ஆசை ஆசையாக கருவறைக்குள் நுழைந்தார். வரதராஜப் பெருமாளின் சிரிக்கும் அழகைக் கண்டு மயங்கி நின்றார். சில நிமிடங்கள் ஏகாந்தத்தில் சென்றன. பேரருளாளன் பேரில் லயித்த மனது மெள்ளத் திரும்பியது. அப்போதுதான் உணர்ந்தார̷் 0; உடல், வியர்வை மழையில் சொட்டச் சொட்ட நனைந்திருந்தது. உடனே உள்ளத்தில் ஓர் எண்ணம்… விறுவிறுவெனச் சென்றார். விசிறியை எடுத்தார். எதற்கு..? தன் உடல் வியர்வை போக வீசிக் கொள்ளவா?
அப்படிச் செய்பவர் என்றால், காஞ்சிப் பேரருளாளன் அவரை ஏன் அங்கே அழைத்திருக்கப் போகிறான்?
‘சற்று நேரம் நின்றதற்கே நமக்கு வியர்வை பெருகுகிறதே! பெருமாள் ஆண்டாண்டு காலமாக இப்படி புழுக்கத்தில் நிற்கிறாரே!’ – இந்த எண்ணம் அலைமோத, பெருமாளுக்கு விசிறி வீசத் தொடங்கினார். எப்போதும் புன்னகையுடன் காட்சி தரும் வரதன் அன்று இன்னும் முகம் மலர்ந்தான்.
இதுதானே பக்தி பாவனை! கருவறையுள் கடவுளை கல்லாகக் காண்பவன் வெறும் மனிதன்! இவர் வரதனை வரதராஜனாகவே கண்டார். அதனால், தனக்கு ஆலவட்டில் (விசிறி) சமர்ப்பிக்கும் பணியைச் செய்ய அவருக்கு அனுமதியளித்தான் வரதன். அதுமட்டுமா..? அவருடன் பேசவும் செய்தானே!
‘கடவுளுக்கும் மனிதனுக்கும் நடுவே இடைத் தரகர் எதற்கு?’ இப்படிக் கேட்பார்கள் சிலர். ஆனால், ஒரு சமூகப் புரட்சியே செய்த மகானே, காஞ்சி வரதரிடம் தன் கேள்விகளை முன்வைக்க இவரை நாடினாரே..! அந்த மகான் – ஸ்ரீமத் ராமானுஜர்.
காஞ்சி வரதனுக்கு விசிறி வீசிப் பணிசெய்த அந்தத் தொண்டர் – திருக்கச்சி நம்பிகள்!
இன்று நாம் பூந்தமல்லி என்று அழைக்கும் பூவிருந்தவல்லியின் அவதரித்தவர். வைசிய வகுப்பைச் சேர்ந்தவர். கஜேந்திரதாசன் என்பது பெயர். காஞ்சி பூரணர் என்பர். இவரின் தூய தொண்டின் காரணமாக ‘திருக்கச்சி நம்பிகள்’ என்று அழைத்தது உலகு.
தன் ஆசிரியர் யாதவப் பிரகாசருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது ராமானுஜருக்கு! அதனால், மனவருத்தத்தில் இருந்தபோது, ஒரு நாள் வீதியில் நம்பிகளைச் சந்திக்கிறார். பிரபந்தங்களைப் பாடியபடியே நடந்து செல்லும் நம்பிகள் மேல் ஓர் ஈர்ப்பு. அவர் பாதத்தில் விழுந்து பணிகிறார். என்ன..!? ராமானுஜரைவிட நம்பிகள் எட்டு வயதே மூத்தவர்!
