e0af8de0aea3e0aebe-e0ae8ee0aea9e0af8d-e0ae89e0ae9fe0af88e0aeaee0af88e0aeaae0af8d-e0aeaae0af8ae0aeb0e0af81e0aeb3e0af8d-53.jpg" style="display: block; margin: 1em auto">
அண்ணா என் உடைமைப் பொருள் – 53
– வேதா டி. ஸ்ரீதரன் –
இறுதி யாத்திரை
மறு நாள் காலையில் இருந்தே அன்பர்கள் அஞ்சலி செலுத்த வர ஆரம்பித்தார்கள்.
எழுத்தாளர் ரா. கணபசி மறைந்து விட்டார் என்று ஊடகங்களில் வெளியாகி இருந்தாலும், பெரும்பாலான அன்பர்களுக்கு, ரா. கணபதி என்ற பெயருக்கு மேல் அவரைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவரது வீட்டு விலாசத்தை யாரிடம் கேட்டு அறிவது?
எனவே, அதிகம் பேர் வர முடியாத நிலைமை.
மொத்தத்தில், சுமார் நூற்றி ஐம்பது பேர் தான் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.
அண்ணாவை எத்தனையோ தடவை பார்த்திருக்கிறேன். ஏதேதோ என்னால் இயன்ற பணிவிடைகளும் செய்திருக்கிறேன்.
செய்ததும் செய்யாததும் ஒருபுறம் இருக்கட்டும், ‘‘இதோ, இவர் என்னுடையவர்’’ என்கிற எண்ணம் நெஞ்சம் முழுவதும் நிறைந்து இருந்தது என்பது உண்மை. ஆனால், அண்ணா, அண்ணா என்று இதுவரை நாங்கள் அனைவரும் பார்த்து வந்த, பேசி வந்த அந்த உடல் மறைந்து விட்டது. இனி, அவரவர் உள்ளத்துக்குள் தான் அவரது இயக்கம் இருக்க முடியும்.
அதுமட்டுமல்ல, இப்போது இந்த உடலுக்கு அவரது உறவினர்கள் மட்டுமே காரியம் பண்ண முடியும். அவற்றில் நான் செய்வதற்கு ஒன்றும் இல்லை.
‘‘இங்கே எனக்கு என்ன வேலை?’’ என்ற கேள்வி தான் எனக்குள் பெரிதாக ஓடியது. எதிலும் மனம் ஒட்டவில்லை.
ஏதேதோ சிந்தனைகள்… வழக்கம் போல குழப்பங்கள்…
அஞ்சலி செலுத்த வருபவர்கள் தங்கள் இரங்கல் செய்திகளை வழங்கும் பொருட்டு ஒரு விசிட்டர்’ஸ் நோட்புக் வைக்கப்பட்டிருந்தது.
எனக்கு அதைப் பார்க்கவே மனதுக்குக் கஷ்டமாக இருந்தது. ‘‘தான்’’ என்கிற ஒன்று அறவே இல்லாமல் இருந்த அண்ணாவுக்கு எதற்காக இரங்கல்? அவர் ‘‘இருந்தாரா இல்லையா?’’ என்பதையே புரிந்து கொள்ள முடியாதவாறு தான் அவரது வாழ்க்கை இருந்தது. இப்போது அவர் இறந்து விட்டார் என்றும் அந்த மரணத்துக்கு அனுதாபச் செய்தி கொடுப்பதும் எதற்காக என்ற கேள்வியே மேலோங்கியது.
ஆனாலும், உலக வழக்கு, இறுதி ஸம்ஸ்காரங்கள் முதலான எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. இவற்றில் நான் செய்வதற்கு ஒன்றுமே இல்லை.
அண்ணாவின் ஒண்ணு விட்ட தம்பி துரைஸ்வாமி இறுதி காரியங்கள் பண்ணினார்.
தகனம், அஸ்தி கரைப்பு முதலான சடங்குகள் முடியும் வரை இயந்திரம் போலவே இருந்தேன்.
அண்ணா கல்கியில் பணிபுரிந்த காலகட்டத்தில் பெரியவா நீண்ட நடைப்பயணத்தை ஆரம்பித்தார். இந்தப் பயணம் பல வருடங்கள் நீடித்தது.
அண்ணாவுக்குப் பெரியவாளைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
அந்தக் காலத்தில் தகவல் தொடர்பு வசதிகளும் குறைவு. பெரியவாளை தரிசனம் செய்து விட்டு வந்தவர்கள் மூலம், பெரியவா இருக்கும் இடத்தைத் தெரிந்து கொண்டு அங்கே செல்ல வேண்டும். பெரியவா அந்த ஊரில் தான் இருப்பார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. அந்த ஊர் ஜனங்களிடம் விசாரித்துத் தெரிந்து கொண்டு அவர்கள் சுட்டிக் காட்டும் திசையில் போய்ப் பெரியவா இருக்கும் இடத்தை அடைய வேண்டும்.
அண்ணா இதேபோல ஒருமுறை பெரியவாளை தரிசனம் செய்யப் போயிருந்தார்.
அப்போது பெரியவா ஆந்திராவில் ஏதோ ஒரு சிறிய கிராமத்துக்கு வெளியே பாழடைந்த கட்டடத்தில் தங்கி இருந்தார்.
அண்ணா போய்ச் சேர்ந்த போது மதிய நேரம். பெரியவா வெளியே வரும் வரை அண்ணா அந்தக் கட்டடத்தின் வாசலிலேயே காத்திருந்தார்.
நீண்ட நேரத்துக்குப் பின்னர் பெரியவா வெளியே வந்தார். அண்ணா அவரை நமஸ்கரித்தார்.
அண்ணாவைப் பார்த்துப் பெரியவா, ‘‘என்ன விஷயம்? எதுக்கோசரமா வந்தே?’’ என்று கேட்டாராம்.
அதற்கு அண்ணா, ‘‘என்னால பெரியவாளைப் பார்க்காம இருக்க முடியல’’ என்று சொன்னாராம்.
உடனே, பெரியவா, ‘‘ஓ, இந்த உடம்பு…. இது தான் பெரியவாளோ?’’ என்று கேட்டு விட்டு, விருட்டெனத் திரும்பி உள்ளே போய் விட்டாராம்.
அண்ணா இந்தச் சம்பவத்தை என்னிடம் சொன்ன போது, ‘‘என்னவோ தெரியலைப்பா… எனக்குள்ள ஒரு இழை அறுந்து போனா மாதிரி இருந்தது. அன்னிலேர்ந்து எனக்குப் பெரியவாளைப் பார்க்கணும்னே தோணல. அதுக்கப்பறம் நிறையத் தடவை பெரியவாளைப் பார்க்கப் போயிருக்கேன். ஏதாவது வேலை விஷயமா போனது தான்… பெரியவாளைப் பார்த்தே ஆகணும்ங்கற ஃபீலிங் அடியோட போயிடுத்து. அந்த மாதிரி நினைப்பே வரல’’ என்று குறிப்பிட்டார்.
பெரியவா மகா சமாதி ஆனபோது அண்ணா அவரைப் பார்க்கப் போகவில்லை. காரணம், பெரியவா அந்த உடல் தான் என்று அண்ணா நினைக்கவில்லை.
அது நித்திய வஸ்து. அது எங்கும் போகவில்லை. என்னைப் பொறுத்த வரை அண்ணாவும் அப்படியே.
அண்ணா என் உடைமைப் பொருள் (53): இறுதி யாத்திரை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.