பேயாழ்வார் சரிதம்

பேயாழ்வார்

முதலாழ்வார்கள் மூவரும் சந்தித்த சம்பவம்

முதலாழ்வார்கள் என்று மக்கள் போற்றிப் பணிந்த பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய இம்மூவரின் பெருமையையும் பக்தி நிலையையும் உலகுக்குக் காட்ட எண்ணினான் பரந்தாமன்.

தனித்தனியாகத் தன்னுடைய புகழைப் பாடிவரும் இம்மூவரையும் ஒன்றிணைத்து, ஒரே சங்கமமாக ஆக்கி, அவர்களின் மகிமையைக் காட்ட எண்ணிய பாற்கடல்வாசன், ஒரு நாள் இம்மூவரையும் ஒரே இடத்தில் சந்திக்க வைத்தான்.

பொய்கையார், பூதத்தார், பேயார் – இம்மூவரும் ஒரு நாள் ஒருவரை ஒருவர் அறியாமல், பல்வேறு ஊர்களுக்கும் யாத்திரை செய்துவிட்டு, திருக்கோவிலூர் திருத்தலத்துக்கு வந்து சேர்ந்தனர். அங்குள்ள பெருமானை சேவித்து மகிழ்ந்தனர். உலகளந்த உத்தமனான அப்பெருமான், இம்மூவரின் பக்தியை உலகுக்குக் காட்ட எண்ணினார்.

முதலில் முதலாழ்வார்களில் முதல்வரான பொய்கையாழ்வார் திருக்கோவிலூர்பிரானின் தரிசனம் முடிந்து ஒரு வீட்டின் திண்ணையில் ஒட்டிக் கொண்டார். அவருக்குப் படுத்துக் கொள்ளப் போதுமான இடம் கிடைத்தது. ஸ்ரீமந் நாராயணனின் கருணையைப் பாடியபடியே அவர் அந்தத் திண்ணையில் படுத்துக்கொண்டார்.

ஸ்ரீமந் நாராயணன் விருப்பப்படி, சற்று நேரத்துக்கெல்லாம் பூதத்தாழ்வாரும் அவ்விடத்துக்கு வந்து சேரவே, திண்ணையில் படுத்துக் கொண்டிருந்த பொய்கையாழ்வார் எழுந்து அவரை வரவேற்று, இந்த இடத்தில் ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம் என்று சொல்லி அமரச் செய்தார்.

இருவரும் எம்பிரான் பெருமைகளைப் பாடியபடியே நேரம் போக்கினர். அப்போது சற்றே மழை தூறியது. முதலாழ்வார்களில் மூன்றாமவரான பேயாழ்வார் அவசரமாக அடைக்கலம் தேடி அவ்விடத்துக்கு வந்து சேர, அந்தத் திண்ணையில் அமர்ந்திருந்த பொய்கையாழ்வாரும் பூதத்தாழ்வாரும் எழுந்து நின்று அவரை வரவேற்று, இவ்விடத்தில் ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம், மூவர் நிற்கலாம் என்று சொல்லி வரவேற்றனர்.

பெருமழை பெய்ததால் வேறு எங்கும் செல்ல வழியின்றி, அந்தத் திண்ணையில் மூவரும் நின்று கொண்டனர். இடநெருக்கடியால் மூவரும் நெருக்கிக் கொண்டு நின்றவாறு, பெருமானின் பெருமைகளை ஒவ்வொருவரும் சொல்லிப் போற்றிக் கொண்டிருந்தனர்.

திடீரென அங்கே இன்னும் இடநெருக்கடி அதிகமாயிற்று. அம்மூவருக்கும் இடையில் இன்னும் ஒருவர் நின்று அங்கு இட நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். அவர் தாங்கள் வணங்கும் ஸ்ரீமந் நாராயணனே என்பதை உணர்ந்து கொண்டனர் அம்மூவரும்!

இவர்களுக்குக் காட்சியளித்த பெருமானின் பெருமையை, தாங்கள் தரிசித்து உணர்ந்து கொண்ட அப் பெருமானின் சிறப்புகளை, தனித்தனியாக பாசுரங்களால் மூவரும் பாடத் தொடங்கினர். அப்படியே பொய்கையாழ்வாரின் முதல் திருவந்தாதியும், பூதத்தாழ்வாரின் இரண்டாம் திருவந்தாதியும், பேயாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதியும் அங்கே உருவானது.

 

Leave a Reply