e0af8d-e0aeaae0aeb4e0aea9e0aebf.jpg" style="display: block; margin: 1em auto">
திருப்புகழ்க் கதைகள் 185
~ முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்~
கலைகொடு பவுத்தர் – பழநி 2
பௌத்தம்
மதவாதிகளும் சமயவாதிகளும் தத்தம் மதமே – சமயமே சிறந்ததென்று கருதி, அதற்குரிய ஆதார நூல்களைக் காட்டி, வாதிட்டு, ஒருவரை யொருவர் தாக்கியும், எதிர்த்துப் போர் புரிந்தும் உழலுவார்கள், என்று கூறும்போது அருணகிரியார் முதலில் பவுத்தரைப் பற்றிக் கூறுகின்றார்.
கௌதம புத்தர், வடநாட்டில் கபிலவஸ்து என்ற நகரிலே அரச குமாரனாகப் பிறந்தவர். இளமையிலேயே மனைவியையும், மகனையும் துறந்து, உலகத் துன்பத்திற்கு விடுதலை காண வேண்டும் என்று எங்குந் திரிந்து, முடிவில் ஓர் அரசமரத்தின் (போதிமரம்) கீழ் இருந்து தவஞ் செய்தார். எவ்வுயிர்க்கும் இரங்குதலே பேரறம்; ஊன் பயில் வேள்வியும், உடலைத் துன்புறுத்தும் தவமும் மக்கட்கு வேண்டாதன என்று கண்டார்.
புத்தர், இக்கொள்கையைத் தமர்க்கும் பிறர்க்கும் எடுத்து ஓதினார். நல்லொழுக்கத்தை மட்டும் போதித்தார். கடவுளைப் பற்றி யாதும் கூறினாரில்லை. அவர்க்குப் பின் வந்தவர்களும் அவர்கள் தலைவரும் புத்த சமயத்தைத் தனியே ஒரு சமயமாக்கிப் “பிடகநூல்” என்னும் ஒரு சமய நூலை வகுத்தார்கள். அந்த நூலில் அறிவே ஆன்மா என்று கூறப்பட்டது. அவ் அறிவானது ஒவ்வொரு கணப்பொழுதிலும் தோன்றி அழியும், முற்கணத்தில் தோன்றி அழியும் அறிவின் வாசனை பிற்கணத்தில் தோன்றும்.
அறிவின் பற்றுதலால் நீரோட்டம் போல அறிவு தொடர்ச்சியாக நிகழ்கின்றது. இவ்வாசனை அழிவதுவே முக்தி, “கந்த நாஸ்தி” (கந்தம் – வாசனை) என்பர். அதுவே நிருவாணம் எனப்படும். உலகத்திலேயுள்ள பொருள் எல்லாம் இவ்வாறே கணந்தொறும் தோன்றி அழியும் என்பதே புத்தமதக் கொள்கை. மாத்தியமிகர், யோகாசாரர், சௌத்திதாரந்திகர்., வைபாடிகர் எனப் புத்த மதத்தில் நான்கு வகையினர் உண்டு.
பௌத்த சமயத்தில் முக்கியமான இரண்டு பிரிவுகள் பொதுவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன: தேரவாத பௌத்தம் (முதியோர் பள்ளி), மற்றும் மகாயான பௌத்தம் (பெரும் வாகனம்). தேரவாதம் இலங்கை, மற்றும் தென்கிழக்காசியாவில், கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து, பர்மா போன்ற நாடுகளில் பின்பற்றப்படுகின்றது. மகாயானம் சீனா, கொரியா, ஜப்பான், வியட்நாம், சிங்கப்பூர், தாய்வான் போன்ற கிழக்காசிய நாடுகளில் பின்பற்றப்படுகிறது.
இந்த இரண்டை விட திபெத்து, மற்றும் மங்கோலியாவில் பின்பற்றப்படும் வச்சிரயான பௌத்தம் மூன்றாவது வகையாகக் குறிக்கப்படுகிறது. எந்த மதமானாலும் உலகம் எப்படித் தோன்றியது என்ற கேள்விக்கு பதில் தரவேண்டும். உலகின் பல சமயங்கள் உலகத்தை கடவுள் தோற்றுவித்தார் எனக்குறுகின்றன. ஆனால் பௌத்தம் இக்கேள்வியைத் தேவையற்ற ஒன்றாகக் கருதி, விடையை நோக்கிக் கற்பனைக் கதைகளைத் தர மறுக்கின்றது.
