திருப்புகழ் கதைகள்: நக்கீரனுக்கு அருளிய வேலாயுதன்!

ஆன்மிக கட்டுரைகள்

e0af8d-e0aea8e0ae95e0af8de0ae95.jpg" style="display: block; margin: 1em auto">

thiruppugazh stories
thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ்க் கதைகள் 126
முலை முகம் – திருச்செந்தூர்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

அருணகிரிநாதர் அருளியுள்ள தொண்ணூற்றிமூன்றாவது திருப்புகழ், ‘முலை முகம்’எனத் தொடங்கும் திருச்செந்தூர் தலத்துத் திருப்புகழாகும். “நக்கீரருக்கு அருளிய வேலாயுதரே! செந்திற்குமாரரே! விலைமாதருடைய உறவு அற அருள்புரிவீர்” என அருணகிரிநாதர் முருகப் பெருமானை இப்பாடலில் வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.

முலைமு கந்தி மிர்ந்த கலவை யுந்து லங்கு
முறுவ லுஞ்சி வந்த …… கனிவாயும்

முருக விழ்ந்து திர்ந்த மலர்க ளுஞ்ச ரிந்த
முகிலு மின்ப சிங்கி …… விழிவேலும்

சிலைமு கங்க லந்த திலத முங்கு ளிர்ந்த
திருமு கந்த தும்பு …… குறுவேர்வும்

தெரிய வந்து நின்ற மகளிர் பின்சு ழன்று
செயல ழிந்து ழன்று …… திரிவேனோ

மலைமு கஞ்சு மந்த புலவர் செஞ்சொல் கொண்டு
வழிதி றந்த செங்கை …… வடிவேலா

வளர்பு னம்ப யின்ற குறம டந்தை கொங்கை
மணிவ டம்பு தைந்த …… புயவேளே

அலைமு கந்த வழ்ந்து சினைமு திர்ந்த சங்க
மலறி வந்து கஞ்ச …… மலர்மீதே

அளிக லந்தி ரங்க இசையு டன்து யின்ற
அரிய செந்தில் வந்த …… பெருமாளே.

இத்திருப்புகழின் பொருளாவது – மலையின் கண் குகையில் அடைபட்ட நக்கீரருடைய செவ்விய சொல்லாகிய திருமுருகாற்றுப்படையை ஏற்றுக்கொண்டு, அம்மலையைப் பிளந்து வழிதிறந்து விட்ட கூரிய வேலைச் சிவந்த கரத்தில் கொண்டவரே. வளர்கின்ற தினைப் புனத்தில் காவல் புரிந்த குறவர் குல மகளாகிய வள்ளிப்பிராட்டியின் தனங்களின் மீதுள்ள இரத்தின மணிமாலைகள் அழுந்திய திருப்புயத்தை உடையவரே. கடலின் அலையின்மீது தவழ்ந்து ஒலித்துக் கொண்டு சூல்முதிர்ந்த சங்குகள் வந்து தாமரை மலர் மீது சேர்ந்து, அங்கே வண்டினங்கள் இனிது ஒலிக்க அந்த இசையைக் கேட்டுத் துயில்கின்ற அருமைத் தலமாகிய திருச்செந்தூரில் வந்து எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே! பொதுமகளிர் பின்னே சென்று சுழன்று, என் செயல் அழிந்து, அடியேன் திரியக் கடவேனோ? – என்பதாகும்.

nakkeerar
nakkeerar

இத்திருப்புகழில் இடம்பெறும்

மலைமு கஞ்சு மந்த புலவர் செஞ்சொல் கொண்டு
வழிதி றந்த செங்கை …… வடிவேலா

என்ற அடிகள் நக்கீரருடைய வரலாற்றைத் தெரிவிக்கின்றது. கீரம்-சொல், நக்கீரர்-நல்ல இனிய சொற்களை யுடையவர். இவர் கடைச் சங்கத்து நாற்பத்தொன்பது புலவர்களில் தலைமை பெற்றவர். அஞ்சா நெஞ்சும் ஆழ்ந்த அறிவும் உறுதியும் உடைய நல்லிசைப் புலவர்.

சிவ பூசையில் தவறு செய்பவர்களை ஒன்று கூட்டி ஆயிரம் என்ற எண்ணிக்கை ஆனவுடன் உண்ணுகின்ற ஒரு பெண்பூதம் இருந்தது. அதன் பேர் கற்கிமுகி. அப்பூதம் ஆங்காங்கு பூசையில் மனந்திரிந்து வழுவியவர்களையெல்லாம் கொண்டு போய் ஒரு பெரிய மலைக்குகையில் அடைத்துவைத்து அவர்கட்கு உணவு தந்து கொண்டிருந்தது. 999 பேர் சேர்ந்திருந்தனர். இன்னும் ஒருவர் குறைவு. அந்தப் பூதம் மற்றொருவரைத் தேடிக் கொண்டிருந்தது.

நக்கீரர் ஒரு சமயம் தலயாத்திரை மேற்கொண்டு சென்றார். ஒரு குளக்கரையில் சிவபூசை செய்துகொண்டிருந்தார். அப்பூதம் அங்கு வந்து சேர்ந்தது. ஓர் இலையை உதிர்த்தது. அந்த இலை பாதி நீரிலும் பாதி நிலத்திலுமாக வீழ்ந்தது. நீரில் வீழ்ந்த பாதி மீனாகவும், நிலத்தில் வீழுந்த பாதி பறவையாகவும் மாறியது. பறவை நிலத்துக்கும் மீன் நீருக்குமாக இழுத்துப் போர் புரிந்தன; இந்த அதிசயத்தைக் கண்ட நக்கீரர் பூசையில் மனம் பதியாது அதனையே நோக்கி நின்றார். பூசையில் வழுவிய அவரை எடுத்துக்கொண்டு போய் பூதம் குகையில் அடைத்துவிட்டது. இப்போது ஆயிரம் என்ற எண்ணிக்கை முற்றியது. இனி அவர்களை உண்ணுவதற்குப் பூதம் எண்ணியது. ஆனால் பூதம் குளித்துவிட்டுத்தான் உண்ணும். குளிக்கச் சென்றது பூதம்.

அங்கு முன்னமேயே அடைபட்டிருந்தோர் அனைவரும் “பாவி! நீ அல்லவா எங்கட்கு எமனாக வந்தனை; நீ வராமல் இருந்தால் பூதம் எம்மை இப்போது உண்ணமாட்டாதே; பால் பழம் முதலிய உணவுகளைத் தந்து எம்மைக் கொழுக்க வைத்தது பூதம். இனி அப்பூதம் வந்து எம்மை விழுங்குமே? என் செய்வோம்” என்று கூறி வருந்தி வாய்விட்டுப் புலம்பினார்கள்.

நக்கீரர் அவர்களுடைய அவல நிலையைக் கண்டு இரங்கினார். “நீவிர் அஞ்சற்க. முன் இலக்கத்து ஒன்பது பேர் அடைபட்ட கிரவுஞ்சம் என்ற பெருமலையை வேலால் பிளந்த எம்பெருமான் இருக்கிறான். அப் பரமனைப் பாடினால், அவன் வேல் நமக்குத் துணை புரியும்” என்று கூறி, முருகவேளை நினைத்து உருகினார். “மலையைப் பிளந்த கருணை மலையே! மன்னுயிர்களைக் காக்கும் மயிலேறிய மாணிக்கமே! இப்போது எம்மைக் காத்தருள்வாய்” என்று வேண்டினார்.

திருப்புகழ் கதைகள்: நக்கீரனுக்கு அருளிய வேலாயுதன்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply