பேயாழ்வாரின் திருச்சரிதம்!
திருமயிலை என்னும் திருத்தலம் பண்டைய சிறப்பும் பொலிவும் பெற்றுத் திகழும் திருத்தலம். இப்போது மிகவும் பெரிய நகரமாகக் காட்சியளிக்கும் இந்தத் தலம், அந்நாட்களில் புதர்கள் மண்டி, மரங்கள் அடர்ந்து காடாக இருந்திருக்கிறது. இந்தத் தலத்துக்குப் பெருமை சேர்க்கும் ஆலயங்கள் இரண்டு. வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை என்று ஆண்டாள் பாடியபடி, மாதவப் பெருமாளும் கேசவப் பெருமாளும் தனித்தனியே கோயில் கொண்டு இங்கே அருள்பாலிக்கிறார்கள்.
சிறப்பு வாய்ந்த இந்தத் தலத்தில் கேசவப் பெருமாள் திருக்கோயில் அருகில் உள்ள ஒரு குளத்தில் ஓர் அதிசயமான செவ்வல்லிப் பூ மலர்ந்திருந்தது. அந்த மலரிலே, சித்தார்த்தி வருடம், ஐப்பசி மாதம் தசமி திதியில், சதய நட்சத்திரத்தில், திருமாலின் ஐம்படைகளில் ஒன்றாகிய நந்தகம் எனும் வாளின் அம்சமாக பேயாழ்வார் அவதரித்தார் (கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இடைப்பகுதி). திருமாலின் திருவருளால் பெரும் புலமை கைவரப் பெற்றார்.
திருமால் திருவடிகளில் தம் சிந்தையைச் செலுத்தி வாழ்நாளை அவன் பணிக்கே அர்ப்பணித்தார். அவர் உள்ளம், பாம்பணையில் பள்ளி கொண்ட பெருமானிடமே நிலைத்து, எப்போதும் நினைக்கலாயிற்று. மற்றொன்றும் நாடாது, மண் மனை வேண்டாது, அவன் திருவடிகளையே எண்ணி எண்ணிக் காலம் கழித்தார்.
கண்களே நாராயணாவென்று திருப் பெயர்கள் பல சொல்லி, தம் கைகளால் தொழுது மண்ணுலகை உண்டு உமிழ்ந்த வண்டுகள் மொய்க்கும் மாலையணிந்த கண்ணனையே என்றும் காண்பீராக என்பார். வாயே என்றும் இறவாத சீரிய இணையடிக்கே ஆளாகி ஒவ்வொரு நாளும் செம்மை பொருந்திய திருமாலை வாழ்த்துவாயாக என்பார். நாளும் திருமாலின் திருப்புகழையே பாடுக என் நெஞ்சே! என்பார்.
அரங்கனின் அருட் புகழை பாமாலையாக்கி நாள்தோறும் தொடுப்பார் பேயாழ்வார். அப்போது அவர் நெஞ்சம் உருகி விடும். கண்களில் ஆனந்த வெள்ளம் கரைபுரண்டோ டும். பரமனின் திருவடிக்கே பரகதியருளும் தன்மை உண்டு என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்து பாடியாடுவார்.
பெருமாளைப் போற்றிப் பாடுவதோடு, வைணவ அடியார் குழாங்களோடு கூடி, அவன் பெருமைகளைச் சொல்லி அனைவரையும் அந்தப் பேரின்பத்திலே திளைக்க வைத்தார். திருமால் பெருமை பாடிக் களிப்புற்று ஆடித் திரிவார். அவரைக் கண்டார், இவர் கருவிலேயே ஞானமாகிய திருவுடையராய் அவதரித்தவர் என்று போற்றினார்கள்.
செந்தாமரையிலுள்ள இனிய மதுவை உண்ட வண்டுகள், அதனுள் மயங்கிக் கிடப்பது போன்று, இவரும் திருமாலின் மேல் ஆராக் காதல் கொண்டு, வேறு எதையும் நினைத்திலேன் என்று அவனுள்ளேயே மூழ்கிக் கிடந்தார். பகவான் மீதான பக்திப் பரவசத்தில் அதுவே ஒரு வெறிபோல் தோன்றும்படி அவர் அழுவார்; தொழுவார்; ஆடுவார்; பாடி அரற்றுவார். இறை பக்தியில் தன்னை முழுதும் மறந்து, பேயர் போலும் பித்தர் போலும் திரிந்தார். இதனால் பக்தர்களால் அவர் பேயாழ்வார் என்று போற்றப்பட்டார்.
பேயாழ்வார், திருத்தலங்கள் பல சென்று திருமாலைப் போற்றிப் பாடி வந்தார். இவருடைய தீவிரமான பக்தியின் தன்மையை வெளியுலகுக்குத் தெரியப்படுத்த எண்ணி, பொய்கையாழ்வாரையும் பூதத்தாழ்வாரையும் இவரையும் கூட்டிவைத்து, இவர்களோடு தானும் சேரத் திருவுள்ளம் கொண்டான் திருமகள்நாதன். அந்த நாளும் வந்தது.