ஸ்ரீமஹாஸ்வாமி – ஒளி வீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 7)

ஆன்மிக கட்டுரைகள்

e0aebf-e0aeb5e0af80e0ae9ae0af81.jpg" style="display: block; margin: 1em auto">

mahaswamigal series
mahaswamigal series

7. ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி
– Serge Demetrian (The Mountain Path)
– தமிழில்: ஆர்.வி.எஸ் –

ஸ்ரீ மஹாஸ்வாமியின் தேஜாக்னி அடக்கப்பட்டிருக்கிறது. இல்லையேல் அவரைப் பார்ப்பவர்கள் பலரை அது பொசுக்கி சாம்பலாக்கியிருக்கும். பூஜை முடியும் தருவாயில் அந்தப் பிராந்தியம் முழுவதுமே தெய்வ சக்தி நிரம்பி அவரவர் தங்களது பெயர்களையே மறக்கும் நிலை எய்தினர். ஆரத்தி எடுத்து பூஜை நிறைவுக்கு வந்தது. திரை விலக்கப்பட்டது.

ஸ்ரீ மஹாஸ்வாமி வெங்கல அடுக்கு தீபாராதனைக் காட்டினார். அது சுடர்விட்டு பிரகாசித்தது. அந்தப் பிரகாசமாக ஆடும் ஜோதிகளுக்கும் அவருக்கும் என்னால் வித்யாசமே கண்டுபிடிக்கமுடியவில்லை. துடிதுடித்து எரியும் அந்த தீபங்களை விட ஜோதிப்பிழம்பாக நிற்கும் ஸ்ரீ மஹாஸ்வாமியே பெரிதும் ஜொலித்தார்.

பூஜையை தரிசனம் செய்துகொண்டிருந்தவர்கள் இப்போது எனக்கு நெருக்கமானார்கள். அவர்கள் எனக்கு கொஞ்சம் இடம் கொடுத்தார்கள். என்னிடம் பேச்சுக்கொடுத்தார்கள். யாரோ ஒருவர் அருந்த நீர் கொடுத்தார். “எம் மேலேப் படாதே” என்று பாரம்பரியவாதிகள் ஒதுங்கிப் பதறுவார்கள் என்ற வார்த்தை கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டது என்று தீர்மானமாகியது. மேலும் இதுபோன்ற கட்டுப்பாடுகளும் தடைகளும் இளம் தலைமுறையினரால் கடைப்பிடிக்கபடுவதில்லை.

எல்லாம் நல்லபடியாக முடிந்தது. நான் டவுனுக்குக் கிளம்பினேன். கையில் தேவையான காசு கொண்டுவராததால் ரிக்‌ஷா போன்ற சௌகரியத்தை அனுபவிக்கமுடியவில்லை. மீண்டும் மடத்தின் வாசலைக் கடக்கும்போது சில பக்தர்கள் யாருக்கோ காத்திருந்தார்கள். அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நகர்ந்தேன். சில தப்படிகள் சென்றவுடன் புதியதாய் ஒருவர் என் கையைப் பிடித்து சில நிமிஷங்கள் அங்கே நிறுத்தினார்.

மடத்தை நெருங்கும் ஸ்ரீ மஹாஸ்வாமியைத் தரிசனம் செய்வதற்குதான் அவர்கள் அங்கே நின்றிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள வெகுநேரம் பிடிக்கவில்லை. அந்தப் புதிய நண்பர் என்னைப் பிடித்து நிறுத்தியிருக்காவிட்டால் நான் அந்த வாய்ப்பை இழந்திருப்பேன்.  வாழ்க்கையே இதுபோல சின்னச் சின்ன அதிர்ஷ்டங்களால் நிரம்பியிருக்கிறது. நாம் எப்போதும் விழித்திருக்கவேண்டும். நாம் எதிர்பாரத சமயங்களில் விதி சில சமிக்ஞைகள் காட்டி வழிநடத்துகிறது. சரி…. நாம் விரைந்துசெல்வோம்… அதோ ஸ்ரீ மஹாஸ்வாமி வருகிறார்!

மிகவும் மெதுவாக நடந்து வந்தார். கூட்டம் அவரது ஒவ்வொரு அடிக்கும் நிறுத்தியது. பவ்யமாகக் குனிந்தார்கள். நமஸ்கரித்தார்கள். மாமுனி முக்கியமான பூஜை அல்லது கோயிலை விட்டு வெளியே வரும்போது தரிசிப்பது புண்ணியமாகக் கருதப்படுகிறது. கோயிலுக்குள்ளேயும் இதுபோன்ற பூஜைகளின் போதும் அவர்களது தெய்வத்தன்மையினுள் மீண்டும் உறிஞ்சப்படுவதே இதற்கு காரணமாக இருக்குமோ? ஸ்ரீ மஹாஸ்வாமியை தரிசனம் செய்ததற்குப் பிறகு அந்தப் புண்ணியத்தை நம்புவதற்கு தூண்டப்பட்டேன்.

இப்போது அவசாரவசரமாக நானொரு திட்டமிட்டேன். இப்போது நமஸ்கரிக்கப்போகிறேன். அவர் போகும் வழியில் நடப்பதை மறிப்பது போலல்லாமல் கொஞ்சம் ஓரமாக நமஸ்கரிக்கவேண்டும். சட்டையைக் கழற்றினேன். அங்கவஸ்திரத்தை எடுத்து மார்பைச் சுற்றிக் கட்டிக்கொண்டேன். காத்திருந்தேன். அதோ.. பக்கத்தில் வந்துகொண்டிருக்கிறார். அவரது வழியில் எப்படியோ கூட்டம் குறைந்திருந்தது. நான் அவரைப் பார்த்துக்கொண்டேயிருந்தேன். “இப்போது அவர் கண்களைத் திருப்பி என்னைப் பார்க்கப்போகிறார்” என்று நினைத்தேன்.

இதோ… அந்த தருணம்.. நமஸ்கரிக்க குனிகிறேன். எனக்கு இன்னமும் அவரைப் பார்த்து உறைவதற்கு நேரமிருக்கிறது. இந்த கணத்தில்…ஆஹா… ஸ்ரீ மஹாஸ்வாமி என்னை நோக்கித் திரும்பினார். அவர் என்னை யாரென்று கண்டுபிடித்துவிட்டார். ஆச்சரியத்தில் அவரது புருவங்கள் உயர்ந்தன. அமைதியாகி விட்டார்.

நேற்று காலை பழமாலைகள் அணிந்த காமாக்ஷி அம்மன் சந்நிதியில் என் இருதயத்தில்  அவர் விளைந்திருந்தார். வெகுநேரம் அங்குமிங்கும் நகராமல் நான் பூஜையைத் தரிசனம் செய்து உள்ளுக்குள்ளே வாழ்ந்திருக்கிறேன் என்பதை அவரும் புரிந்துகொண்டாரோ என்று நினைத்தேன்.

kanchi mahaperiyava
kanchi mahaperiyava

அவரது ஈட்டி போன்ற பார்வை மெதுவாக என் கண்மணிகளுக்குள் புகுந்தன. இந்த சூக்ஷும ஏவுகணைத் தாக்குதல் ஸ்ரீ மஹாஸ்வாமியின் விஸ்வரூப ஸ்தூல சரீரத்தை – அங்கே அவர் மட்டுமே இருக்கும்படி – என்னைத் துளைத்துக் காட்டியது. அவர் முன்னால் தரையில் விழுந்து நமஸ்கரித்தேன். எனது உடம்பு பக்தியால் நடுங்கியது. தோன்றி மறையும் வாழ்க்கையில் கட்டுண்ட நான் மானசீகமாக அவரது மலர்ப்பாதங்களை தழுவிக்கொண்டேன்.

அவரது சரணாரவிந்தங்களே என்னைக் காக்கும்! சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வது கொஞ்சம் நேரம் பிடிக்கும் வந்தனம். எழும் போது அவரது பாதரக்ஷைகள் அப்போதுதான் நகர்வது கண்களுக்குப் புலப்பட்டது. ஸ்ரீ மஹாஸ்வாமி அவ்வளவு நேரம் பொறுமையாகக் காத்திருந்தார். உடனே எல்லோரைப் போல அவர் பின்னால் செல்வதற்கு தலைப்பட்டேன்.

தற்காலிகமாக அங்கே கிடைத்த நண்பர் ஒருவர், விஷ்ணு பக்தர், தெருவில் கருடவாகனத்தில் ஊர்வலமாகச் செல்லும் உற்சவ மூர்த்தியைத் தரிசிக்க கையைப் பிடித்து இழுத்துக் காட்டினார். தரிசித்தேன்.

