e0af8de0aea3e0aebe-e0ae8ee0aea9e0af8d-e0ae89e0ae9fe0af88e0aeaee0af88e0aeaae0af8d-e0aeaae0af8ae0aeb0e0af81e0aeb3e0af8d-31.jpg" style="display: block; margin: 1em auto">
அண்ணா என் உடைமைப் பொருள் – 31
காமகோடி ராமகோடி
– வேதா டி. ஸ்ரீதரன் –
காமகோடி ராமகோடி புத்தகமும் ஏறக்குறைய மீரா சரிதத்தைப் போன்றதே. ‘‘இதை நான் எழுதினேன் என்பதை விட இதை என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லை என்பதே உண்மை. எதுவோ ஒன்று இதிலே என் கழுத்தைப் பிடித்துத் தள்ளியது’’ என்று இந்த நூலின் முகவுரையில் அண்ணா குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புத்தகம் என் மனதுக்கு ரொம்பவே நெருக்கமான ஒன்று. இதற்குக் காரணம், போதேந்திராள் அதிஷ்டானம்.
இங்கே கொஞ்சம் சுய புராணம் அவசியமாகிறது.
கும்பகோணத்தில் எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் பெயர் விஜயபாலன். அவர் என்னை அவ்வப்போது ஏதாவது கோவில்களுக்கு அழைத்துச் செல்வதுண்டு.
அந்த நண்பரின் மூலம் பத்மநாத ஸ்வாமி என்னும் வெள்ளாடைத் துறவியின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. ஊருக்கு வெளியே தோப்புகளுக்கு நடுவே தனது ஆசிரமத்தில் சத்தமில்லாமல் உட்கார்ந்திருக்கும் அந்த மனிதரின் தொடர்பில் ஏராளமான இளைஞர்கள் உண்டு. அவர்களுக்கு ஏதாவது சின்னச் சின்னப் பொதுக் காரியங்களைச் செய்யுமாறு அந்த ஸ்வாமி உத்தரவு பிறப்பிப்பார். அவர்களும் மிகுந்த ஈடுபாட்டுடன் அவற்றைச் செய்வதுண்டு. குறிப்பாக, கோவில்களில் விளக்கு ஏற்றுவது, அன்னதானம், பாராயணம் முதலானவற்றில் அவருக்கு மிகுந்த ஈடுபாடு.
நான் அண்ணாவுடனும், ஸ்வாமி ஓங்காராநந்தருடனும் தொடர்பில் இருப்பவன் என்பதால் பத்மநாப ஸ்வாமிக்கு என்னை மிகவும் பிடிக்கும். ஒரு நாள் என்னைச் சந்திக்குமாறு இரண்டு இளைஞர்களை அவர் அனுப்பி வைத்தார். அவர்களில் ஒருவர் பெயர் வெங்கட். அவர் கோவிந்தபுரத்தில் வசித்து வருபவர்.
அதற்கு அடுத்த நாள் நண்பர் விஜயபாலன் என்னை கோவிந்தபுரம் அதிஷ்டானத்துக்கு அழைத்துச் சென்றார்.
அந்த அதிஷ்டானத்தில் ஓங்காரம் ஒலித்துக் கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றியது. அங்கே இருந்த சமயத்தில் என் மனதில் ஏற்பட்ட பரவசம் வர்ணனைக்கு அப்பாற்பட்டது. மித மிஞ்சிய பரவச நிலையில் அந்த இடத்தில் இருந்த எதையுமே கவனிக்கத் தோன்றவில்லை. நமஸ்காரமும் பிரதக்ஷிணமும் செய்து விட்டுக் கொஞ்ச நேரம் அமைதியாக அமர்ந்திருந்தேன்.
திரும்பும் போது விஜயபாலன் என்னை வெங்கட் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அதிஷ்டானத்தில் ஓம் என்ற சப்தம் கேட்டுக் கொண்டே இருப்பதாக எனது உள்ளுணர்வு சொல்கிறது. இது சரியா என்று அவரிடம் கேட்டேன். ‘‘சரி தான். ஆனால், அது ஓம் அல்ல, ராம். பல கோடிக்கணக்கில் ராம நாம ஜபம் பண்ணின பகவந்நாம போதேந்திராள் பிருந்தாவனம் இது’’ என்று அவர் கூறினார்.
