சபரிமலை கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த புதிய திட்டம் தேவை: இந்து முன்னணி

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்


682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

sabarimalai crowd

சபரிமலையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் உடனடியாக செய்து தர வேண்டியும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த புதிய திட்டங்களை கேரளா அரசு செயல்படுத்த வேண்டியும் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றினை வெளியிடுள்ளார். அவரது அறிக்கையில் கோரியிருப்பதாவது…

சபரிமலை ஐயப்பன் கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். வருடம் தோறும் கார்த்திகை முதல் தை மாதம் வரை கோடிக்கணக்கான பக்தர்கள் கடும் விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்க வருகின்றனர். தென் மாநிலங்கள் மட்டுமல்லாது, வட மாநிலங்களில் இருந்தும் சபரிமலைக்கு பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

அங்கு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படுகின்றனர். குடிநீர், கழிப்பிடம், தங்குமிடம் ஆகிய வசதிகள் கூட்டத்திற்கு தகுந்த மாதிரி இல்லாமல் மிகவும் குறைவாக உள்ளது. வருடா வருடம் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே இருப்பதால் அதற்கு தகுந்தவாறு கேரளா அரசாங்கமும், கோவில் நிர்வாகமும் இணைந்து அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும்.

10 வயதிற்கு சிறு குழந்தைகள் முதல் 50 வயதிற்கு மேலான பெண்கள் உள்பட பலரும் வருகை தருவதால் கூட்ட நெரிசலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அதுவும் கடந்த மூன்று ஆண்டுகளாக சபரிமலையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த எந்த விதமான சிறப்புத் திட்டங்களும் இல்லை. சபரிமலையில் பணியாற்றும் காவல் துறையினர் கூட்ட நெரிசலை தவிர்க்க கடுமையாக பணியாற்றி வந்தனர். ஆனால் தற்பொழுது அவர்கள் அந்தப் பணியை மனிதாபிமான முறையில் செய்வதில்லை.
நேற்று கூட சபரிமலையில் கூட்ட நெரிசல் அதிகமாகி பக்தர்கள் அவதிப்பட்ட சூழ்நிலையில் காவல்துறையினர் சரிவர பணியாற்றவில்லை என்று கோவில் நிர்வாகம் கேரளா ஐ.ஜிக்கு தகவல் கொடுத்த பின்பு, அவர் நேரடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு காவல்துறையினரை பணியாற்ற வைத்தார் என்ற செய்தி நேற்று பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் வந்துள்ளது.

காவல்துறையினருக்கும், கோவில் நிர்வாகத்திற்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாகவே பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு செல்ல 10 மணி நேரம் முதல் 15 மணி நேரம் ஆகிறது.

ஒவ்வொரு குறிப்பிட்ட இடத்திலும் அதிகமான பக்தர்கள் கடுமையான நெருக்கடியில் நிற்பதால் பக்தர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உடல் நிலை மோசமாகிறது. ஒவ்வொரு குறிப்பிட்ட இடத்திற்கும் கழிப்பிட வசதி குடிநீர் வசதிகளை உடனடியாக ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இணையத்தின் வாயிலாக பதிவு செய்பவர்களை அந்தந்த தேதி வாரியாக முறையாக அனுமதித்தால் கூட்ட நெரிசலை சரி செய்ய முடியும். ஆனால் கோவில் நிர்வாகமோ ஒரே நாளில் அனைவரையும் அனுமதிப்பதால் பக்தர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது.

அதேபோல வாகனங்களை நிறுத்தும் நிலக்கல்லிலிருந்து பம்பைக்குச் செல்ல அதிகமான பேருந்து வசதிகளை கேரளா அரசு ஏற்படுத்தி தர வேண்டும். ஒரே பேருந்தில் அளவுக்கு அதிகமான ஐயப்ப பக்தர்களை ஏற்றுவதால் காலதாமதமும் ஏற்படுகிறது. நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு செல்ல ஒரு மணி நேரம் போதுமானது. ஆனால் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவால் நிலக்கல்லில் மூன்று மணி நேரம் முதல் நான்கு மணி நேரம் வரை பக்தர்கள் காத்துக் கிடக்கின்றனர்.

சன்னிதானத்தில் தரிசனம் முடித்து பக்தர்கள் கீழே இறங்கும் கழுதை பாதை பல பகுதியில் பாதை சேதம் ஏற்பட்டு இருப்பதால் பக்தர்கள் நடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இந்தப் பாதையையும் புனரமைத்து தர கேரளா அரசாங்கம் முன்வரவேண்டும்.

பெருவழிப்பாதையில் செல்லும் பக்தர்கள் இரண்டு நாட்கள் மூன்று நாட்கள் என தங்கிச் செல்வது வழக்கம். பெருவழிப் பாதையில் அதிகமான வியாபார கடைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் தங்குவதற்கும் ஓய்வெடுப்பதற்கும் சிரமம் ஏற்பட்டு வருகிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

நேற்று கூட கூட்ட நெரிசலால் ஐயப்ப பக்தர் ஒருவர் மரணம் அடைந்த செய்தி பக்தர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

சபரிமலை மண்டல பூஜை மற்றும் மகர ஜோதி காலங்களில் பக்தர்களால் அதிகமான வருமானம் வருகிறது. அந்த வருமானத்தைக் கொண்டு கோவிலுக்கு நிறைய அடிப்படை வசதிகளை உருவாக்கித் தர முடியும். ஆனால் வருவாயை மட்டும் எடுத்துக் கொண்டு பக்தர்களின் நலனில் அக்கறை காட்டாமல் அரசாங்கம் இருந்து வருகிறது.

குறிப்பாக இந்த ஆண்டு ஐயப்ப பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை கேரளா அரசாங்கம் விதித்திருக்கிறது. நாடு முழுக்க இருந்து வரும் ஐயப்ப பக்தர்களை இது கவலைக்குள்ளாக்கியிருக்கிறது.

உடனடியாக கோவில் நிர்வாகமும், கேரளா அரசும் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ள நிர்வாக சீர்கேடுகளை சரி செய்து ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பையும், உரிய அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என இந்துமுன்னணி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்..



Leave a Reply