55. கோ மகிமை.
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
“மஹாஸ்த்வேவ கோர்மஹிமா”-சதபத ப்ராஹ்மணம்.
“கோ மகிமை மகத்தானது”
கோ மகிமை அபாரமானது. வெளிப்பார்வைக்கும் எல்லைக்கு உட்பட்ட நம் அறிவுக்கும் அது தென்படாது.
கலி புருஷனுக்கு மக்களின் அழிவு, துயரம், தீங்கு இவையே பிரியமானவை. அவற்றை ஏற்படுத்துவதே அவனுடைய பணி. அதனால் மக்கள் நலன் பெறும் செயல்களை நடக்க விட மாட்டான். உலக நன்மைக்கான கருத்துகள் மீது ஆர்வமும் சிந்தனையும் மக்களிடம் ஏற்படுத்த மாட்டான். அவற்றைப் பழிக்கும்படி செய்வான். நலம் தரும் செயல்களை அழிக்கும்படி புத்தியை மாற்றுவான்.
எனவேதான் கோ வதை நடந்தாலும் நாம் அலட்சியம் காட்டுகிறோம். கோ சேவை செய்ய வேண்டும் என்று யாருக்கும் தோன்றுவதில்லை. சாஸ்திரங்கள் கூறும் சத்தியங்களை மூட நம்பிக்கைகளாக எடுத்தெறிந்து பேசுகிறோம்.
பசுவின் உடலில் ஒவ்வொரு அணுவிலும் தேவதைகளின் சக்தி நிறைந்துள்ளது என்று தரிசன சக்தி கொண்ட மகரிஷிகள் கூறியுள்ளார்கள். நமக்கும் சூட்சும தரிசன சக்தி இருந்தால் நாமும் உணர முடியும். பிற விலங்குகளுக்கு இல்லாத குணம், பசுக்களுக்கு மட்டுமே இருக்கும் குணம் – பசுவின் கழிவுகளான சிறுநீர், சாணம் கூட மருத்துவ குணம் கொண்டிருப்பதே!
பசுவிலிருந்து வெளிப்படும் சக்தி அலைகள் மிகவும் மகிமை வாய்ந்தவை. அவற்றின் ‘ஆரா’ எனப்படும் ஒளிவட்டம் மிகத் தொலைவு வரை பாயக் கூடியது. அதனால்தான் கோசாலைகள் கோவில்களைப் போன்றே புனிதமானவை. பசுவின் அருகில் அமர்ந்து சுலோகங்கள், பாராயணம், ஜபம் செய்தால் அதிக பலன் கிட்டும்.
கோ சாலையை சுத்தம் செய்து, பசுவை பூஜை செய்து, கோ சாலையின் ஒரு புறத்தில் சிறு தீபம் ஏற்றி வைத்தால் அனைத்து தீய சக்திகளும் தொலையும். ஐஸ்வர்யமும் மங்களமும் உண்டாகும்.
பிசாசு சக்திகளுக்கு பசுக்கள் என்றால் பிடிக்காது. “பிசாசு சக்திகள் ஆவஹித்த ஆக்கிரமிப்பாளர்கள் நம் தேசத்தை பீடித்து பசுக்களை வதைப்பதற்கு முயற்சிப்பார்கள்” என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.
வீட்டில் செய்யும் ஜபத்தை விட கோசாலையில் செய்யும் ஜபத்திற்கு அதிக அளவு பலன் உண்டு. பசுஞ்சாணத்தால் வாசல் தெளித்தால் வீட்டில் தீய சக்திகளும் விஷ ஜந்துக்களும் நுழைய மாட்டா.
சகல தேவதைகளும் ஒன்றாகச் சேர்ந்த கோவுக்கு சேவை செய்தால் தேவர்கள் மகிழ்வர். கிரக தோஷங்கள் தொலைய வேண்டுமென்றால் பசுக்களுக்கு சேவை செய்வது உத்தமமான வழிமுறை.
நமக்கு ஒவ்வொரு கிரகத்துக்கும் நவதானியங்களில் ஒவ்வொரு தானியம் கூறப்பட்டுள்ளது. அந்தந்த நாட்களில் அந்தந்த தானியத்தை வெல்லம், காய்கறி, பழங்கள் முதலானவற்றோடு சேர்த்து பசுவுக்கு அளித்தால் கிரக தோஷங்கள் நீங்கும்.
உதாரணத்திற்கு ஏழரை சனி தோஷத்தால் வருந்துபவர் எள்ளும் வெல்லமும் கலந்து சனிக்கிழமையன்று பசுவிற்கு உணவளித்தால் எப்படிப்பட்ட சனி தோஷமானாலும் நீங்கிவிடும். அவ்வாறு செய்து பயங்கரமான சனி தோஷங்களை விலக்கி கொண்டவர் பலர் உள்ளனர். அதேபோல் சூரியனுக்கு கோதுமை, சந்திரனுக்கு நெல், செவ்வாய்க்கு துவரை, புதனுக்கு பயறு, வியாழனுக்கு கடலை, சுக்கிரனுக்கு காராமணி, சனிக்கு எள் விருப்பமானது. இவற்றை பசுவுக்கு அளித்தால் அந்த கிரகங்களுக்கு ப்ரீதிகரம்.
பித்ரு திதிகளிலும் சிராத்தத்தின் போதும் சரியாக விதிப்படி செய்யும் வாய்ப்பு இல்லாதவர்கள் கீரையும் பழமும் பசுவுக்கு சமர்ப்பித்து பித்ரு தேவதைகளை ஸ்மரித்தால் பித்ருக்கள் உத்தம லோகத்தை அடைவர். பித்ரு ருணம் தீர்த்துக்கொண்ட புண்ணியம் கிடைக்கும். சரியான விதத்தில் சிராத்தம் செய்பவர்களும் பசுவுக்கு புல் சமர்ப்பித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
பசுவுக்கு புல் செழிப்பாக ஏற்பாடு செய்பவருக்கு உயர்ந்த யக்ஞம் செய்த பலன் கிடைக்கும். யக்ஞத்தில் சகல தேவதைகளும் ஒன்றாகச் சேர்ந்த அக்னியை வழிபடுகிறோம். தேவதைகள் அனைவருக்கும் அளிக்கும் ஆகுதியை அக்னியில் சமர்ப்பிக்கிறோம். அதன் மூலம் அந்தந்த தேவதைகள் திருப்தி அடைவர்.
அத்தகைய யக்ஞம் போன்றதே பசு. நம் இஷ்ட தெய்வத்தை நினைத்து பசுவுக்குப் புல் கொடுத்தால் தெய்வ அருள் நிறைவாகக் கிடைக்கும்.பசு நெய்யால் தீபம் ஏற்றும் இல்லத்தில் மகாலட்சுமி நிறைந்து விளங்குவாள்.இவை அனைத்தும் வேத சாஸ்திரங்கள் கூறிய சத்திய வசனங்கள்.
நாம் பசுவை வளர்க்க முடியாவிட்டாலும் அவற்றை போஷிக்கும் கோ சாலைகளுக்கு சென்று சேவை செய்யலாம். அல்லது கோ போஷணை செய்யும் வாய்ப்பு உள்ளவருக்கு பசுவை வாங்கிக் கொடுக்கலாம்.
தினசரி ஒரு வேத வாக்கியம்: 55. கோ மகிமை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.