பிருந்தாவனத்தின் உள்ளே இரவில் அமர்ந்திருந்தால், பின்புறம் ஓடும் வீரசோழம் (காவிரி) நதியிலும் ராம சப்தம் கேட்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
(அதிஷ்டானத்துக்குள் தங்க யாரையும் அனுமதிக்க மாட்டார்கள். சமீப கால வரலாற்றில் மகா பெரியவா மட்டும் ஒரு தடவை இரவில் அதிஷ்டானத்தில் உட்கார்ந்து தியானம் செய்திருக்கிறார்.)
இதற்குச் சில வருடங்கள் பின்னர் காமகோடி ராமகோடி புத்தகம் திவ்ய வித்யா ட்ரஸ்ட் மூலம் வெளியிட ஏற்பாடு நடந்தது. அந்தப் புத்தகத்தின் மூலம் தான் போதேந்திராள் வாழ்க்கையைத் தெரிந்து கொண்டேன். அதிஷ்டானத்துக்குள் எனக்குக் கிடைத்த அனுபவத்துக்கான காரணம் அந்த திவ்ய புருஷரின் வாழ்க்கையே என்பது தெளிவாகப் புரிந்தது.
வட இந்தியா முழுவதும் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கித் தவித்தது. தமிழகம் பெருமளவு தப்பி விட்டது. இதனால் தான் தமிழகத்தில் நமது பண்பாடும் கோவில்களும் பாரம்பரியமும் இன்னமும் கூட ஓரளவு உயிரோட்டத்துடன் இருக்கின்றன என்று நான் நினைப்பதுண்டு. அதில் தவறு இல்லை தான்.
ஆனாலும், அதைவிட முக்கியக் காரணம் பஜனை சம்பிரதாயமும். அதன் மூலம் தென்னிந்தியா முழுவதும் – குறிப்பாக, தமிழகத்தில் – ஏற்பட்ட பக்தி எழுச்சியே என்பது இப்போது புரிகிறது. பஜனை சம்பிரதாயத்தை முறைப்படுத்தி அமைத்தவர் மருதாநல்லூர் ஸ்வாமிகள். அவருக்கு அஸ்திவாரம் போட்டுத் தந்தது போதேந்திராளும் ஐயாவாளுமே.
காமகோடி ராமகோடி புத்தகத்தில் போதேந்திராள் அதிஷ்டானப் புகைப்படம் இணைக்கப்பட்டிருந்தது. அந்தப் புகைப்படத்தின் தரம் நன்றாக இல்லை. அதை மாற்றலாம் என்று அண்ணாவிடம் சொன்னேன். புகைப்படம் கிடைக்காது. அதிஷ்டானத்துக்குப் போய் நாமே தான் படம் எடுக்க வேண்டும். இது கஷ்டமான வேலை. ப்ரூஃப் வேலைகள் முடிந்து விட்டன. எனவே, பழைய புகைப்படத்துடனேயே அச்சுப் போட்டு விடலாம் என்று அண்ணா சொன்னார்.
புகைப்படம் எடுப்பதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன் என்று அண்ணாவிடம் தெரிவித்தேன். அண்ணாவுக்கு உடன்பாடு இல்லை. இருந்தாலும், நான் அடம் பிடித்ததால் சம்மதித்தார்.
கும்பகோணம் விஜயபாலனைத் தொடர்பு கொண்டு புகைப்படம் எடுத்துத் தருமாறு கேட்டேன். அவரும் சம்மதித்தார்.
மறு நாளே அவர் புகைப்படம் எடுக்கும் வேலையில் இறங்கினார். கும்பகோணத்தில் அவருக்குத் தெரிந்த ஃபோட்டோகிராஃபர்கள் மூன்று பேர். மூவருமே வர இயலாத நிலையில் இருந்தார்கள்.
கோவிந்தபுரம் நண்பர் வெங்கட்டைத் தொடர்பு கொண்டு உள்ளூர் ஃபோட்டோகிராஃபர் கிடைப்பார்களா என்று கேட்டேன். அந்த நாட்களில் அவர் கோயம்பத்தூரில் வேலை பார்த்து வந்தார். சரியாக நான் ஃபோன் பண்ணும் போது தான் கோவிந்தபுரம் வந்து சேர்ந்திருந்தார்.
