ஸ்நானம் செய்வதில் இத்தனை விஷயங்கள் உள்ளதா?

ஆன்மிக கட்டுரைகள்

ஸ்நானம் என்றால் நதியில் நீராடுவதும் அல்லது பக்கெட்டில் இருந்து எடுத்து உடலில் ஊற்றிக்கொள்வதும் பளிச் சென்று நம் நினைவுக்கு வரும். ஸ்நானம் என்பதை எங்கெங்கு எப்படிச் செய்ய வேண்டும் என்பதை நமது சாஸ்திரங்களில் இருந்து தெளிவாகத் தெரிந்துகொள்ள முடிகின்றது. எந்த இடத்தில் எப்படி நீராட வேண்டும் ..

ஸ்நானங்கள் இரு வகையாகப் பிரிக்கப்படுகின்றன. அவை முக்கிய ஸ்நானம், கௌண ஸ்நானம் ஆகும்.

க்ரியா ஸ்நானம்,
காம்ய ஸ்நானம்,
நைமித்திக ஸ்நானம்,
க்ரியாங்க ஸ்நானம்
மலாபாஹர்ஷண ஸ்நானம்,
நித்ய ஸ்நானம்
ஆகியவை முக்கியமானவை.

க்ரியா ஸ்நானம்: பவித்திரமான புண்ணிய நதிகளில் நீராடுவதுதான் க்ரியா ஸ்நானம். நதிகளில் நீராடும்போது, நதியின் நீரோட்டம் எந்தப் பக்கம் இருக்கின்றதோ, அதற்கு எதிர்முகமாக நின்றுகொண்டு (நீரோட்டத்தை எதிர்த்தாற்போல்) நீரில் நன்கு மூழ்கி ஸ்நானம் செய்ய வேண்டும்.

காம்ய ஸ்நானம்: ஒரு சிலருக்கு பரிகாரத்துக்காக சில க்ஷேத்திரத்தில் இருக்கும் குளங்களில் ஸ்நானம் செய்ய நேரிடும். அவ்வாறு குளிக்கும்போது, வேறு எதைப் பற்றியும் கவலைப்படாமல் சூரியனைப் பார்த்து நின்றுகொண்டு குளத்தில் மூழ்கி ஸ்நானம் செய்ய வேண்டும்.

நைமித்திக ஸ்நானம்: சூரிய கிரகணம், சந்திர கிரகணம், துக்கத் தீட்டு, பிரசவத் தீட்டு, க்ஷவரத் தீட்டு, தம்பதியர் சேர்க்கைத் தீட்டு இவற்றுக்காகச் செய்யப்படும் ஸ்நானமே நைமித்திக ஸ்நானம் ஆகும். இந்தத் தீட்டைக் களைய, குளங்களில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு நீராட நேர்ந்தால், கிழக்கு நோக்கியபடி நின்றுகொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும். அதைத் தவிர, கிணற்றங்கரையிலோ பாத்ரூமிலோ குளிப்பவர்கள், கிழக்கு முகமாகப் பார்த்தவண்ணம் ஸ்நானம் செய்ய வேண்டும்.

க்ரியாங்க ஸ்நானம்: ஹோமம், ஜபம், பித்ருகர்மா முதலியவை செய்வதற்காக நீராடுவதுதான் க்ரியாங்க ஸ்நானம். ஹோமம், ஜபம் முதலியவை செய்வதை முன்னிட்டு, ஸ்நானம் செய்யும்போது கிழக்கு திக்கைப் பார்த்தும், பித்ருகர்மா செய்யும்போது தெற்கு திக்கைப் பார்த்தபடியும் நின்று கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும்.

மலாபாஹர்ஷண ஸ்நானம்: சரும வியாதிகளைப் போக்கிக் கொள்ள தைலங்கள் தேய்த்துக்கொண்டு குளித்தல் மற்றும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு மலாபாஹர்ஷண ஸ்நானம் என்று பெயர். இந்த ஸ்நானத்துக்கும் கிழக்கு நோக்கித்தான் நீராடவேண்டும். சூரிய உதயத்துக்குப் பின் உச்சிவேளைப் பொழுதுக்கு ஸ்நானம் செய்ய வேண்டும்.

நித்ய ஸ்நானம்: அன்றாடம் உடலிலுள்ள அழுக்கைப் போக்கிக் கொள்வதற்காச் செய்யப்படும் ஸ்நானமே நித்ய ஸ்நானம் எனப்படுகிறது. சாஸ்திரத்தில் தினமும் மூன்று முறை ஸ்நானம் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது.

கௌண ஸ்நானம்: மேற்கூறிய முக்கிய ஸ்நானங்களுக்குப் பதிலாக, தேக ஆரோக்கியம் காரணமாக சாஸ்திரத்தில் கூறிய முறைப்படி அல்லாமல் மாற்று முறையில் செய்யப்படுவதுதான் கௌணஸ்நானம். உதாரணமாக, தலையில் ஜலம் ஊற்றிக்கொள்ள உடல்நலம் இடம் தராமல் கழுத்தோடு குளிப்பது அல்லது அதுவும் முடியாமல் மஞ்சள் கலந்த நீரை ப்ரோக்ஷித்துக்கொண்டு விபூதியை இட்டுக்கொள்வது போன்றவை முக்கிய விதியைத் தவிர்த்து, கௌண விதியை அனுசரித்து மேற்கொள்ளும் முறையாகும்.

