682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">
ஐப்பசி அனுஷம்: (14.00.2023) ஸ்ரீ ஞானாநந்த பாரதீ ஸ்வாமிகள், 34வது ஆராதனை மஹோத்ஸவம்!
பழுத்த அத்வைதியாகவும் ஸனாதனியாகவும் வேதாந்தியாகவும் பிறகு ஞானியாகவும் வாழ்ந்த ஸ்ரீ ஞானனந்தபாரதீ ஸ்வாமிகள் (பூர்வாசிரமத்தில் திருநெல்வேலி ஸ்ரீ. ஆர். கிருஷ்ணஸ்வாமி அய்யர், ) ஆதிசங்கரரிடமும், சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் ஜகத்குரு பரம்பரையிலும் அளவில்லாத ஈடுபாடும் பக்தியும் கொண்டிருந்தார். சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் 33-வது ஜகத்குரு, 34-வது ஜகத்குரு மற்றும் 35-வது ஜகத்குரு ஆகிய மூவரும் அவரிடம் தனிப் பிரியம் வைத்திருந்தார்கள்.
‘ஸ்ரீ சங்கரரின் மறு அவதாரம்’ என்று போற்றப்பட்ட ஸ்ரீ ஸச்சிதாநந்த சிவாபிநவ ந்ருஸிம்ஹ பாரதீ மஹா ஸ்வாமிகளிடம் தன் பால்யத்திலேயே மந்திரோபதேசம் பெற்றவர். பின்னர் ‘ஜீவன்முக்தர்’ என்று வணங்கப்பட்ட ஸ்ரீசந்திரசேகர பாரதீ மஹாஸ்வாமிகளிடம் விசேஷ பக்தியைச் செலுத்தி, ஸ்ரீ ஆசார்யர்களின் அருகாமையை நன்கு அனுபவித்து, அவருடைய பரம கிருபைக்குப் பாத்திரமானவர். யோகிகளின் சூடாமணியாக விளங்கிய ஸ்ரீ அபிநவவித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள், ஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி அய்யரின் குண விசேஷங்களையும், தீவிர வைராக்யத்தையும், சாஸ்திர கிரந்தங்களில் அவருக்கு இருந்த ஆழ்ந்த அறிவையும், மேலான குரு பக்தியையும் கண்டு சிலாகித்தார்கள்.
பின்னால் அவர் வயோதிகத்தை அடைந்தபோது ஸ்ரீமத் அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள், அவர் தகுந்த பாத்திரமாக இருப்பதைக் கண்டு திருப்தியடைந்து, தாம் வடக்கே பிருந்தாவன க்ஷேத்திரத்திற்கு யாத்திரையாகச் சென்றிருந்தபோது, ஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி அய்யரை அங்கு வரவழைத்து, தன் ஸந்நிதியிலேயே அவருக்கு உயர்ந்ததான ஸந்யாஸ ஆசிரமத்தை (3-11-1966) வழங்கி அருளினார். அப்போது இந்த ஞானிக்கு, ஸ்ரீமத் ஆசார்யாள் அவர்கள் தேர்ந்து வழங்கிய தீக்ஷா நாமமே “ ஸ்ரீ ஞானானந்த பாரதீ ” என்பதாகும்.
பின்னர் ஸ்ரீ ஞானானந்த பாரதீ ஸ்வாமிகள் தென்திசை யாத்திரையை மேற்கொண்டு, கடைசியில் மதுரை ஜில்லா மன்னாடிமங்கலம் என்ற ஒரு அமைதியான கிராமத்தில் தங்கியிருந்து, ஆசிரம தர்மங்களை நன்கு பரிபாலித்து வந்ததுடன் மனன நிதித்யாஸனாதிகளையும் கிரமமாகச் செய்து கொண்டு, பெரும்பாலும் மௌனத்தை அவலம்பித்து பல அரிய வேதாந்த கிரதங்களை எழுதிக் கொண்டும் இருந்தார்கள்.
ஸ்ரீ ஞானானந்தர் கைவல்யபதத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்த காலத்தில் ராமேச்வர யாத்திரையை மேற்கொண்டிருந்த ஸ்ரீ அபிநவவித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளும், அப்பொழுது புதிதாக பீடத்துக்கு வந்திருந்த ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளும் அச்சிறு கிராமத்திற்கு விஜயம் செய்து ஸ்ரீ ஞானானந்தருக்கு ஒருங்கே தரிசனம் கொடுத்து அனுக்ரஹம் செய்தார்கள்.
அதற்கு சிறிது காலத்திற்குப் பின், கடைசியில் தம் உயிர் பிரியப்போகும் காலத்தில் (09.04.1975 அன்று) அவர்களுக்கு குருவின் தெய்வீக தரிசனம் கிடைத்து அதனால் ஏற்பட்ட ஆனந்தம் முகத்தில் தவழ, கைகளை அஞ்ஜலிபத்தமாக வைத்துக் கொண்டிருந்த நிலையில் மன்னாடிமங்கலத்திலேயே கைவல்யமடைந்தார்கள். அவருடைய பிருந்தாவனம் அங்கு உள்ளது.
சிறந்த கிரந்த கர்த்தாவான இவர், சிருங்கேரி ஆசார்யர்களைப்பற்றி எழுதிய பல புஸ்தகங்களில் ஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகளின் உபதேச மொழிகளை அப்படியே குறிப்பெடுத்துக் கொண்டு வார்த்தைகள் மாறாமல் தந்திருக்கிறார். அதனால் அந்த கிரந்தங்களை படிக்கும்போது ஸ்ரீ ஆசார்யர்களின் குரலையே நேரில் கேட்பது போன்ற ஓர் ஆச்சரியகரமான அனுபவம் நமக்கு உண்டாகிறது. தனது வாழ்நாளில் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தை அலங்கரித்த நான்கு ஆச்சார்ய மஹா புருஷர்களையும் (33 முதல் – 36 வரை) தரிசிக்கும் வாய்ப்பை பெற்ற ஸ்ரீ ஞானானந்த பாரதீ ஸ்வாமிகளின் பாக்கியத்தை என்ன சொல்வது!… யாருக்குக் கிடைக்கும் இப்படி ஒரு பாக்கியம்?