நான் விஷயத்தைச் சொன்னதுமே, ‘‘நல்ல வேளை. என்னைக் கேட்டீர்கள். இல்லாவிட்டால் ஏடாகூடம் ஆகியிருக்கும். ஃபோட்டோ எடுக்க அனுமதிக்க மாட்டார்கள்’’ என்று என்னிடம் தெரிவித்த அவர், புகைப்பட அனுமதிக்காக அதிஷ்டான நிர்வாகியைத் தொடர்பு கொண்டார்.
நிர்வாகி திரு. பாலசுப்பிரமணியத்தை நேரில் சந்தித்து ரா. கணபதி அண்ணாவுக்கு அதிஷ்டான ஃபோட்டோ தேவை, படம் எடுக்க அனுமதி கொடுங்கள் என்று வெங்கட் கேட்டதுமே அவர், ‘‘அவரை எப்படி உங்களுக்குத் தெரியும்?’’ என்று கேட்டாராம். ‘‘அவரைத் தெரியாது, அவருடன் இருக்கும் ஶ்ரீதர் என்பவர் எனது நண்பர்’’ என்று வெங்கட் சொன்னார். உடனே அவர், ‘‘அவர் பெயர் ஶ்ரீதர் இல்லை. ஶ்ரீதரன். தெய்வத்தின் குரல் ஏழாம் பாகத்தில் ரா. கணபதிக்கு ஒத்தாசை பண்ணி இருக்கார்’’ என்று குறிப்பிட்டாராம். கேட்பதற்கே ஆச்சரியமாக இருந்தது!
தெய்வத்தின் குரலை அன்பர்கள் எவ்வளவு ஆழ்ந்து படிக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு பெரிய சாட்சி என்று எனக்குத் தோன்றியது.
அவர் இல்லத்தில் இருந்து வெங்கட் என்னைத் தொலைபேசியில் அழைத்தார். என்னிடம் திரு. பாலசுப்பிரமணியம், ‘‘ஐயா, நாங்கள் ரொம்ப கன்சர்வேடிவ் டைப். ஃபோட்டோல்லாம் எடுக்க விட மாட்டோம். ஆனா, எனக்கு என்னவோ பெரியவாளே நேர்ல உத்தரவு போடறா மாதிரி ஒரு ஃபீலிங் வருது. நீங்க எத்தனை ஃபோட்டோ வேணும்னாலும் எடுத்துக்கோங்கோ!’’ என்று கூறினார்.
ஆடுதுறையைச் சேர்ந்த ஒரு ஃபோட்டோகிராஃபரை அழைத்துக் கொண்டு விஜயபாலனும் வெங்கட்டும் அதிஷ்டானத்துக்குள் சென்று அங்கிருந்து என்னை மொபைலில் அழைத்தார்கள். எந்தெந்த இடங்களை ஃபோட்டோ எடுக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக. அதிஷ்டானத்தின் உள்ளே இருந்து அவர்கள் என்னுடன் பேசியது என்னை மிகவும் பரவசப்படுத்தியது
இது நடந்தது 2005 ல். அன்று அந்த அதிஷ்டானத்தை ஃபோட்டோ எடுப்பதற்குப் பெரியவாளே உள் தூண்டுதலாக இருக்க வேண்டி இருந்தது.
இன்று போதேந்திராள் அதிஷ்டான ஃபோட்டோக்களும் வீடியோக்களும் வாட்ஸ்அப்பில் வலம் வருகின்றன.
காலத்தின் கோலம்.
கோவிந்தபுரம் அருகே ஏராளமான தலங்கள் உள்ளன. எனினும், அவற்றில் திருவிசைநல்லூர் பற்றிக் குறிப்பிட வேண்டியது அவசியம்.
இந்த கிராமம் ஶ்ரீதர ஐயாவாள் வாழ்ந்த ஊர். போதேந்திராளும், ஐயாவாளும் இணைந்து இந்த கிராமத்தில் ஒரு மாமரத்தை நட்டதாக அண்ணா எழுதி இருக்கிறார்.
மேலும், பெரியவாளின் குரு, பரமகுரு ஆகிய இருவருடனும் தொடர்பு கொண்ட ஊர் திருவிசைநல்லூர்.
இந்த கிராமத்தைச் சேர்ந்த வேங்கட சுப்பா சாஸ்திரிகளிடம் தான் பெரியவாளின் பரமகுரு வேதாந்த பாடம் படித்தார். பெரியவாளின் குரு பூர்வாசிரமத்தில் அவருக்குப் பெரியம்மா மகன். அவரது பூர்வாசிரமப் பெயர் காந்தன். அவரது அவதாரத் தலம் இதுவே.
