ஞானமலை மேவு பெருமானே! ஞான பண்டிதப் பெருமானே!

முருகன் ஆலயம்

அருணகிரிநாதருக்கு, தனது பாத தரிசனத்தை முருகன் காட்டி அருளிய தலமும் ஞானமலைதான்! இங்கேயுள்ள முருகனைப் போற்றி இரண்டு திருப்புகழ் பாடல்களைப் பாடினார். அதில் ஒரு பாடலில்,

 

நாதரிட மேவு மாதுசிவ காமி
நாரிஅபி ராமி அருள்பாலா
நாரண சுவாமி ஈனுமக ளோடு
ஞானமலை மேவு பெருமாளே – என்கிறார்.

வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் வழியில், சுமார் 16 கி.மீ. தொலைவில் மங்கலம் எனும் ஊர் உள்ளது. இங்கிருந்து ஞானமலை பெயரைத் தாங்கியுள்ள வளைவின் வழியாக சுமார் 2 கி.மீ. தொலைவு பயணித்தால் ஞானமலை அடிவாரத்தை அடையலாம்.

அடிவாரத்தில் ஞானஸித்தி விநாயகர் சந்நிதி உள்ளது. மலைக்குச் செல்ல படிக்கட்டுகள் மற்றும் நிழற்கூரைகள் ஆகியன உள்ளன. வழியில் வெப்பாலை, குடசப்பாலை மரங்கள். இங்கே, ஸ்ரீமுருகப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் பேரழகுடன் காட்சி தருகிறார். ஞானமலை முருகனின் திருமுகம் ஞானக்களையுடன் திகழும் அழகே அழகு! இதனை பிரம்ம சாஸ்தா வடிவம் என்கின்றனர்!

gnanamalai murugan moolavarபல்லவர்கள் எழுப்பிய ஆலயங்களில், பெரும்பாலும் முருகப் பெருமான், பிரம்ம சாஸ்தா வடிவில்தான் இருப்பாராம்! ஜபமாலை ஒரு கையிலும் கமண்டலம் ஒரு கையிலுமாகக் கொண்டு, முன் கைகள் இரண்டில் ஒன்று அபய ஹஸ்தமாகவும் ஒன்று இடுப்பில் வைத்தபடியும் காட்சி தருகிறார்! உற்ஸவர், கோலக் குறமகள் தழுவிய ஞானக் குமரனாக, வள்ளியைத் தன் மடியில் இருத்தி, அணைத்தபடி காட்சி தருகிறார்.

மலையின் இடப்புறம், ஒரு சுனை. 14-ஆம் நூற்றாண்டில் காளிங்கராயன் என்பவன், ஞானமலை கோயிலுக்கு படிகள் அமைத்த செய்தியைச் சொல்கிறது கல்வெட்டு ஒன்று!

முருகன் சந்நிதிக்குப் பின்னே, மலை மீது சற்று ஏறிச் சென்றால், அங்கே சிவபெருமான் சந்நிதி. இவரை ‘ஞானகிரீஸ்வரர்’ என்கின்றனர். இந்த சந்நிதிக்குப் பின்னே, மலையில் முருகன் பாதம் பதிந்த தடங்களாக இரண்டு உள்ளன. அதை சிறு மண்டபம் போல் கட்டியுள்ளனர்.

ஞானமலை முருகன் கோயிலுக்குச் செல்ல படிகள் கட்டி, இருபுறமும் கைப்பிடிச் சுவர்கள் அமைத்து, பம்பு செட் மூலம் மலைமீது நீரேற்றும் வசதி செய்திருக்கிறார்கள், ‘சிறுவாபுரி முருகன் அபிஷேகக் குழு’ அமைப்பினர். மேலும், உள்ளூர் மற்றும் வெளியூர் அன்பர்களின் துணையுடன், இங்கே உற்ஸவங்களும் சிறப்புற நடைபெறுகிறது.

கந்தசஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் முதலான விழாக்கள் இங்கே விமரிசையாக நடைபெறுகின்றன. அருணகிரிநாதருக்கு முருகன் தரிசனம் தந்த விழா, கார்த்திகை மாதத்தில் சீரும் சிறப்புமாக நடக்கிறது. கல்வி கேள்விகளில் சிறக்க பிரம்மசாஸ்தா வடிவமாகத் திகழும் ஞானமலை முருகனை தரிசிப்போம்!

தொடர்புக்கு: கே. மணி (அர்ச்சகர்)
04177-292411 / 94421 40830

கட்டுரை/படங்கள்:  செங்கோட்டை ஸ்ரீராம்


குறிப்பு:

முருகப் பெருமான் படம் பெரிய சைஸில் (பிக்ஸல் அளவு பெரிதாக) தேவைப்படுவோர் request@www.deivatamil.comil இமெயிலில் தொடர்பு கொள்ளவும். படம் அனுப்பிவைக்கப்படும்.


ஞானமலை முருகன் திருக்கோவில் படங்கள்:

 

Leave a Reply