682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">
ஸ்ரீஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்
“ஸ்ரத்தை” என்கிற சப்தத்திற்கு நிஷ்க்ருஷ்டமான (தெளிவான) அர்த்தத்தை சங்கர பகவத்பாதாள் விவேகசூடாமணியில் கூறியிருக்கிறார்.
சாஸ்த்ரஸ்ய குருவாக்யஸ்ய ஸத்யபுத்த்யா வதாரண I
ஸா ச்ரத்தா கதிதா ஸத்பிர்யயா வஸ்தூபலப்யதே II
அதாவது சாஸ்திரத்திலும் ஆசார்யாளுடைய வாக்கியத்திலும் மிகவும் பிராமாண்ய புத்தி (உண்மை என்கிற எண்ணம்) இருந்தால் அதற்குத்தான் “ஸ்ரத்தை” என்று பெயர். “சாஸ்திரத்தில் இப்படி இருக்கிறது. அது அப்படித்தான் நடக்கும்” என்ற தீர்மானம் இருக்க வேண்டும். அநேகம் ஜனங்கள், “சாஸ்திரத்தில் கூறியபடி எல்லாவற்றையும் செய்தோம். ஆனால், அதில் சொல்லப்பட்ட காரியம் மட்டும் ஒன்றும் ஆகவில்லை” என்று குறை கூறுவார்கள். இதற்குக் காரணம் அவர்களிடம் ஸ்ரத்தை இருக்கவில்லை என்பதேயாகும்.
“சாஸ்திரத்தில் என்னவோ இருக்கின்றது. செய்தால் என்ன ஆகுமோ தெரியாது. செய்துதான் பார்ப்போம்” என்ற எண்ணம்தான் அநேகம் ஜனங்களுக்கு இருக்கிறது. “சாஸ்திரத்தில் இப்படி நடக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆசார்யாளுடைய வாயிலிருந்து வந்த வார்த்தையும் அப்படியே இருக்கிறது. ஆதலால் உண்மையில் இப்படித்தான் நடக்கும்” என்ற தீர்மானம் இருக்க வேண்டும்.
இதற்காகத்தான் “ஸத்யபுத்த்யாவதாரணா” என்ற பதத்தை சங்கரபகவத்பாதாள் போட்டிருக்கிறார். இம்மாதிரி உறுதியான நம்பிக்கையுடன் காரியம் செய்தவர்களுக்கெல்லாம் உத்க்ருஷ்டமான (உயர்வான) பலன் கிடைத்து விட்டது. இதில் சந்தேகமேயில்லை.
பகவானிடம் செய்ய வேண்டிய பிரார்த்தனை
எவ்வளவோ லெளகிகமான விஷயங்களை நாம் சிந்தித்துக்கொண்டே இருக்கிறோம். அதனால் அமைதியென்பதே இல்லாமல் நம் மனம் தவித்துக்கொண்டு இருக்கிறது. அப்படி இருந்துமே திரும்பவும் நமக்கு இந்த லெளகிகமே வேண்டும் என்று சொன்னால், நம்முடைய அடர்ந்த மோஹம் தானே இதற்குக் காரணம். அதை விட்டுவிட்டு பகவானையே நினைக்கக்கூடிய ஒரு பவித்ரமான சந்தர்ப்பம் நமக்கு இருந்தால் அதுதான் நமது வாழ்க்கையிலே புனிதமான நாளாகும்.
“பகவானே! எனக்கு லெளகிகமான விஷயங்களில் இருக்கும் ஆசைகள் போய் உன்னுடைய பாதத்திலேயே என் மனம் நிலைத்து நிற்க நீ எனக்கு அனுக்ரஹம் செய்” என்கிற இந்த ஒரு பிரார்த்தனையை நாம் பகவானுடைய சன்னிதியில் செய்தோமானால் நம்முடைய ஜீவன் தன்யமாகிவிடும்; மிகவும் பவித்ரமாகிவிடும்.
ஆசை யாருக்கும் இன்பம் சேர்க்காது
“எவ்வளவு வசதிகள் இருந்தாலும் எனக்கு அது தேவையில்லை. ஈச்வர ஸக்ஷாத்காரம் தான் வேண்டும்” என்பது அவர்களின் லட்சியமாக இருந்தது. அதேபோல் அவர்கள் பகவானின் பாதத்தை 24 மணி நேரமும் தியானித்தார்கள். நாமும் தியானம் பண்ணுகிறோம். எதன் மீது? த்யாதம் வித்தமஹர்னிசம்
24 மணி நேரமும், “பணம் எப்படிச் சேர்ப்பது? அதை எப்படி இரட்டிப்பாக்குவது?” என்று பணத்தைப் பற்றியே நாம் தியானித்துக் கொண்டிருக்கிறோம். இந்தக் காரணங்களால்தான் அவர்கள் பெற்ற பலனை நாம் பெறவிடாமல் தடுக்கின்றன.
தத்தத் கர்ம க்ருதம் யதேவ முனிபிஸ்தைஸ்தைர்பலைர் வஞ்சிதா:
நம்முடைய ஸாதனை வழிக்கும் அவர்களது ஸாதனைக்கும் எவ்வளவோ வேறுபாடு! ஆகவே, நாமும் அவர்களுடைய வழியைப் பின்பற்ற வேண்டும். மனதிலேயுள்ள ஆசைகளுக்காக பகவானை வழிபடுவது சரியில்லை. ஆசைகளைப் போக்கிக் கொண்டால்தான் உண்மையான சுகத்தை அடைய முடியும். வருகின்ற ஆசைகளைத் தீர்த்துக்கொள்ள முயறிசிப்பதில் நாம் வெற்றியடைய முடியாது. ஆசைகள் தீராமல் வருத்தம்தான் மிஞ்சும். ஆசை யாருக்கும் இன்பம் சேர்க்காது.