உலகம் இருக்கின்றது, அதுவே பெளத்தத்தின் முடிவு. தேவையேற்படின், இவ்வுலகம் முந்தி இருந்த உலகத்தில் இருந்து கர்ம விதிகளுக்கமைய வந்தது எனக் கொள்ளலாம். எப்படி ஒரு மரம் விதையில் இருந்து வந்ததோ, எப்படி விதை மரத்தில் இருந்து வந்ததோ அப்படியே. கடவுள் அல்லது ஒரு ஒருமிய சக்தி உலகைத் தோற்றுவிக்கவில்லை என்பது பெளத்தத்தில், புத்தர் போதனைகளில் முக்கிய ஒரு கொள்கை. இக்கொள்கையைத் தமிழில் சார்பிற்றோற்றக் கொள்கை என்றும் சமஸ்கிருதத்தில் பிரதித்தியசமுப்பாதம் என்றும் ஆங்கிலத்தில் Dependent Origination என்றும் கூறுவர்.
“எப்பொருளும் தோன்றச் சார்புகள் காரணமாக உள்ளன. ஆதலின், ஒருபொருளை உண்டென்றோ இல்லையென்றோ உரைப்பது பிழை. எப்பொருளும் சார்பினால் தோன்றி மறைந்து தோன்றி மறைந்து தொடர்தலின் நிலைபேறான தன்மை இல்லை. தோன்றி மறைதல் என்பது இடையறவு படாமல் விளக்குச்சுடர் போலவும் ஓடும் நீர்போலவும் நிகழ்தலின் தோன்றுதல் மறைதல் என்ற இரண்டிற்கும் இடையே நிறுத்தம் என்பது இல்லை.
ஆதலின், புத்தரின் சார்பிற்றோற்றக் கொள்கை, முதற் காரணத்தை உடன்பட்ட கடவுட் கொள்கையினைப் புறக்கணித்து, ஒன்று தோன்ற ஒன்று சார்பாக உள்ளது என்ற சார்புக் காரணத்தைக் கொண்டது.”
பெளத்த உலகப் பார்வையில் கடவுள் இருப்பதை அனுமானிக்கவில்லை, அப்படி இருந்தாலும் அதற்கான தேவை அங்கு இல்லை. கர்ம விதிகளுக்கு அமையவே உலகம் இயங்குகின்றது, அதை மீறிய மீவியிற்கை ஒன்றிருப்பதைப் பௌத்தம் மறுக்கின்றது. அப்படி இருந்தால் எந்த ஒரு பொருளுக்குமான இருப்பை நோக்கிய பெளத்தத்தின் அடிப்படை மூன்று விதிகளான (1) நிலையாமை, (2) ஆன்மா இன்மை, (3) துக்கம் இருக்கிறது.
கடவுள் என்ற ஒன்று உண்டு என்பதைப் புத்தர் மறுத்தார். எனினும் பெளத்தத்தில் தேவர்கள் என்ற ஒரு வகைப் பிறவிகள் இருக்கின்றார்கள். அவர்கள் ஒரு உயர்ந்த நிலையில் அல்லது வேறு பரிணாமத்தில் கர்ம விதிகளைப் புரியக் கூடியவர்கள் அல்லது அனுபவங்களைப் பெற அல்லது அனுபவிக்கக் கூடியவர்கள், ஆனால் அவர்களும் கர்ம விதிகளுக்குக் கட்டுபட்டவர்களே. மனிதர்களால் துன்பத்தைத் தவிர்க்க முடியாது.
பிறப்பு, நோய், முதுமை, இறப்பு ஆகியவை மனிதருக்குத் துன்பத்தைத் தருபவை. பசி, பகை, கொலை, வெகுளி, இழப்பு, மயக்கம் போன்றவையும் துன்பம் தருபவையே. துன்பத்துக்கான காரணம் ஆசை அல்லது பற்று.
ஆசையை விட்டுவிடுவதுவே துன்பத்தை நீக்கும் முறைமை.
புத்தர் எட்டு நெறிகள் துக்கத்தைப் போக்க உதவும் என்று கூறுகிறார். அவையாவன - நற்காட்சி, நல்லெண்ணம், நன்மொழி, நற்செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி, நற்கடைப்பிடி, நற்தியானம் என்பனவாம்.
திருப்புகழ் கதைகள்: பழனி – பௌத்தம்! முதலில் தினசரி தளத்தில் வெளியான செய்தி.