5ஆம் பத்து 5ஆம் திருவாய்மொழி
3277
எங்ஙனேயோ அன்னை மீர்காள்.
என்னை முனிவதுநீர்?,
நங்கள்கோலத் திருக் குறுங்குடி
நம்பியை நான்கண்டபின்,
சங்கினோடும் நேமி யோடும்
தாமரைக் கண்களொடும்,
செங்கனிவா யொன்றி னொடும்
செல்கின்ற தென்நெஞ்சமே. (2) 5.5.1
3278
என்நெஞ்சி னால்நோக்கிக் காணீர்
என்னை முனியாதே,
தென்னன் சோலைத் திருக்குறுங்குடி
நம்பியை நான்கண்டபின்
மின்னும் நூலும் குண்டலமும்
மார்வில் திருமறுவும்,
மன்னும் பூணும் நான்குதோளும்
வந்தெங்கும் நின்றிடுமே. 5.5.2
3279
நின்றிடும் திசைக்கும் நையுமென்று
அன்னைய ரும்முனிதிர்,
குன்ற மாடத் திருக்குறுங்குடி
நம்பியை நான்கண்டபின்,
வென்றி வில்லும் தண்டும்
வாளும் சக்கரமும்சங்கமும்,
நின்று தோன்றிக் கண்ணுள்நீங்கா
நெஞ்சுள்ளும் நீங்காவே. 5.5.3
3280
நீங்கநில்லாக் கண்ண நீர்களென்று
அன்னையரும் முனிதிர்,
தேன்கொள் சோலைத் திருக்குறுங்குடி
நம்பியை நான்கண்டபின்,
பூந்தண் மாலைத் தண்டுழாயும்
பொன்முடி யும்வடிவும்,
பாங்கு தோன்றும் பட்டும்நாணும்
பாவியேன் பக்கத்தவே. 5.5.4
3281
பக்கம்நோக்கி நிற்கும் நையுமென்று
அன்னைய ரும்முனிதிர்,
தக்ககீர்த்திக் திருக்கு றுங்குடி
நம்பியை நான்கண்டபின்
தொக்கசோதித் தொண்டை வாயும்
நீண்ட புருவங்களும்,
தக்கதாமரைக் கண்ணும் பாவியேf
னாவியின் மேலனவே. 5.5.5
3282
மேலும் வன்பழி நங்குடிக்கிவள்
என்றன்னை காணக்கொடாள்
சோலைசூழ் தண்திருக் குறுங்குடி
நம்பியை நான்கண்டபின்,
கோலநீள் கொடிமூக்கும் தாமரைக்
கண்ணும் கனிவாயும்,
நீலமேனியும் நான்கு தோளுமென்
நெஞ்சம் நிறைந்தனவே. 5.5.6
3283
நிறைந்த வன்பழி நங்குடிக்கிவள்
என்றன்னை காணக்கொடாள்
சிறந்தகீர்த்தித் திருக்கு றுங்குடி
நம்பியை நான்கண்டபின்,
நிறைந்தசோதி வெள்ளஞ் சூழ்ந்த
நீண்டபொன் மேனியொடும்
நிறைந்தென் னுள்ளே நின்றொழிந்தான்
நேமியங் கையுளதே. 5.5.7
3284
கையுள்நன் முகம்வைக்கும் நையுமென்று
அன்னைய ரும்முனிதிர்,
மைகொள் மாடத் திருக்குறுங்குடி
நம்பியை நான்கண்டபின்,
செய்யதாமரைக் கண்ணு மல்குலும்
சிற்றிடை யும்வடிவும்,
மொய்யநீள்குழல் தாழ்ந்த தோள்களும்
பாவியேன் முன்னிற்குமே. 5.5.8
3285
முன்னின் றாயென்று தோழிமார்களும்
அன்னைய ரும்முனிதிர்,
மன்னு மாடத் திருக்குறுங்குடி
நம்பியை நான்கண்டபின்,
சென்னி நீண்முடி யாதியாய
உலப்பி லணிகலத்தன்,
கன்னல் பாலமு தாகிவந்தென்
நெஞ்சம் கழியானே. 5.5.9
3286
கழியமிக்கதோர் காதல ளிவளென்
றன்னை காணக்கொடாள்,
வழுவில் கீர்த்தித் திருக்குறுங்குடி
நம்பியை நான்கண்டபின்,
குழுமித் தேவர் குழாங்கள்தொழச்
சோதிவெள் ளத்தினுள்ளே,
எழுவதோ ருருவென் னெஞ்சுள்ளெழும்
ஆர்க்கு மறிவரிதே. 5.5.10
3287
அறிவரிய பிரானை யாழியங்கையனை யேயலற்றி,
நறியநன் மலர்நாடி நன்குருகூர்ச்சடகோபன் சொன்ன,
குறிகொளா யிரத்துள் ளிவைபத்தும் திருக்குறுங் குடியதன்மேல்
அறியக் கற்றுவல்லார் வைட்டணவராழ்கடல் ஞாலத்துள்ளே. 5.5.11