682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">
ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்
மற்றவர்களுக்கு உதவி செய்யும் எண்ணம் உண்டாவதற்கு குரு மற்றும் ஈச்வரனுடைய கிருபை தேவை. அந்த கிருபை இல்லாவிட்டால், மற்றவர்களை அடிக்க வேண்டும், அவர்கள் துன்புறுவதைக் கண்டு மகிழ வேண்டும் என்னும் அசுர எண்ணங்கள்தான் நம் மனதில் எழும். குரு மற்றும் ஈச்வரனுடைய அருளைச் சம்பாதிக்க நாம் அவர்களுக்கு சேவை புரிய வேண்டும். அவர்களுக்குச் சேவை புரிந்தால் மனதின் மலம் நீங்கி புனிதம் ஏற்படுகிறது. தூய மனதில் நல்ல எண்ணங்கள் ஏற்பட்டு அதன் மூலம் நம் வாழ்வு அர்த்தமுள்ளதாகிறது. ஆகையால், ஈச்வரனையும் குருவையும் அடைக்கலமாக அடைய நமக்கு உள்ள தூண்டுகோல் இந்த பரோபகாரம்தான்.
மஹான்களே வழிகாட்டிகள்
உலகத்திலே மனிதனாக பிறப்பது மிகவும் துர்லபம்.. அப்பேற்பட்ட துர்லபமான பிறவி நமக்குக் கிடைத்துள்ளது.. இதில் ஆஸ்திகம் இல்லை தர்மாசரணங்கள் இல்லை என்று சொன்னால் அப்போது இந்த மனிதப் பிறவிக்கு அர்த்தமேயில்லை..
ஆனால், பவித்ரமான இந்த பாரதத்திலே இந்த மாதிரியான பவித்ரமான ஜென்மத்தை எடுத்துள்ளோமென்று சொன்னால் நாம் இதை ஸார்த்தகமாக்கிக்கொள்ள வேண்டும்..
மனிதனுடைய ஸ்வபாவம் என்னவென்றால் தான் யாருடைய சகவாஸத்திலே இருப்பானோ, அவர்களுடைய ஸ்வபாவமே இவனுக்கும் வரும்.. தான் துஷ்டர்களுடைய சகவாஸத்திலே இருந்தால் அந்த துஷ்டர்களுடைய ஸ்வபாவமே இவனுக்கும் வரும்..
அதானலே, “நான் எப்பொழுதும் ஸத்புருஷர்களோடுதான் இருக்க வேண்டும் என்கிற ஒரு பாவனையை வைத்துக்கொள்ள வேண்டும்.. இப்படி இருந்தால் நீ செளக்கியமாக இருக்கலாம்” என்று பகவத்பாதாள் நமக்கு உபதேசித்தார்..
இப்பேற்பட்ட தர்ம மார்க்கத்திலே நாம் இருந்தால்தான் இந்த பவித்ரமான பாரதத்தில் ஜென்மம் அடைந்ததற்கு, இந்த ஸநாதன தர்ம பரம்பரையில் பிறந்ததற்கு அர்த்தம் வரும்.. இல்லாவிட்டால், நான் அப்போது சொன்ன மாதிரி பிராணிகளுக்கு சமானம் ஆகிவிடும்.. அப்படி ஆகக் கூடாது.. இந்த ஜென்மம் ஸார்த்தகமாக வேண்டும்..
இந்த தர்மத்தை ஆசாரணம் பண்ணுகிற விஷயத்திலே யார் மஹான்களோ அவர்களைத்தான் நாம் எப்பொழுதும் ஆதர்சமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
ஆத்ம ஞானமே குறிக்கோள்
ஞான அக்னியானது கர்மாக்களின் பலன்களை எரிக்கவல்லது. பிறப்பும் இறப்பும் இருக்கும் வரை கஷ்டங்களும் துக்கங்களும் ஒருவனுக்கு இருந்துகொண்டேயிருக்கும். அவை இருக்கும் வரை முக்தி என்பதுமில்லை.
எனவே, ஆத்மஞானமே முக்திக்கு வழி ஆதலால் அந்த ஞானம் மனிதனால் அடையப்பட வேண்டியதாகும். அப்பொழுதுதான் நமது வாழ்க்கை பூரணமடையும்.
அப்படிப்பட்ட ஞானம் அடைந்தவன் பிறப்பு-இறப்புக்களால் பாதிக்கப்படுவது இல்லை. அவன் முக்தனாகிறான். அப்படிப்பட்ட ஞானத்தை அடையாதவன் பந்தத்தில் சிக்கிக் கொள்கிறான். எனவே ஆத்ம ஞானம் அடைவதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.