திருவாய்மொழி ஏழாம் பத்து

நம்மாழ்வார்

 

 

 

style="text-align: center;">7ஆம் பத்து 5ஆம் திருவாய்மொழி

3497

கற்பார் இராம பிரானையல்லால்மற்றும் கற்பரோ?

புற்பா முதலாப் புல்லெறும் பாதியொன் றின்றியே

நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்

நற்பாலுக் குய்த்தனன் நான்முக னார்பெற்ற நாட்டுளே. (2) 7.5.1

 

3498

நாட்டில் பிறந்தவர் நாரணற் காளன்றி யாவரோ

நாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா

நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு

நாட்டை யளித்துய்யச் செய்து நடந்தமை கேட்டுமே? 7.5.2

 

3499

கேட்பார்கள் கேசவன் கீர்த்தியல் லால்மற்றூம் கேட்பரோ

கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுக ளேவையும்

சேட்பால் பழம்பகைவன் சிசு பாலன் திருவடி

தாட்பால் அடைந்த தன்மை யறிவாரை யறிந்துமே? 7.5.3

 

3500

தன்மை யறிபவர் தாமவற் காளன்றி யாவரோ

பன்மைப் படர்பொருள் ஆதுமில் பாழ்நெடுங் காலத்து

நன்மைப் புனல்பண்ணி நான்முகனைப்பண்ணி

தன்னுள்ளே தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே? 7.5.4

 

3501

சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழலன்றிச் சூழ்வரோ

ஆழப் பெரும்புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தை

தாழப் படாமல்தன் பாலொரு கோட்டிடைத் தான்கொண்ட

கேழல் திருவுரு வாயிற்றுக் கேட்டும் உணர்ந்துமே? 7.5.5

 

3502

கேட்டும் உணர்ந்தவர் கேசவற் காளன்றி யாவரோ

வாட்டமி லாவண்கை மாவலி வாதிக்க வாதிப்புண்டு

ஈட்டங்கொள் தேவர்கள் சென்றிரந் தார்க்கிடர் நீக்கிய

கோட்டங்கை வாமன னாயச்செய்த கூத்துகள் கண்டுமே? 7.5.6

 

3503

கண்டும் தெளிந்தும்கற் றார்க்கண்ணற் காளன்றி யாவரோ

வண்டுன் மலர்த்தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழுநாள்

இண்டைச் சடைமுடி யீசனுடன்கொண்டு சாச்சொல்ல

கொண்டங்குத் தன்னொடும் கொண்டுடன்சென்றதுணர்ந்துமே? 7.5.7

 

3504

செல்ல வுணர்ந்தவர் செல்வன்றன் சீரன்றிக் கற்பரோ

எல்லை யிலாத பெருந்தவத் தால்பல செய்மிறை

அல்லல் அமரரைச் செய்யும் இரணிய னாகத்தை

மல்லல் அரியுரு வாய்ச்செய்த மாயம் அறிந்துமே? 7.5.8

 

3505

மாயம் அறிபவர் மாயவற் காளன்றி யாவரோ

தாயம் செறுமொரு நூற்றுவர் மங்கவோ ரைவர்க்காய்

தேச மறியவோர் சாரதி யாய்ச்சென்று சேனையை

நாசம்செய் திட்டு நடந்தநல் வார்த்தை யறிந்துமே? 7.5.9

 

3506

வார்த்தை யறிபவர் மாயவற் காளன்றி யாவரோ

போர்த்த பிறப்பொடு நோயோடு மூப்பொடு இறப்பிவை

பேர்த்து பெருந்துன்பம் வேரற நீக்கித்தன் தாளிங்கீழ்ச்

சேர்த்துஅவன் செய்யும் சேமத்தையெண்ணித் தெளிவுற்றே? (2) 7.5.10

 

3507

தெளிவுற்று வீவன்றி நின்றவர்க் கின்பக் கதிசெய்யும்

தெளிவுற்ற கண்ணனை தென்குரு கூர்ச்சட கோபன்fசொல்

தெளிவுற்ற ஆயிரத் துள்ளிவை பத்தும்வல் லாரவர்

தெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுல கத்துள்ளே. (2) 7.5.11

Leave a Reply