படபடத்த நம்பிகள், ”வேதம் பயிலும் நீங்கள் அடியேனின் பாதங்களில் விழுவது கூடாது” என்று தடுத்தார். ராமானுஜரோ, ”அடியேன் தோளில்தான் பூணூலைத் தாங்கியுள்ளேன். நீங்களோ நெஞ்சில் அந்த வரதனைத் தாங்கியுள்ளீர்! அதனால் தவறில்லை.. சரி விடுங்கள்… சுவாமி, நீங்கள் பாடிக் கொண்டு வந்தீர்களே பிரபந்தங்கள்… அதை அடியேனுக்குக் கற்பியுங்களேன்!”
பணிந்து கேட்டார் ராமானுஜர். அதற்கு நம்பிகள், ”வேதக் கல்வி பயில்பவர் இப்படிக் கேட்பது விந்தை தான். காலம் வரும்போது பார்க்கலாம்…” என்று சொல்லிச் சென்றார்.
நாட்கள் நகர்ந்தன. ஒருநாள்… பாடசாலையில் வேத விளக்க வகுப்பில் யாதவப் பிரகாசருடன் ராமானுஜருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால், ராமானுஜரைக் கொல்வதற்கு திட்டம் போட்டார் யாதவப் பிரகாசர். காஞ்சி பேரருளாளன் அருளால் பத்திரமாக காஞ்சிக்கு வந்து சேர்ந்த ராமானுஜர், அடுத்து தன் குருவாக எண்ணிப் பணிந்தது திருக்கச்சி நம்பிகளைத்தான்! அவரோ தன் குலத்தைச் சொல்லி மறுத்து, ”காஞ்சி வரதருக்கு சாலைக் கிணற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரும் பணியைச் செய். தகுந்த குரு கிடைப்பார்” என்றார். ஒரு நாள், ராமானுஜர் அவரிடம் தனக்கு சில ஐயங்கள் இருப்பதாகவும், அவற்றை காஞ்சி வரதரிடம் கேட்டு தீர்த்து வைக்குமாறும் வேண்டிக் கொண்டார்.
ராமானுஜரின் மனதில் உள்ள கேள்விகளைப் பற்றி காஞ்சி வரதராஜ பெருமாள் முன் நின்றபடியே ஆலவட்டில் கைங்கர்யம் செய்யும் போது முன்வைத்தார் நம்பிகள்.
அதற்கு பெருமாளே அந்தக் கேள்விகளையும் சொல்லி, அவற்றுக்கான தம் பதில்களையும் சொல்லி, ராமானுஜருக்கு வழிகாட்டினார் என்பர். புகழ்பெற்ற ஆறு வார்த்தைகளாக காஞ்சி வரதராஜப் பெருமானிடம் திருக்கச்சி நம்பிகள் பெற்ற அந்தக் கேள்விகளும் பதில்களும் .
1. பரம்பொருள் யார்?
2. பின்பற்ற வேண்டிய உண்மைத் தத்துவம் எது?
3. பரமனை அடைவதற்கான உபாயம் எது?
4. மரண காலத்தில் இறைவனின் நினைவு தேவையா?
5. மோட்சம் பெறுவது எப்போது?
6. குருவாக யாரை ஏற்பது?
இவற்றுக்கு புன்னகையுடன் பதிலளித்தார் வரதர்.
1. பரம்பொருள் நாமே!
எல்லோரும் அடைய வேண்டிய பரம்பொருள் நாமே!
2. பேதமே தர்சனம்!
எதுவுமே மாயை இல்லை. எல்லாமே உண்மை! விசிஷ்டாத்வைத மாகிய ஆத்மா-இறைவன்… இதுபற்றிய வேறுபாடே தத்துவம்!
3. உபாயம் ப்ரபத்தியே!
அகங்காரத்தை விடுத்து, இறைவனை சரண் அடைவதே உபாயம்! அதாவது, பிரபத்தி எனும் சரணாகதியே உபாயம்!
4. அந்திம ஸ்மிருதி வேண்டாம்!
இறக்கும் நேரத்தில் இறைவன் நினைவு தேவையில்லை! உடல் திறனோடு நன்றாக இருக்கும்போது நினைத்தலே போதும்! அப்போது இறைவனே நம்மை நினைப்பான்.
