திருப்பதியிலிருந்து 3 கி.மீ. தொலைவிலுள்ள இக்கோயிலில் இருப்பவர் திருமலை ஸ்ரீ வெங்கடேஷ்வரரின் மனைவி ஸ்ரீ பத்மாவதி தாயாராவார். அதனால், திருமலையில் செய்யப்படும் அத்தனை விஷேச பூஜைகளும் பத்மாவதி தாயார் கோயிலிலும் செய்யப்பட்டு வருகிறது.
இக்கோயிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவம் டிசம்பர் 2 முதல் 10 தேதி வரை நடைபெற உள்ளது. இந்த உற்சவத்தில் பத்மாவதி தாயார், சின்ன சேஷ வாகனம், பெரிய சேஷ வாகனம், ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், ஹனுமந்த வாகனம், கருட வாகனம், சூர்ய வாகனம், சந்திர வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் வெவ்வேறு அலங்காரங்களில் கோயிலின் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
இந்த பிரம்மோற்சவத்தில் பல மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்து கொள்ள இருப்பதால் கோயிலின் மாட வீதிகளில் வண்ணக் கோலங்கள் போடுவது, பந்தல் அமைப்பது உள்ளிட்ட அலங்கார பணிகளும், பக்தர்களுக்கு குடிநீர் வசதி, அடிப்படை வசதி, முதலுதவி மையம், மருத்து மையம் உள்ளிட்ட வசதிகள் செய்துதர தீவிரமாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கோயிலின் ஆஸ்தான மண்டபத்தில் கலாசார நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.
கார்த்திகை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருச்சானுர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.