மூன்றாம் திருவந்தாதி

பேயாழ்வார்

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:

பேயாழ்வார் அருளிச்செய்த

மூன்றாம் திருவந்தாதி

தனியன்

குருகை காவலப்பன் அருளிச் செய்தது

நேரிசை வெண்பா

சீராரும் மாடத் திருக்கோவ லூரதனுள்

காரார் கருமுகிலைக் காணப்புக்கு, – ஓராத்

திருக்கண்டேன் என்றுரைத்த சீரான் கழலே,

உரைக்கண்டாய் நெஞ்சே. உகந்து.

மூன்றாம் திருவந்தாதி

2282:

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும்

அருக்கன் அணிநிறமும் கண்டேன், – செருக்கிளரும்

பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன்,

என்னாழி வண்ணன்பால் இன்று. (2) 1

2283:

இன்றே கழல்கண்டேன் ஏழ்பிறப்பும் யானறுத்தேன்,

பொன்தோய் வரைமார்வில் பூந்துழாய், – அன்று

திருக்கண்டு கொண்ட திருமாலே,உன்னை

மருக்கண்டு கொண்டேன் மனம். 2

 

2284:

மனத்துள்ளான் மாகடல்நீ ருள்ளான், மலராள்

தனத்துள்ளான் தண்டுழாய் மார்பன், – சினத்துச்

செருநர்உகச் செற்றுகந்த தேங்கோத வண்ணன்,

வருநரகம் தீர்க்கும் மருந்து. 3

 

2285:

மருந்தும் பொருளும் அமுதமும் தானே,

திருந்திய செங்கண்மா லாங்கே, – பொருந்தியும்

நின்றுலக முண்டுமிழ்ந்தும் நீரேற்றும் மூவடியால்,

அன்றுலகம் தாயோன் அடி. 4

 

2286:

அடிவண்ணம் தாமரை யன்றுலகம் தாயோன்,

படிவண்ணம் பார்க்கடல்நீர் வண்ணம், – முடிவண்ணம்

ஓராழி வெய்யோ னொளியு மஃதன்றே

ஆராழி கொண்டாற் கழகு? 5

 

2287:

அழகன்றே யாழியாற் காழிநீர் வண்ணம்,

அழகன்றே யண்டம் கடத்தல், – அழகன்றே

அங்கைநீ ரேற்றாற் கலர்மேலோன் கால்கழுவ,

கங்கைநீர் கான்ற கழல்? 6

 

2288:

கழல்தொழுதும் வாநெஞ்சே. கார்கடல்நீர் வேலை,

பொழிலளந்த புள்ளூர்திச் செல்வன், – எழிலளந்தங்

கெண்ணற் கரியானை எப்பொருட்கும் சேயானை,

நண்ணற் கரியானை நாம். 7

 

2289:

நாமம் பலசொல்லி நாராய ணாவென்று,

நாமங்கை யால்தொழுதும் நன்னெஞ்சே. – வா,மருவி

மண்ணுலக முண்டுமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய்,

கண்ணனையே காண்கநங் கண். 8

 

2290:

கண்ணுங் கமலம் கமலமே கைத்தலமும்,

மண்ணளந்த பாதமும் மற்றவையே, எண்ணில்

கருமா முகில்வண்ணன் கார்கடல்நீர் வண்ணன்,

திருமா மணிவண்ணன் தேசு. 9

 

2291:

தேசும் திறலும் திருவும் உருவமும்,

மாசில் குடிப்பிறப்பும் மற்றவையும் – பேசில்

வலம் புரிந்த வாஞ்சங்கம் கொண்டான்பே ரோத,

நலம்புரிந்து சென்றடையும் நன்கு. 10

 

 

Leave a Reply