இவரைப் பற்றிய ஓர் அபூர்வத் தகவல் உண்டு.
குரு, பரமகுரு இருவருமே சமாதி அடைந்த பின்னர் தான் பெரியவா மடத்தின் பீடாதிபதியாக நியமிக்கப்பட்டார். எனவே, பெரியவாளுக்கு குருமுகமாக தீக்ஷை கிடைக்கவில்லை என்றே நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். இது சரி தான். எனினும், முழுக்கவே சரி என்று சொல்லி விட முடியாது. மிகவும் வினோதமான விதத்தில் குருவிடமிருந்து பெரியவாளுக்கு மந்திர உபதேசம் கிடைத்திருக்கிறது.
சிறு வயதில் ஸ்வாமிநாதன் (பெரியவாளின் பூர்வாசிரமப் பெயர்) குடும்பத்தினருடன் காந்தன் சில காலம் தங்கி இருந்தார். அப்போது காந்தன் மந்திரங்களை ஓதுவதைக் கேட்டுக் கேட்டு ஸ்வாமிநாதனுக்கும் அவை மனப்பாடம் ஆகின. அவரும் பாராயணம் செய்ய ஆரம்பித்தார். எனினும், ஸ்வாமிநாதனுக்குப் பூணூல் போடவில்லை என்பதால் அவரது குடும்பத்தினர் அவர் மந்திர பாராயணம் செய்யக் கூடாது என்று தடை விதித்து விட்டனர்.
அண்ணாவின் காஞ்சி முனிவர் நினைவுக் கதம்பம் புத்தகத்தில் இந்த விவரம் உள்ளது.
போதேந்திராள் காஞ்சி மடத்தின் 59வது பீடாதிபதி. இவரது குரு ஆத்ம போதேந்திர சரஸ்வதி. சதாசிவ பிரம்மேந்திராளுக்கும் குரு ஆத்ம போதேந்திரரே.
போதேந்திராள், ஐயாவாள், பிரம்மேந்திராள் மூவரும் சம காலத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்த நாட்டு ஞானியர் வரிசையில் சதாசிவ பிரம்மேந்திராளுக்குத் தனி இடம் உண்டு. அவர் ஒரே நேரத்தில் மூன்று இடங்களில் மகாசமாதி அடைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம்.
இள வயதில் பிரம்மேந்திராள், எல்லோருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருப்பாராம். ஒருமுறை அவரது குரு, ‘‘இந்த வாய் மூடவே மூடாதா?’’ என்று சொல்லிக் கண்டித்தாராம்.
அத்துடன் சதாசிவ பிரம்மேந்திராளின் பேச்சு நின்றது. அவர் மௌனியாகி விட்டார். தன் காலம் முடியும் வரை யாருடனும் அவர் பேசவே இல்லை.
‘‘பேச மாட்டேன் என்பது தானே உங்கள் விரதம்! பாட மாட்டேன் என்பதில்லையே!!’’ என்று சொன்ன போதேந்திராள் அவரைப் பாடுமாறு வேண்டினார். அதன் பின்னரே பிரம்மேந்திராள் பாட ஆரம்பித்தார். கர்நாடக சங்கீதத்தில் பிரம்மேந்திராள் கீர்த்தனைகளுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு.
ஶ்ரீதர ஐயாவாள் வீட்டில் சிராத்தம் நடைபெறும் தினத்தில் வீட்டுக்குப் பின்புறமாக வந்த ஒருவர், ஐயாவாளிடம், பசிக்கிறது என்று சொல்லி உணவு வேண்டினார். சிராத்தத்துக்காகச் செய்யப்பட்ட உணவு மட்டுமே அப்போது அவர் வீட்டில் இருந்தது. அதனாலென்ன, இந்த மனிதருக்கு உணவு அளித்து விட்டு மீண்டும் சிராத்தத்துக்குகாகச் சமையல் பண்ணிக் கொள்ளலாம் என்று முடிவு செய்த ஐயாவாள் அந்த மனிதருக்கு உணவிட்டார்.
சிராத்தச் சாப்பாடு வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டது பெரிய தோஷம் என்பதால், தோஷ நிவிருத்திக்காக ஐயாவாள் கங்கையில் நீராட வேண்டும் என்றும், அதன்பின்னரே அவர் வீட்டில் சிராத்தம் செய்து வைக்க முடியும் என்றும் புரோகிதர்கள் தீர்மானமாகத் தெரிவித்தனர்.