“ஸ்ரீ மஹாஸ்வாமியை என்ன மேஜிக்னால உங்க முன்னாடி நிறுத்திட்டீங்க சார்?” என்று கேட்டார்.

“அன்பினால்தான்” என்று பதிலளிக்க எண்ணினேன். ஆனால் பேசவிலை. அவரைப் பார்த்தேன். என் பதில் அவருக்குப் புரியாது என்று எண்ணினேன். பதில் பேசாமல் அவரது கையை ஆதூரமாகப் பற்றிக்கொண்டேன்.

ஸ்ரீ மஹாஸ்வாமி சில பக்தர்கள் புடைசூழ அவர்களுடன் பேசிக்கொண்டே பூங்காக்கள் மற்றும் சில குறுகிய வழிகளைக் கடந்து வியாஸ சாந்தாளேஸ்வரர் கோயிலுக்குச் சென்றார். சதுர்மாஸ்ய விரதத்தை அங்கேதான் அனுஷ்டிக்கிறார். நேற்று காலை நான் சென்ற திசைக்கு எதிர் திசையில் இது இருக்கிறது. அவர் செல்லும் வழியெல்லாம் ஜனங்கள் விட்டு விட்டு நமஸ்கரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அவர் செல்லும் பாதையைத் தூய்மைப்படுத்துவதற்காக யாரோ பெரிய அண்டாவிலிருந்து நீரைத் தெளித்தார்கள். ஸ்ரீ மஹாஸ்வாமி கடந்தவுடன் சில நீர்த்துளிகளை எடுத்து என் தலையில் புரோக்ஷணம் செய்துகொண்டேன். அந்த நடமாடும் பிரத்யட்ச தெய்வத்தின் பின்னால் நடக்கும் போது அவரது பாதரட்சைகள் பதிந்த தடங்களில் கால் வைத்து பின்பற்றினேன்.

இரண்டு உதவியாளர்கள் ஸ்ரீ மஹாஸ்வாமியின் உடமைகளைச் சுமந்து வந்தார்கள். கருப்பாக முடப்பாக இருந்த கம்பளம், இரண்டு பாய்கள், சில டப்பாக்கள், சில சமையலறை சாமான்களாக இருக்கலாம். இன்னொரு உதவியாளர் மிகவும் அமைதியாக ஸ்ரீ மஹாஸ்வாமிகள் அணிந்து கழற்றிய பாதரட்சைகளைக் கையில் ஏந்தி வந்துகொண்டிருந்தார். ஒரு இடத்தில் ஸ்ரீ மஹாஸ்வாமிகள் பாதம் பதித்த இடத்திலிருந்து ஒரு பிடி மண்ணை எடுத்துக்கொண்டேன். அந்த நுண்ணிய துகள்களிலிருந்து “ஏதோ” ஒன்று எனக்குள் பாய்ந்தது.

ஸ்ரீ மஹாஸ்வாமி அடிக்கடி நின்று நின்று சென்றார்கள். அவரது வதனத்தை இப்போது தெளிவாகப் பார்த்தேன். பூஜைக்கு முன்னால் மடத்துக்குள் நுழைந்தபோதிருந்த இறுகிய முகம் இல்லாமல் இப்போது சாந்தமாக இருந்தார். ஐந்து மணி நேரங்கள் நின்றபடி எல்லா பூஜைகளையும் செய்திருந்தாலும் அந்த களைப்பு சிறிதுமின்றி தென்பட்டார். ஒரு வயதான பெண்மணி ஓடிவந்து அவரது பாதங்களைத் தொட்டுக் கும்பிட முயன்றபோது உதவியாளர்கள் சட்டென்று தடுத்தார்கள்.

இருந்தாலும் ஸ்ரீ மஹாஸ்வாமிகள் நின்று நிதானமாக அந்தப் பெண்மணிக்கு ஆசிகள் வழங்கினார். அவரது முகத்திலிருந்து அளப்பரிய கருணை சுரந்தது. சிறிது நேரத்தில் முழு போதையுடன் ஒரு ஆள் எதிர்பட்டார். அவர் வந்து ஸ்ரீ மஹாஸ்வாமிகளை நமஸ்கரித்துவிட்டு எழுந்து செல்லும்வரை எந்தவித முணுமுணுப்புமின்றி அப்படியே நின்றிருந்தது அந்த தெய்வம்!

