திருவாய்மொழி ஐந்தாம் பத்து

நம்மாழ்வார்

 

 

 

style="text-align: center;">5ஆம் பத்து 2ஆம் திருவாய்மொழி

3244

பொலிக பொலிக பொலிக.

போயிற்று வல்லுயிர்ச் சாபம்,

நலியும் நரகமும் நைந்த

நமனுக்கிங் கியாதொன்று மில்லை,

கலியும் கெடும்கண்டு கொள்மின்

கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்,

மலியப் புகுந்திசை பாடி

யாடி யுழிதரக் கண்டோ ம். (2) 5.2.1

 

3245

கண்டோம் கண்டோம் கண்டோம்

கண்ணுக் கினியன கண்டோம்,

தொண்டீர். எல்லீரும் வாரீர்

தொழுது தொழுதுநின் றார்த்தும்,

வண்டார் தண்ணந்து ழாயான்

மாதவன் பூதங்கள் மண்மேல்,

பண்டான் பாடிநின் றாடிப்

பரந்து திரிகின் றனவே. 5.2.2

 

3246

திரியும் கலியுகம் நீங்கித்

தேவர்கள் தாமும் புகுந்து,

பெரிய கிதயுகம் பற்றிப்

பேரின்ப வெள்ளம் பெருக,

கரிய முகில்வண்ண னெம்மான்

கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்,

இரியப் புகுந்திசை பாடி

எங்கும் இடங்கொண் டனவே. 5.2.3

 

3247

இடங்கொள் சமயத்தை யெல்லாம்

எடுத்துக் களைவன போல,

தடங்கடல் பள்ளிப் பெருமான்

தன்னுடைப் பூதங்க ளேயாய்

கிடந்தும் இருந்தும் எழுந்தும்

கீதம் பலபல பாடி,

நடந்தும் பறந்தும் குனித்தும்

நாடகம் செய்கின் றனவே. 5.2.4

 

3248

செய்கின்ற தென்கண்ணுக் கொன்றே

ஒக்கின்ற திவ்வுல கத்து,

வைகுந்தன் பூதங்க ளேயாய்

மாயத்தி னாலெங்கும் மன்னி,

ஐயமொன் றில்லை யரக்கர்

அசுரர் பிறந்தீருள் ளீரேல்,

உய்யும் வகையில்லை தொண்டீர்.

ஊழி பெயர்த்திடும் கொன்றே. 5.2.5

 

3249

கொன்றுயி ருண்ணும் விசாதி

பகைபசி தீயன வெல்லாம்,

நின்றிவ் வுலகில் கடிவான்

நேமிப்பி ரான்தமர் போந்தார்,

நன்றிசை பாடியும் துள்ளி

யாடியும் ஞாலம் பரந்தார்,

சென்று தொழுதுய்ம்மின் தொண்டீர்.

சிந்தையைச் செந்நி றுத்தியே. 5.2.6

 

3250

நிறுத்திநும் உள்ளத்துக் கொள்ளும்

தெய்வங்க ளும்மையுய் யக்கொள்

மறுத்து மவனோடே கண்டீர்

மார்க்கண் டேயனும் கரியே

கறுத்த மனமொன்றும் வேண்டா

கண்ணனல் லால்தெய்வ மில்லை,

இறுப்பதெல் லாமவன் மூர்த்தி

யாயவர்க் கேயி றுமினே. 5.2.7

 

3251

இறுக்கு மிறையிறுத்துண்ண

எவ்வுல குக்கும்தன் மூர்த்தி,

நிறுத்தினான் தெய்வங்க ளாக

அத்தெய்வ நாயகன் றானே

மறுத்திரு மார்வன் அவன்றன்

பூதங்கள் கீதங்கள் பாடி,

வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார்

மேவித் தொழுதுய்ம்மி னீரே. 5.2.8

 

3252

மேவித் தொழுதுய்ம்மி னீர்கள்

வேதப் புனித இருக்கை,

நாவிற்கொண் டச்சுதன் றன்னை

ஞான விதிபிழை யாமே,

பூவில் புகையும் விளக்கும்

சாந்தமும் நீரும் மலிந்து

மேவித் தொழுமடி யாரும்

பகவரும் மிக்க துலகே. 5.2.9

 

3253

மிக்க வுலகுகள் தோறும்

மேவிக்கண் ணன்திரு மூர்த்தி,

நக்கபி ரானோ டயனும்

இந்திரனும்முதலாக,

தொக்க அமரர் குழாங்கள்

எங்கும் பரந்தன தொண்டீர்,

ஒக்கத் தொழுகிற்றி ராகில்

கலியுக மொன்றுமில் லையே. 5.2.10

 

3254

கலியுக மொன்றுமின் றிக்கே

தன்னடி யார்க்கருள் செய்யும்,

மலியும் சுடரொளி மூர்த்தி

மாயப்பி ரான்கண்ணன் றன்னை,

கலிவயல் தென்னன் குருகூர்க்

காரிமா றன்சட கோபன்,

ஒலிபுக ழாயிரத் திப்பத்து

உள்ளத்தை மாசறுக் கும்மே. (2) 5.2.11

Leave a Reply