கங்கைக்குப் போய் வருவதற்குப் பல மாதங்கள் ஆகிவிடுமே, இன்று நான் சிராத்தம் செய்ய முடியாமல் போய் விடுமே என்று ஐயாவாள் மனம் கலங்கி நின்ற போது அவரது வீட்டுக் கிணற்றில் இருந்து நீர் பொங்கியது. கங்கையைத் தலையில் சூடியவனின் அருளில் கங்கையே தனது இல்லத்தில் எழுந்தருளி விட்டாள் என்பதை உணர்ந்த அவர் அதில் நீராடி சிராத்த கைங்கர்யத்தை மேற்கொண்டார்.
எனினும், சிலர் அதைக் கேலி பேசினர். வீட்டில் எதேச்சையாக கிணற்றில் ஊற்று பொங்கியது, இதை கங்கா பிரவாகம் என்று சொல்லலாமா என்று அவர்கள் கேட்டார்கள்.
அப்போது சதாசிவ பிரம்மேந்திராள் திருவாக்கில் கீதம் பொங்கியது: அந்தப் பாடலில் அவர், கிணற்றில் பொங்கும் ஊற்று நீர் தெருவெங்கும் வெள்ளமாகப் பிரவகித்ததையும், அந்த நீரில் முதலைகள் இருந்ததையும் குறிப்பிட்டு, ஐயாவாள் இல்லத்துக் கிணறில் பொங்கியது கங்கா ஜலமே என்பதை அனைவருக்கும் உணர்த்தினார்.
ஆண்டுதோறும் கார்த்திகை அமாவாசையன்று இந்தக் கிணறில் கங்கை பொங்குவதாக ஐதிகம்.
போதேந்திராளாளின் குருவான ஆத்ம போதேந்திர சரஸ்வதியை விச்வாதிகர் என்றே ஆன்றோர் அனைவரும் கொண்டாடினர். உலகை விஞ்சிய மாண்பினர் என்பது இதன் விளக்கம்.
இவரது சமாதி விழுப்புரத்துக்கு அருகே வடவாம்பலம் என்ற கிராமத்தில் இருந்தது. காலப்போக்கில் அது ஏதோ வயல்வெளியில் புதைந்து மறைந்து விட்டது. எத்தனையோ பேர் முயற்சி செய்தும் சமாதி இருந்த இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
1927 இல் மகா பெரியவா வடவாம்பலத்துக்கு வந்திருந்தார். அப்போது வயல்வெளிகளின் வழியே பார்வையை ஓட்டியவாறு சென்ற அவர் ஓர் இடத்தைக் கை காட்டி அங்கே தோண்டுமாறு உத்தரவிட்டார். உள்ளூர் வாசிகள் அந்த இடத்தை ஏற்கெனவே அகழ்ந்து பார்த்திருப்பதாகவும், சமாதி எதுவும் தென்படவில்லை என்றும் கூறினார்கள். பரவாயில்லை, இன்னொரு தடவை முயற்சித்துப் பார்க்கலாம் என்று பெரியவா சொன்னதன் பேரில் அந்த இடத்தைத் தோண்ட ஆரம்பித்தார்கள்.
ஆழமாக வெட்டிக் கொண்டிருக்கும் போது அவர்களில் ஒருவருக்கு திடீரென ஆவேசம் ஏற்பட்டது. ‘‘நிறுத்துங்கள், நிறுத்துங்கள்’’ என்று கத்தியவாறே அவர் மூர்ச்சையடைந்தார்.
மயக்கம் தெளிந்து எழுந்த பின்னர் அவர், அந்த இடத்தில் ஆகாயத்துக்கும் பூமிக்குமாக வியாபித்த ஒரு சன்னியாசியின் உருவம் அவர் கண் முன்னே தோன்றியதாகவும், அவரைச் சுற்றி ஆயிரக்கணக்கானோர் வேத மந்திரங்கள் சொல்லிக் கொண்டிருந்ததாகவும், தோண்டுவதை நிறுத்துமாறு அவர் உத்தரவிட்டதாகவும் தெரிவித்தார்.
பெரியவாளின் உத்தரவுப்படி அந்த இடத்தில் ஆத்மபோதர் பிருந்தாவனம் எழுப்பப்பட்டது.
அண்ணா என் உடைமைப் பொருள் (31) : காமகோடி ராமகோடி! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.