இரவும் பகலும் சந்திக்கும் அந்தி சாயும் வேளையில் நாங்கள் கோயிலை அடைந்தோம். செக்கச் சிவந்த சூரியனிடமிருந்து பிரிந்த பொற்துகள்கள் இந்தப் பூமியை, மரங்களை இம் மனித இனத்தைத் தழுவும் வேளை. காணும் எல்லாம் மங்கலாகவும் மறைவது போலவும் பிசுபிசுப்பாகத் தெரிந்தன.

ஸ்ரீ மஹாஸ்வாமிகளின் இருப்பினால் இந்த இடங்கள் பக்திமயமாகப் புனிதப்பட்டுவிட்டன. இங்கிருந்து அருகே ஒரு பெரிய நீர்த்தேக்கம் இருக்கிறது. பல அடிகள் வைத்து உள்ளே இறங்கவேண்டும். ஸ்ரீ மஹாஸ்வாமிகள் இங்கே அடிக்கடி வருவார்கள். கழுத்துவரை நீர் தளும்ப உட்கார்ந்து ஜபம் செய்வார்கள். யாருக்காக பிரார்த்திக்கவேண்டும்? யாருடைய நலனுக்காக?

இந்த சாயந்திரவேளையில் நேரடியாக அமைதியாகவும் வெள்ளை வெளேர் என்றுமிருந்த கோயிலுக்குள் நுழைந்தார். நான் பின்னால் நின்று கவனித்துக்கொண்டிருந்தேன். கோயில் வாசலில் நின்று நான் பார்த்தவரையில் நேரே ஒரு திறந்தவெளி கடந்து இடது புறம் திரும்பி ஜன்னல்கள் இல்லாத சின்ன கட்டிடம் ஒன்று இருக்கிறது. குனிந்து அந்தச் சிறிய துவாரம் போலிருக்கும் வாசலுக்குள் நுழைந்து உள்ளே சென்றுவிட்டார்.

உயர்ஜாதிக்காரர்கள் பெரும் தனவந்தர்கள் தங்களது கார்களை கோயிலின் முன்னால் நிறுத்தி இறங்கி உள்ளே செல்கிறார்கள். அந்தப் பழைய கோயிலினுள் அவர்கள் கொண்டு வந்திருந்த பூ பழம் ஆகியவைகளை எடுத்துச் செல்கிறார்கள். ஸ்ரீமஹாஸ்வாமி தங்கியிருந்த அந்த குகை போன்ற இடத்தின் வாசலில் அவைகளை வைக்கிறார்கள். அப்படியே வாசலில் நமஸ்கரிக்கிறார்கள். தங்களது தேவைகளையும் குறைகளையும் ஒரு பயணச்சீட்டு வழங்கும் கவுண்டருக்கு முன்னால் நிற்பது போல நின்று ஸ்ரீ மஹாஸ்வாமிகளிடம் பிரார்த்தித்துக்கொண்டு நிம்மதியாக வீடு திரும்புகிறார்கள்.

பருவகாலமாகையால் சீக்கிரமே இரவு கவிந்துவிட்டது. ஒரு அகல் விளக்கிலிருந்து மட்டும் ஒளி கசிய ஸ்ரீ மஹாஸ்வாமி அந்த இருட்டறையின் குளிரில் தனித்திருக்கிறார். ஒன்றிரண்டு தம்பளர்கள் பாலை அருந்திவிட்டு இரண்டு சிமெண்டு ஸ்லாபுகளுக்கு மத்தியில் பாயை விரித்து அதில் படுத்து தன்னை காவி வஸ்திரத்தினால் போர்த்திக்கொள்கிறார். இவ்வுலகத்தின் ஆன்மிகப் பேரரசர் மடக்கிய தனது கரத்தையோ அல்லது ஒரு சாதாரண செங்கல்லையோ தலையணையாக வைத்துக்கொள்வார்.

தொடரும்….

#ஸ்ரீமஹாஸ்வாமிஒளிவீசும்கண்கள்கொண்டமாமுனி
#மஹாஸ்வாமி
ஆர்விஎஸ்_பகுதி7

ஸ்ரீமஹாஸ்வாமி – ஒளி வீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 7) முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply