e0af88-e0aea4e0aebfe0aeb0e0af81e0aeaae0af8de0aeaae0aebfe0ae95.jpg" style="display: block; margin: 1em auto">
கோசல நாடு சரயுநதி பாயும் மிகச் செழிப்பான பூமி. சரயு நதிக்கரையில் உள்ள அமலாபுரம் என்ற சிற்றூரில் ராமச்சந்திர பட்டர் என்பவர் வாழ்ந்து வந்தார்.
இவர் நான்கு வேதங்களையும் கற்றறிந்தவர், சிறந்த ஸ்ரீ ராம பக்தர், கோசல நாட்டு மன்னர் இவரை தனது குருவாக கொண்டார்.
ஆனாலும் ராமச்சந்திரபட்டர் ஆடம்பர வாழ்வை விரும்பவில்லை, அரசகுரு என்ற பதவியை தவறாக பயன்படுத்தியதே கிடையாது.
தினமும் உஞ்சவிருத்தி (பிச்சையெடுத்தல்) சென்று அதில் கிடைக்கும் உணவில் ஒரு பகுதியை ஏழைகளுக்கு கொடுத்துவிட்டு மீதியை தன் மனைவியிடம் கொண்டு கொடுப்பார்.
கணவர் கொண்டு வரும் உஞ்சவிருத்தி அரிசியை இவரது மனைவி விருந்தினர்களும் விரும்பி உண்ணும் வகையில் பக்குவமாக சமைப்பாள்.
ஒருமுறை இனிய பாடல்களை பாடியபடி உஞ்சவிருத்தி செய்தபடி வந்து கொண்டிருந்தார் ராமச்சந்திர பட்டர். இதை உப்பரிகையிலிருந்து மன்னனின் மனைவி பார்த்தாள்.
அவரது எளிய தோற்றத்தைக் கண்ட அரசி மன்னரிடம், தாங்கள் குருவாக ஏற்றிருக்கும் இந்த பெரியவரை நீங்கள் உஞ்சவிருத்தி செய்ய விடலாமா ? இது மிகப் பெரிய பாவமல்லவா ? என்று கேட்டாள். அதற்கு பதிலளித்த அரசன், அவர் பெரிய மகான், ஆசைகள் இல்லாதவர், எவ்வளவு பொன்பொருள் கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ளமாட்டார்.
எனவே என்னால் எதுவும் செய்வதற்கில்லை, என்றான். எனவே அரசி அவரது மனைவிக்கு பொருட்களை அனுப்பலாமா என ஆலோசனை செய்தாள்.
அதன்படி பட்டாடைகள், விலையுயர்ந்த ஆபரணங்களை ராமச்சந்திரபட்டரின் மனைவியிடம் ஒப்படைக்கச் சென்றாள்.
அரசியை பட்டரின் மனைவி வரவேற்றாள், அவள் கொடுத்த பொருட்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டாள்.
வெளியில் சென்றிருந்த பட்டர் வீடு திரும்பினார், நடந்த விபரங்களை அறிந்தார். தன் மனைவியிடம் அரசியிடம் நீ ஏன் பொருட்களை பெற்றாய் ? பணமும் காசும் கொடிய விஷம் என்பதை நீ அறியவில்லையா ? என்றார்.
மறுநாள் ஹோமம் செய்யும்போது ஹோமத்தின் முடிவில் பூர்ணாஹுதி கொடுக்கும் போது அரசி கொடுத்த பட்டாடைகளையும், ஆபரணங்களையும் ஹோம குண்டத்தில் போட்டு விட்டார்.
பட்டரின் மனைவிக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது, மன்னனுக்கும் இந்த செய்தி எட்டியது. அவன் பட்டரின் வீட்டிற்கு வந்தான். பட்டரின் மனைவி கலங்கிப்போனாள்.
மன்னர் கொடுத்த பரிசுப்பொருட்களை ஹோமத்தீயின் இட்டதால் தண்டனை கொடுப்பதற்காக அரசர் வந்துள்ளார் எனக் கருதினாள்.
மன்னன் பட்டரிடம், என் மனைவி அளித்த பொருட்கள் தங்களுக்கு வேண்டாம் என்று சொன்னதாக அறிந்தேன். அதை திருப்பி தாருங்கள், என்றார் அரசர்.
உடனே ராமச்சந்திர பட்டர், அரசனிடம் நீங்கள் அளித்த பொருட்களை இன்னும் சற்று நேரத்தில் தந்துவிடுகிறேன் பொறுத்திருங்கள், என சொல்லிவிட்டு ஹோமகுண்டத்தின் முன்பு கண்மூடி தியானம் செய்ய ஆரம்பித்து விட்டார்.
சற்று நேரத்தில் ஹோமகுண்டத்திலிருந்து ஆடைகளும், ஆபரணங்களும் ஊற்று நீர்போல பொங்கி வெளியே வந்தது, அனைவரும் திகைத்து நின்றனர்.
மன்னன் பட்டரின் கால்களில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டினான். அந்த பொருட்களை ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுத்தனர்.
ராமநாமமும், ஹரிநாமமும் சொல்லியபடியே பட்டர் காலத்தைக் கழித்தார்.
கொடுத்த பொருளை திருப்பிக் கேட்ட மன்னன்! வேள்வி தீயிலிருந்து வரவழைத்த பக்தர்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.