5. சரீரம் விடுகையில் மோட்சம்!
சரணம் அடைந்தவர்க்கு, உடலை விடும்போது மோட்சம்!
6. பெரிய நம்பிகளை குருவாகப் பற்றுவது!
இந்த வார்த்தைகளை தாமே ஆசிரியர் போல் இருந்து விளக்கினார் திருக்கச்சி நம்பிகள். இதுவே, புகழ்பெற்ற ‘ஆறு வார்த்தைகள்’ என உதயமானது.
நம்பிகளிடம் இருந்து பெற்ற இந்த ஆறு வார்த்தைகள் தான், ராமானுஜரின் வாழ்க்கைப் போக்கை தீர்மானித்தது…இவ்வாறு, உலகத்துக்கு ராமானுஜர் என்ற மகானை உருவாக்கிக் கொடுத்ததில் எல்லாமாக இருந்தவர் திருக்கச்சி நம்பிகள்.
சென்னைக்கு அருகில் உள்ளது- பூந்தமல்லி. இங்கே கோயில் கொண்ட பூவிருந்தவல்லித் தாயாரின் பெயரில்தான் ஊரின் பெயரான ‘பூவிருந்தவல்லி’ வந்தது. இங்கே திருக்கச்சி நம்பிகளுக்கு என்றே பிரதானமாக கோயில் உள்ளது. பூந்தமல்லி பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள ஸ்ரீவரதராஜ பெருமாள்- திருக்கச்சிநம்பிகள் கோயில்தான் அது. இங்கே காஞ்சி வரதராஜர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருப்பதி ஸ்ரீநிவாசர் என மூவரும் சந்நிதி கொண்டுள்ளனர்.
மிகப் பெரிய கோயில். கோயிலுள் நுழைந்ததும் வலது புறம் தாயார் சந்நிதி. இடது புறம் ஸ்ரீநிவாசர் சந்நிதி. அடுத்து பெருமாள் சந்நிதிக்குச் செல்லும்போது, நேர் எதிரே திருக்கச்சி நம்பிகளின் பெரிய சந்நிதி. அதற்கு இருபுறங்களிலும் வரதராஜரும் ரங்கநாதரும்! வரதராஜர் திருமுக மண்டலத்தின் பின்னே உதயக் கோலத்தில்… வெள்ளியால் ஆன சூரிய பிரபை போன்ற அமைப்பு!
நம்பிகள் சந்நிதியில் அந்தப் புகழ்பெற்ற ஆறு வார்த்தைகளை கல்வெட்டில் பொறித்து வைத்துள்ளனர். கோயிலுக்கு அருகில் நம்பிகள் அவதரித்த தலமும் உள்ளது. மாசி மாதம் மிருகசீரிட நட்சத்திரத்தில் நம்பிகளின் அவதார விழா விமரிசையாக நடைபெறுகிறது.
திருக்கச்சி நம்பிகள் அவதரித்த ஆயிரமாவது ஆண்டு கடந்த 2009ஆம் ஆண்டு வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
பெருமாளை வணங்கும் சூரியன்!
இங்கே பெருமாளை சூரியனும் செவ்வாயும் வழிபட்டுள்ளனர். பிப்ரவரி, மார்ச் மாதங்களில், 21 முதல் 25 தேதிகளில் காலை 6 மணிக்கு சூரியனின் கிரணங்கள் பெருமாளின் திருமுகத்தில் விழுகிறதாம். சூரிய உதய நேரத்தில் பெருமாளை தரிசிப்பது சிறப்பு என்கிறார்கள். ஜாதக ரீதியில் சூரியன் மற்றும் செவ்வாய் பலம் இழந்து பரிகாரம் செய்ய வேண்டிய நிலையில் இருந்தால், இங்கே வந்து வேண்டிக்கொள்ள தோஷ நிவர்த்தி ஆகுமாம்!
தொடர்புக்கு: 044-2627 2066