பவுரி தாசன் எனும் பக்தன் ஜெகன்னாதனின் நாமத்தை தவிர அவரது வாய் வேறு சொற்களையே உச்சரிக்காது.
கார்மேனி வண்ணனான கண்ணனை பூரி ஜெகந்நாதரை கண்ணாரக் கண்டுகளிக்க வேண்டும் என விரும்பியவர் பவுரி தாசர்.
இவரது பெற்றோர் நெசவுத் தொழிலை செய்து வந்தனர். இந்த தொழில் மூலம் ஏதோ அவர்களுக்கு வயிற்றுக்குப் போதுமான அளவு வருமானம் கிடைத்தது.
இவர்கள் குடியிருந்த வீட்டிலிருந்து 3 மைல் தொலைவில் ஜெகந்நாதர் கோயிலுக்கு வந்து ஜெகந்நாதரை அந்த குடும்பத்தினர் வணங்கி செல்வார்கள்.
அதன் பிறகே அன்றாட பணிகள் தொடங்குவார்கள். ஜெகந்நாதர் கோயிலில் பெருமாளின் மகிமையை விளக்கி ஹரிகதை சொல்லப்படுவது உண்டு.
இந்தக் கதையைக் கேட்க பவுரி தாசர் தவறாமல் சென்று விடுவார். இந்த வகையில் ஹரி கதையில் சொல்லப்படும் நல்ல கருத்துக்கள் பவுரி தாசரின் மனதில் நின்றன.
குறிப்பாக , பெருமாளின் பெருமையை பாகவதர்கள் சொல்லும் பொழுது , அதில் அப்படியே மனம் இலயித்து விடுவார் பவுரி தாசர். பெருமாளின் மீதான பக்தியை இந்தக் கதைகள் மென்மேலும வளர்த்தது.
காலப்போக்கில் பக்தியின் வேகம் அதிகரித்தது. அவர் நிம்மதியாக சாப்பிடுவதில்லை. கண்கள் விழித்தபடியே இருக்கும்.
ஆனால் வாய் எந்நேரமும் , எப்பொழுதும் ஜெகந்நாதன் பற்றி மந்திர உச்சாடனம் செய்து கொண்டிருக்கும். அந்த பக்தனை மேலும் சோதிக்க விரும்பவில்லை பெருமாள்.
தனக்காகவே வாழ்நாளை வீணாக்கிக் கொண்டிருக்கும் பவுரி தாசரின் முன்பு தோன்றினார்.
பவுரி தாசா ! என்மீது கொண்டிருந்த அன்பின் காரணமாக அனைத்து பெண்களையும் , நீ உன் சொந்த தாயாராகவே கருதினாய். இந்த மனப் பக்குவம் உலகில் யாருக்கும் அவ்வளவு எளிதில் வருவதில்லை.
நீ என்ன கேட்டாலும் கொடுத்து வர வேண்டும் என்பது உன் தாயார் மகாலஷ்மி எனக்கு இட்ட கட்டளை. அதன்படி உனக்கு வேண்டும் வரம் தருகிறேன், கேள் என்றார்.
மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த பவுரிதாசர் என்ன கேட்டிருந்தாலும் இறைவன் கொடுத்திருப்பான்.
ஆனால் , அவர் பொன்னோ , பொருளோ கேட்க வில்லை*. பரந்தாமா ! நான் எப்போது அழைத்தாலும் நீ வர வேண்டும்.
உன் திருக் காட்சியை எனக்கு காட்ட வேண்டும்.
உனது நினைவாகவே இருக்கும் நான். உன்னைத் தவிர வேறு எதையும் கேட்க மாட்டேன். நீயே என் அருகில் இருக்கும்போது , வேறென்ன எனக்கு வேண்டும் ? மற்றவை தானாகவே என்னை வந்து சேருமே, என்றார்.
பவுரி தாசரின் பற்றற்ற நிலையை அறிந்து மகிழ்ந்த பெருமாள் , அவர் கேட்ட வரத்தையே அருளினார்.
அன்று முதல் பூரி ஜெகந்நாதர் கோயிலுக்கு செல்லும் பக்தர்களிடம் பவுரிதாசர் ஆண்டவனுக்குரிய காணிக்கைகளை கொடுத்து அனுப்பினார்.
ஒருமுறை இளநீர் ஒன்றை ஒரு பக்தர் மூலம் அனுப்பி வைத்தார்.
கர்ப்ப கிரகத்தில் இருந்து இரு கைகளையும் நீட்டி அந்த இளநீரை பெற்றுக் கொண்டார் பகவான்.
இதைக் கண்ட அங்கிருந்த அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். அந்தப் பக்தர் ஓடோடிச் சென்று பவுரி தாசரிடம் இந்த அதிசயத்தை விவரித்தார்.
இதனைக் கேட்டு பவுரி தாசர் ஆனந்தக் கூத்தாடினார். ஒரு முறை கூடை நிறைய மாங்கனிகளை கொடுத்து அனுப்பினார்.
கோயிலுக்குள் சென்றதும் , கூடை மாயமாகி விட்டது. சற்று நேரத்தில் கூடை கர்ப்பக் கிரகத்திற்கு வெளியே வந்து அமர்ந்தது. அனைவரும் ஆச்சரியத்துடன் அதைப் பார்த்தனர்.
கூடைக்குள் வெறும் கொட்டைகள் மட்டுமே எஞ்சி இருந்தன. பக்தன் பக்தியுடன் கொடுத்த உணவை பகவான் ஏற்றுக் கொண்டார்.
இதைக் கண்டு பரவசமடைந்த கோயில் அர்ச்சகர் , பவுரிதாசர் தங்கியிருக்கும் இடத்திற்கு ஓடினார்.
ஒரு முறை பகவானுக்கு அணிவித்த மாலையை அவரது கழுத்தில் அணிவிக்க முயன்றார். பவுரிதாசர் அதை ஏற்க மறுத்து விட்டார்.
பகவானுக்குரிய பொருட்களை நாம் எடுக்கக் கூடாது. பகவானுக்கு நம்மால் முடிந்த பொருளை கொடுக்க வேண்டும். இதுவே உண்மையான பக்தி என்றார்.
நீண்ட நெடுங்காலம் பகவானுக்கு உணவளிக்கும் கைங்கர்யத்தை அவர் செய்து வந்தார்.
பகவான் முன்பு சென்றாலே , அதைக் கொடு; இதைக் கொடு என கேட்கும் இக்காலத்தில் , பவுரி தாசரின் வாழ்க்கை வரலாறு ஆசையற்ற நிலையை நாமும் பெற வழி வகுக்கும்.
எது கொடுத்தாலும் கை நீட்டி வாங்கிக் கொண்ட கடவுள்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.