பேயாழ்வார் சரிதம்

பேயாழ்வார்

முதலில் பொய்கையாழ்வார் பாடத் தொடங்கினார்…

 

வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காக – செய்ய

சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை

இடராழி நீங்குகவே என்று.

என்று தொடங்கி,

ஓரடியும் சாடுதைத்த ஒண்மலர்ச் சேவடியும்

ஈரடியும் காணலாம் என்னெஞ்சே – ஓரடியில்

தாயவனைக் கேசவனைத் தண்துழாய் மாலைசேர்

மாயவனையே மனத்து வை

– என்று நிறைவு செய்து நூறு அந்தாதிப் பாடல்களால் முதல் திருவந்தாதியைப் பாடினார்.

தொடர்ந்து, பூதத்தாழ்வார் பாடத் தொடங்கினார்.

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக

இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி

ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு

ஞானத் தமிழ்புரிந்த நான்.

– என்ற பாடலை முதல் பாடலாக வைத்துப் பாடத் தொடங்கினார்.

மாலே! நெடியோனே! கண்ணனே! விண்ணவர்க்கு

மேலா! வியன்துழாய்க் கண்ணியனே! – மேலால்

விளவின்காய் கன்றினால் வீழ்த்தவனே என்றன்

அளவு அன்றால் யானுடைய அன்பு.

– என்ற பாடல் முடிவாக வர இரண்டாம் நூற்றந்தாதியைப் பாடி முடித்தார்.

மூன்றாவதாக பேயாழ்வார் பரமனின் பெருமையைப் போற்றும் வண்ணம், பரமனின் திருக்காட்சியைக் கண்ட அந்த அனுபவத்தைப் பாசுரங்களில் பாடத் தொடங்கினார்…

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்

அருக்கன் அணிநிறமும் கண்டேன் – செருக்கிளரும்

பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்

என்னாழி வண்ணன்பால் இன்று.

– என்ற பாடலைப் பாடத் தொடங்கி, நூறு பாசுரங்களைப் பாடினார். மூன்றாவது திருவந்தாதியின் நூறாவது பாசுரமாக,

சார்வு நமக்கு என்றும் சக்கரத்தான், தண்துழாய்த்

தார் வாழ் வரை மார்பன் தான் முயங்கும் – கார் ஆர்ந்த

வான் அமரும் மின் இமைக்கும் வண் தாமரை நெடுங்கண்,

தேன் அமரும் பூமேல் திரு.

– என்ற பாசுரத்தைப் பாடி முடித்தார்.

இப்படி மூவரும் தங்கள் முதல் சந்திப்பின்போதே இறையனுபவத்தைக் கண்டு உணர்ந்தார்கள். அதன் பின்னர் தம் பாசுரங்கள் கொண்டு மூவரும் சேர்ந்து பல தலங்களுக்கும் சென்று பரமன் புகழ் பாடி பக்தி மார்க்கம் பரப்பினர்.

இனி, பேயாழ்வாரின் சில பாசுரங்களில் இருந்து அவருடைய இறையனுபவத்தைக் காண்போம்.

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் என்று அவனைக் கண்ட அனுபவத்தை அடுத்த பாடலில் இப்படிச் சொல்கிறார்.

இன்றே கழல் கண்டேன் ஏழ்பிறப்பும் யான் அறுத்தேன்,

பொன் தோய் வரைமார்பில் பூந்துழாய், – அன்று

திருக்கண்டு கொண்ட திருமாலே! உன்னை

மருக்கண்டு கொண்டு என் மனம். (2)

– என்று திருமாலே உனைக் கண்டுகொண்ட இந்தக் கணத்திலிருந்து, எல்லாப் பிறவிகளையும் இனித் தொடரமுடியாதபடி அறுத்துவிட்டேன் என்று உள்ளம் மகிழ்ந்து பாடுகிறார். அவன் தரிசனம் கண்ட அடுத்த கணமே பிறவாப் பெருவீடு நிச்சயம் கிடைத்துவிடும் என்பதை உணர்த்துகிறார் இந்தப் பாசுரம் மூலம்.

பகவானின் பெருமையைப் பாடிப் பரவுவதே பக்தனின் பணி என்பதை எடுத்துக்காட்டும் ஆழ்வார், அவனின் பெருமையைச் சொல்ல அந்த சரஸ்வதியாலும் இயலாது என்கிறார். பல இடங்களில் ஆயிரம் தலைகளையுடைய ஆதிசேஷனாலும் நின் பெருமையை விவரிக்க முடியாது; அவ்வளவு பெருமை பெற்றவன் என்று உயர்வு நவிற்சி தோன்றப் பாடியிருக்கும் பாங்கை நாம் காண்கிறோம்.

ஆனால் பேயாழ்வார் இங்கே, நாவுக்கு அரசியான பிரம்மனின் நாயகி சரஸ்வதியாலேயே, பூமகள் கேள்வனான திருமாலின் பொலிவை வர்ணிக்க முடியாது… அப்படி இருக்கும்போது, நாமெல்லாம் என்ன செய்து விடப்போகிறோம்? என்ற எண்ணம் தோன்ற இந்தப் பாசுரத்தில் வெளிப்படுத்துகிறார்.

நிறம் வெளிது; செய்து; பசிது; கரிது என்று

இறை உருவம் யாமறியோம் எண்ணில்  -நிறைவு உடைய

நாமங்கை தானும் நலம் புகல வல்லளே

பூமங்கை கேள்வன் பொலிவு?

அவன் நிறம் வெள்ளையா, சிவப்பா, பச்சையா, கறுப்பா என்றெல்லாம் எண்ணிப் பார்க்க முடியாது. ஞானத்தில் நிறைந்த சரஸ்வதியே திருமகள் கணவனின் பொலிவை வர்ணிக்க முடியாது போகும்போது, நாமெல்லாம் எம்மாத்திரம் என்கிற கருத்து எழுகிறது. என்றால், அவன் பொலிவை வர்ணிப்பதற்குக்கூட, ஒரு ஞானம் தேவைப்படுகிறது என்பது புரியும்.

இந்த ஞானம் அடைவதற்கு முன்னர், மனம் பலவித நிலைகளில் அலைபாயும். அதுதான் மனித மனத்தின் இயல்பு. குரங்கு கிளைவிட்டு கிளை தாவுதல்போலே, அக்கரைக்கு இக்கரை பச்சை என்று கண்கள் உணர்த்துதலால் அங்கும் இங்கும் தாவிப்போக மனம் ஆசைப்படும். ஆனால், எல்லாம் உணர்ந்த அனுபவசாலிகளே உண்மை எதுவென உரைத்து உலகோரை நல்வழிப்படுத்துவர். அந்த ஒரு நிலையில் ஆழ்வார் தம் அனுபவத்தால் கண்ட உண்மைப் பரம்பொருளை இவ்வாறு கூறுகிறார்.

அது நன்று இது தீது என்று ஐயப்படாதே

மது நன்று தண் துழாய் மார்பன் – பொது நின்று

பொன் அம் கழலே தொழுமின் முழு வினைகள்

முன்னம் கழலும் முடிந்து

– என்னும் பாடலால், அன்பர்களே உங்கள் உள்ளத்திலே ஒரு சிறிதும் ஐயம் கொள்ள வேண்டாம். அது நல்லது, இது கெட்டது ஆதலால் இதை விட்டு அதைப் பற்றுவோம் என்றும் எண்ண வேண்டாம். எது நல்லது எது கெட்டது என்ற சந்தேகங்களும் வேண்டவே வேண்டாம். தேன் சிந்தும் குளிர்ந்த துளசி மாலையை அணிந்த மார்புடைய திருமால் எல்லோருக்கும் பொதுவாக நின்றவன். அவனுடைய அழகுப் பாதங்களை வணங்குங்கள். அதுபோதும்… உடனே உங்கள் வினைகள் எல்லாம் நீங்கள் தொழுது முடிப்பதற்கு முன்பேயே ஓடிப்போய்விடும். மீண்டும் உங்களை அவை தொடரவே மாட்டா. முடிவாக விலகிப் போய்விடும் என்று தேர்ந்து தெளிந்து அறிவிக்கிறார்.

சிவனையும் திருமாலையும் ஒருங்கே கண்ட பொன்திகழு மேனிப் புரிசடையும் என்ற பொய்கையாழ்வாரின் கருத்தைப் போல், பேயாழ்வாரும் தம் பாசுரத்தில் காட்டுகிறார்.

தாழ் சடையும் நீள் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்

சூழ் அரவும் பொன் நாணும் தோன்றுமால்  -சூழும்

திரண்டு அருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு

இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து –

– என்று பாடுகிறார்.

ஒருபுறம் தாழ்ந்த சடை. மறுபுறம் நீண்ட திருமுடி. ஒரு பக்கம் அழகிய மழு. மறுபக்கம் சக்கரப் படை. சுற்றிய நாகம் ஒருபுறம். பொன் அரைஞாண் மறுபுறம். இவ்வாறு சேராச் சேர்த்தியாக, சங்கரநாராயண வடிவில் நாற்புறமும் அருவி விழும் திருவேங்கடத்தில் ஒரே வடிவமாய் பொருந்தி விளங்குவது என்ன ஆச்சரியம்! தனக்கே உரிய உருவில் தன்னைப் பெறத் தவம் செய்பவன் உருவம் சேர்ந்ததே என்று ஆச்சர்யத்தால் பாடுகிறார்.

பேயாழ்வார் தான் சென்ற வைணவத் திருத்தலங்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறார்:-

விண்ணகரம் வெஃகா விரி திரை நீர் வேங்கடம்

மண் நகரம் மாமாட வேளுக்கை மண்ணகத்த

தென்குடந்தை தென் திருவரங்கம் தென்கோட்டி

தன் குடங்கை நீரேற்றான் தாழ்வு.

மாவலியிடம் தன் உள்ளங்கையில் நீர் ஏற்ற திருமால், தன் நீர்மை குணத்தால் எழுந்தருளிய திருப்பதிகள், திருவிண்ணகரம், திருவெஃகா, நீர் வளமுள்ள திருவேங்கடம், மாடங்கள் உள்ள திருவேளுக்கை, பூமியின் நடுநாயகமாகத் திகழும் திருக்குடந்தை, தேன் துளிர்க்கும் சோலைகள் கொண்ட திருவரங்கம், தென்புறத்தே உள்ள திருக்கோஷ்டியூர் என்று அடுக்குகிறார்.

பேயாழ்வார் வாழி திருநாமம்

திருக்கண்டேன் என நூறும் செப்பினான் வாழியே

சிறந்த ஐப்பசியில் சதயம் செனித்த வள்ளல் வாழியே

மருக்கமழும் மயிலை நகர் வாழ வந்தோன் வாழியே

மலர்க்கு அரிய நெய்தல் தனில் வந்து உதித்தான் வாழியே

நெருக்கிடவே இடைகழியில் நின்ற செல்வன் வாழியே

நேமிசங்கன் வடிவழகை நெஞ்சில் வைப்போன் வாழியே

பெருக்கமுடன் திருமழிசைப்பிரான் தொழுவோன் வாழியே

பேயாழ்வார் தாளிணை இப்பெருநிலத்தில் வாழியே

 

– அடியேன்,

செங்கோட்டை ஸ்ரீராம்{jcomments on}

Leave a Reply