திருப்புகழ் கதைகள்: கப்பிய கரிமுகன்!

ஆன்மிக கட்டுரைகள்

e0af8d-e0ae95e0aeaae0af8de0aeaa.jpg" style="display: block; margin: 1em auto">

திருப்புகழ் கதைகள்
திருப்புகழ் கதைகள்

திருப்புகழில் காணப்படும் கதைகள் பகுதி 3 :
கப்பிய கரிமுகன்

  • முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

கப்பியகரிமுகன்என்றால் (கனி, அப்பம், அவல், பொரி ஆகியவற்றை) உண்ணுகின்ற யானை முகத்தை உடைய விநாயகன்.

விநாயகன் என்றால் தன்னிகரில்லாத் தலைவன் என்று பொருள். விநாயகருக்கு யானை முகம் எப்படி வந்தது? கரி (யானை) முகன் கதையை பார்க்கலாம்…

விநாயகப் பெருமானின் திருஅவதாரம் ஆவணி மாதம் சதுர்த்தி திதியன்று நிகழ்ந்தது. இவர் யானை முகத்தை தனக்கு வைத்திருக்கிறார். அநேகமாக, எல்லா தெய்வங்களுக்கும் மனித முகம் இருக்க, இவருக்கு மட்டும் ஏன் யானையின் முகம் வந்தது? இதற்கும் சிவபெருமான் நம் மீது கொண்ட கருணை தான் காரணம்.

கஜமுகாசுரன் என்ற அசுரன், பிரம்மாவிடம் ‘ஆண், பெண் சம்பந்தமில்லாமல் பிறந்த ஒருவனாலேயே தனக்கு அழிவு வர வேண்டும்’ என வரம் பெற்றான். கேட்ட வரம் கிடைத்தது. ஆண், பெண் சம்பந்தமின்றி, உலகில், குழந்தை பிறப்பு சாத்தியம் இல்லை என்பது அவன் போட்ட கணக்கு. அவன் நினைத்தபடியே அப்படி யாருமே உலகில் பிறக்கவில்லை. எனவே, அவன் சர்வ லோகங்களையும் வளைத்து, தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தான்.

vinayakar-pooja
vinayakar-pooja

தேவர்களை வதைத்தான். அவர்கள், துன்பம் தாளாமல் தவித்தனர். அவர்களது துன்பம் தீர்க்க லோகமாதாவான பார்வதி தேவி முடிவு செய்தாள். தன் மேனியில் பூசியிருந்த மஞ்சளை வழித்தெடுத்து உருண்டையாக்கி, உடல் உறுப்புகளையும், உயிரையும் கொடுத்தாள். அந்தக் குழந்தைக்கு, பிள்ளையார் என பெயர் சூட்டினாள். அந்தப் பிள்ளையை தனது அன்னையின் அந்தப்புர காவலனாக வைத்தாள்.

அச் சமயத்தில் சிவபெருமான் அங்கு வந்தார். அவர் மனதில் தேவர்கள் படும் துன்பத்தை நினைத்து கருணை உண்டாயிற்று. இதற்காக ஒரு திருவிளையாடல் செய்தார். ‘என் அந்தப்புரத்தில் இருக்கும் நீ யாரடா?’ எனக் கேட்டு, பிள்ளையாரின் கழுத்தை வெட்டிவிட்டார். அதே நேரத்தில், வடக்கு நோக்கி ஒரு யானை படுத்திருந்தது. வடக்கு நோக்கி யார் படுத்தாலும், உலக நலனுக்கு ஆகாது என்பது சாஸ்திரம்.

அந்த நேரத்தில் பார்வதி வந்தாள். தன் மணாளனைக் கண்டித்தாள். பிள்ளைக்கு மீண்டும் உயிர் வேண்டும் என்றாள். சிவபெருமானும், வடக்கு நோக்கி படுத்து, உலக நலனுக்கு எதிர் விளைவைத் தந்து கொண்டிருந்த யானையின் தலையை வெட்டி, பிள்ளையாருக்கு பொருத்தி, மீண்டும் உயிர் கொடுத்தார். தாய், தந்தை கலப்பின்றி பிறந்த அந்தக் குழந்தை, கஜமுகாசுரனை வென்று தேவர்களைப் பாதுகாத்தான்.

யானைத் தலையை விநாயகருக்கு தேர்ந்தெடுத்ததன் மூலம், பல அறிவுரைகள் மனிதனுக்குத் தரப் படுகின்றன. மனிதனின் வாயும், உதடும் தெளிவாக வெளியே தெரிகிறது. மற்ற மிருகங்களுக்கும் கூட அப்படித்தான். ஆனால், யானையின் வாயை தும்பிக்கை மூடிக் கொண்டிருக்கிறது; அது வெளியே தெரியாது.

ganapathy1
ganapathy1

தேவையின்றி பேசக்கூடாது என்பதும், தேவையற்ற பேச்சு பல பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதும் இதனால் விளக்கப் படுகிறது. விநாயகருக்கு, சுமுகர் என்ற பெயருண்டு. ‘சு’ என்றால் மேலான அல்லது ஆனந்தமான என்று பொருள்படும். அவர் ஆனந்தமான முகத்தை உடையவர்.

யானையைப் பார்த்தால் குழந்தைகள் ஆனந்தமாக இருப்பது போல, பக்தர்களுக்கும் ஆனந்தத்தை தரவேண்டும் என்பதற்காக இந்த முகத்தை சிவபெருமான் அவருக்கு அளித்தார். மேலும் தன்னுடைய எல்லாக் கணங்களுக்கும் அவரைத் தலைவராக்கினார். அதனால் அந்தப் பிள்ளை விநாயகன் ஆனான். இது தான் கப்பிய கரிமுகன் கதை.

திருப்புகழ் கதைகள்: கப்பிய கரிமுகன்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply