் உடல் நலத்தில் கவனம் தேவை. சகோதர, சகோதரிகளிடம் விரோதங்கள் ஏற்படலாம். எனவே யாரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம்.
மாணவமணிகள் கடுமையாக உழைத்து அதற்கேற்ற பலனைப் பெறுவீர்கள். கல்வியில் உயர்ந்த இடத்தைப் பெறுவதற்கு உகந்த ஆண்டாக இது அமைகிறது. மற்றபடி வெளிவிளையாட்டுகளில் கவனத்துடன் ஈடுபடவும்.
பரிகாரம்: சனி பகவானுக்கு எள் தீபமேற்றி வழிபடவும். ‘ராம, ராம’ என்று தினசரி 108 முறையாவது கூறி, அனுமனை மகிழ்ச்சிப்படுத்துங்கள்! ஆனந்தம் தேடி வரும்.