சாஸ்திர முறைகள் ஒருபக்கம் இருக்க, லௌகீகமாக பஞ்ச ஸ்நானங்கள் என்பதும் உண்டு.அதாவது,
பஞ்சபூதங்களின் சக்திகள் நம்மை இயக்குகின்றன என்பதை பஞ்ச ஸ்நானங்களின் மூலம் லோகாயதமாக அறிந்துகொள்ள முடிகிறது.

  1. அக்னி சம்பந்தமுடைய பஸ்மத்திலிருந்து விபூதி கிடைப்பதால், விபூதி தரித்துக்கொள்வதை ஆக்நேய ஸ்நானம் என்றும் தேயுவுக்கு சம்பந்தமாகவும் கூறப்படுகிறது.

  2. பசுக்கள் செல்லும்போது அவற்றின் குளம்படிகளிலிருந்து கிளம்பும் மண் காற்றின் மூலம் மேலே படுவது சிரேஷ்டமாகக் கூறப்படுகின்றது. அதற்கு வாயவ்ய ஸ்நானம் என்று பெயர். இது, வாயுவின் பெயரால் பெறப்படும் ஸ்நானம்.

  3. சாதாரணமாக, வெறுமனே நீரை மட்டும் தேகத்தில் விட்டுக்கொண்டு குளிப்பது வாருண ஸ்நானம் அதாவது, வாருணம்தான் அப்பு என்பது.

  4. மந்திரங்கள் யாவும் ஆகாசத்தில் ஒலியாக வியாபித்திருக்கின்றன. பூஜைகளின்போதும் ஹோமங்களின்போதும், ஒரு கலசத்தில் இருக்கும் நீரை மந்திரங்கள் கூறிய படி தர்ப்பையால் புரோகிதர் நம்மேல் தெளிப்பதற்கு ப்ராஹ்ம ஸ்நானம் என்று பெயர். பஞ்சபூதங்களில் ஆகாயத்துக்கானது இது.

  5. நடக்கும்போது பசுக்களின் குளம்படி மண்ணானது வாயுதேவனின் உதவியோடு நம்மேல் பட்டாலும், அந்த மண்ணானது (கோ தூளி) ஒருவரைப் புனிதமாக்குவதாகப் கூறப்படுகிறது. மேலும், ரோக நிவாரணத்துக்காக மேனியில் பூசப்படும் புற்றுமண் போன்றவையால் இதை மிருத்திகை ஸ்நானம் என்கிறார்கள். இவை இரண்டுமே ப்ருத்விக்காகக் கூறப்படுகிறது.

இவையெல்லாவற்றையும்விட விசேஷமாகவும் ஸ்ரேஷ்டமாகவும் சொல்லப்படுவது திவ்ய ஸ்நானம் என்பது. அதாவது, வெயில் காயும்போதே சில சமயங்களில் மழைத் தூறல்களும் சம்பவிக்கும். அப்போதைய மழைத்துளிகள் தேவலோகத்தில் இருந்துவரும் தீர்த்தத்துக்குச் சமமாகக் கருதப்படுகின்றது. அப்படிப்பட்ட வேளையில் எல்லோரும் அந்தப் புனித நீரில், அதாவது, திவ்ய ஸ்நானத்தில் நனைந்து நம்மைப் புனிதப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவா கூறியிருக்கிறார்.

“”இது பெண்களுக்கு மட்டும்””

விசேஷ தினங்களைத் தவிர, மற்ற நாட்களில் பெண்கள் தலைக்குத் தண்ணீர் ஊற்றிக்கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை. மஞ்சள் தண்ணீரை, தலைக்கு புரோக்ஷணம் செய்து கொண்டாலே போதும் என்று சாஸ்திரத்தில் கூறியிருக்கிறது என்கிற தகவலையும் ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவா தெரியப்படுத்தியிருக்கிறார். ஸ்நானம் என்பது, உடல் அழுக்கை மட்டும் போக்குவதற்காக மேற்கொள்ளப்படும் சுத்திகரிப்பு எனக் கொள்ளக் கூடாது. ஆன்மாவின் பாவங்களைக் களைவதற்காகவும் மேற்கொள்ளப்படும் சுத்திகரிப்பு என்பதை மனதில் ஆழமாக பதியவைத்துக் கொண்டு நீராட வேண்டும். ஒவ்வொரு முறை ஸ்நானம் செய்யும்பொழுதும்,

“கங்கேச யமுநே சைவ கோதாவரீ ஸரஸ்வதீ
நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸந்நிதிம் குரு”

என்கிற ஸ்லோகத்தைக் கூறி ஸ்நானம் செய்தால், ஏழு புண்ணிய நதிகளிலும் ஸ்நானம் செய்த பலன் கிட்டும்

Leave a Reply