e0af8d-e0ae95e0aeb2e0af88e0ae95.jpg" style="display: block; margin: 1em auto">
திருப்புகழ்க் கதைகள் 184
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
கலைகொடு பவுத்தர் – பழநி 1
அருணகிரிநாதர் அருளியுள்ள நூற்றிமுப்பத்தியெட்டாவது திருப்புகழ், ‘கலைகொடு பவுத்தர்’ எனத் தொடங்கும் பழநி தலத்துத் திருப்புகழாகும். “முருகா, உண்மை ஞானத்தை உணர்த்தி, திருவடியைத் தந்து ஆண்டு அருள்” என அருணகிரிநாதர் இத்திருப்புகழில் வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.
கலைகொடுப வுத்தர் காம கருமிகள்து ருக்கர் மாய
கபிலர்பக ரக்க ணாதர் …… உலகாயர்
கலகமிடு தர்க்கர் வாம பயிரவர்வி ருத்த ரோடு
கலகலென மிக்க நூல்க …… ளதனாலே
சிலுகியெதிர் குத்தி வாது செயவுமொரு வர்க்கு நீதி
தெரிவரிய சித்தி யான …… வுபதேசந்
தெரிதரவி ளக்கி ஞான தரிசநம ளித்து வீறு
திருவடியெ னக்கு நேர்வ …… தொருநாளே
கொலையுறஎ திர்த்த கோர இபமுகஅ ரக்க னோடு
குரகதமு கத்தர் சீய …… முகவீரர்
குறையுடலெ டுத்து வீசி யலகையொடு பத்ர காளி
குலவியிட வெற்றி வேலை …… விடுவோனே
பலமிகுபு னத்து லாவு குறவநிதை சித்ர பார
பரிமளத னத்தில் மேவு …… மணிமார்பா
படைபொருது மிக்க யூக மழைமுகிலை யொட்டி யேறு
பழநிமலை யுற்ற தேவர் …… பெருமாளே.
இத்திருப்புகழின் பொருளாவது – கொலைகள் உண்டாகும்படி எதிர்த்து வந்த கோரமான யானை முகம் படைத்த தாரகாசுரனோடு, குதிரை முகமும் சிங்கமுகம் படைத்த அசுரர்களின் குறை உடல்களை எடுத்து வீசி எறிந்து, பேய்களும், பத்ரகாளியும் மகிழுமாறு வெற்றி மிகுந்த வேலாயுதத்தை விடுத்தவரே. நல்ல பலன் தருகின்ற தினைப் புனத்தில் உலாவிய வள்ளி நாயகியின் அழகும் கனமும் நறுமணமும் பொருந்திய தனங்களில் தழுவுகின்ற அழகிய திருமார்பினரே. ஒன்றோடொன்று எதிர்த்துப் போர் புரிந்து, மிகுதியாக எழுந்த பெண் குரங்குகள், மழை மேகத்தைக் கண்டு அஞ்சி ஏறி ஒளிகின்ற பழநி மலைமீது வீற்றிருக்கின்ற தேவர்கள் போற்றும் பெருமிதம் உடையவரே.
தாங்கள் கற்ற நூல்களைக் கொண்டு புத்தர்களும், காம கருமிகளும், முகம்மதியரும், மாயா வாதிகளும், கபில மதத்தினரும், சொல்லுகின்ற கணாதரும், உலகாயதர்களும், கலகம் புரிகின்ற தார்க்கீகரும், வாம மதத்தினரும், பயிரவர்களும், மாறுபட்ட கொள்கையுடன் கலகல என்று இரைச்சல் செய்து, மிகுந்த நூல்களை உதாரணமாகக் காட்டி சண்டையிட்டு, எதிர்தாக்கி, வாதிட்டு ஒருவர்க்குமே உண்மை இதுதான் என்று உணர்வதற்கு அரிதான சித்தி தரும் பொருளான உபதேசத்தை அடியேன் அறியுமாறு விளக்கி, ஞான தரிசனத்தைத் தந்து, சிறந்த உமது திருவடிக் கமலத்தைத் தருகின்ற நாள் ஒன்று உளதாகுமோ?
மதவாதிகளும் சமயவாதிகளும் தத்தம் மதமே – சமயமே சிறந்ததென்று கருதி, அதற்குரிய ஆதார நூல்களைக் காட்டி, வாதிட்டு, ஒருவரை யொருவர் தாக்கியும், எதிர்த்துப் போர் புரிந்தும் உழலுவார்கள்.
“சமயவாதிகள் தத்தம் மதங்களே
அமைவதாக அரற்றி மலைந்தனர்”
என்கிறது மணிவாசகம். இத்திருப்புகழில் சுவாமிகள் அதனைக் கண்டித்தருளுகின்றார்.
மாறுபடு தர்க்கம் தொடுக்க அறி வார்,சாண்
வயிற்றின் பொருட்டதாக
மண்டலமும் விண்த உலமும் ஒன்றாகி மனதுழல
மால் ஆகி நிற்க அறிவார்,
வேறுபடு வேடங்கள் கொள்ள அறி வார், ஒன்றை
மெணமெண என்று அகம்வேறு அதாம்
வித்தை அறிவார், எமைப் போலவே சந்தைபோல்
மெய்ந்நூல் விரிக்க அறிவார்,
சீறுபுலி போல் சீறி மூச்சைப் பிடித்து விழி
செக்கச் சிவக்க அறிவார்,
திரம் என்று தந்தம் மதத்தையே தாமதச்
செய்மைகொடும் உளறஅறிவார்,
ஆறுசம யங்கள் தொறும் வேறுவேறு ஆகி விளை
யாடும் உனை யாவர் அறிவார்,
அண்டபகிர் அண்டமும் அடங்க, ஒரு நிறைவாகி
ஆனந்த மானபரமே. (தாயுமானவர்)
இனி இத்திருப்புகழின் பொருளை நாளை காணலாம்.
திருப்புகழ் கதைகள்: கலைகொடு பௌத்தர்! முதலில் தினசரி தளத்தில் வெளியான செய்தி.