45. இந்தநாள் இனியநாள்!
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
“ஸூஷா ச மே சுதினம் சமே” – யஜுர்வேதம்
“நல்ல காலையும் நல்ல நாளும் எனக்கு கிடைக்கட்டும்!”
இது யஜுர்வேதம் சமக பாடத்திலுள்ள மந்திரம். நல்ல காலைப் பொழுதையும் நல்ல நாளையும் யக்ஞம் மூலம் பெற வேண்டும் என்ற விருப்பத்தை இது குறிக்கிறது.
‘குட் மார்னிங், குட் டே’ என்ற சிந்தனை பண்டைய வேத கலாசாரத்தில் தெளிவான வடிவில் வெளிப்படுகிறது.
‘உஷஸ்’ என்பது சூரியோதய சமயத்தில் உள்ள கால விசேஷம். “ருஜாஹரண காலம்” என்று இதற்குப் பொருள். அதாவது நோய்களை அழிக்கும் சக்தி கொண்ட காலம் என்று பொருள்.
அந்த வேளையில் துயிலெழுந்து தியானம் முதலியன தெய்வீக செயல்களோடு நாளைத் தொடங்குபவருக்கு உடலிலும் மனதிலும் ஆன்மிகத்திலும் பிரசாந்தமும் திருப்தியும் விளங்கும். இது பாரதிய சம்பிரதாயம்.
சூரியோதய காலத்திலும் சூரியன் மறையும் நேரத்திலும் உறங்குபவரின் முற்பிறவி புண்ணியங்கள் அழியும் என்று தர்ம சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன.
மங்களகரமான சிந்தனையோடும் செயலோடும் நாளைத் துவங்குவதே, ‘ஸூஷா’ (ஸு+உஷா). தூக்கத்திலோ சோம்பலிலோ வேறு ஏதாவது செயல்களிலோ அந்த நேரத்தை வீணடிப்பது பாவம் என்று கூட சாஸ்திரம் எச்சரிக்கிறது.
அறிவை வளர்த்துக் கூர்மை செய்யும் சிறப்பான சக்தி உஷத் காலத்திற்கு உண்டு. மேலும் நல்ல காலத்தைக் கூட யக்ஞத்தின் மூலம் பெற வேண்டும் என்றும், அந்த காலம் யக்ஞத்தின் மூலம் நல்ல பயன் தர வேண்டும் என்றும்யக்ஞத்திற்காக செலவழிக்கப்பட வேண்டும் என்றும்- இந்த மூன்று வித சிந்தனைகளைக் கொண்ட “யஞ்ஜேன கல்பதாம்” என்று மந்திரம் மேற்சொன்ன மந்திரத்தின் தொடர்ச்சி.
பகவானுக்கு அர்ப்பண புத்தியோடும் நன்றியோடும் சுயநலமில்லாமலும் செய்யும் செயல்களுக்கு யக்ஞம் என்று பெயர்.
இப்படிப்பட்ட யக்ஞம் செய்பவர்களுக்கே நல்ல காலையும் நல்ல நாளும் கிடைக்கும். அந்த நல்ல காலத்தை யக்ஞத்திற்கே செலவழிக்க வேண்டும். இத்தகு உயர்ந்த சிந்தனை இதில் உள்ளது.
‘ஸு’ என்ற சொல்லுக்கு பிரகாசம், மங்களம், உத்தமம் என்ற பொருள்கள் உள்ளன. இந்த மூன்று குணங்களைக் கொண்ட காலை நேரம் அப்படிப்பட்ட நாளுக்கே தொடக்கமாக அமைகிறது.
காலத்தை எத்தனை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்? எந்த நேரத்தில் எப்படிப்பட்ட திவ்ய சக்தியை நம் மனதில் தொடர்பு கொள்ள வேண்டும்? போன்றவற்றை நம் சம்பிரதாயம் தெரிவிக்கிறது. விடியற்காலையில் உள்ள பிரசாந்தமான அமைதி, புனிதம், தெய்வீகம் போன்றவற்றை நம்மில் நிறைத்துக் கொள்வதற்குத் தகுந்த சாதனைகள் நமக்கு பாரம்பரியமாக தெரிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை விட்டுவிட்டு சூரியோதயம் தாண்டிய பின்பும் உறங்குவது, கடவுள் சிந்தனை இல்லாமல் இருப்பது போன்றவை தரித்திரம் என்று நம் முன்னோர் எச்சரித்தனர். தற்போது இந்த சொற்களை நாம் கேட்க முடிவதில்லை. அதுமட்டுமல்ல. காலையில் பல் விளக்காமல் டீ காபி போன்ற பானங்கள் அருந்தும் துர்பாக்கியமான பழக்கங்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளோம்.
முன்பு நம் தேசத்தில் கோலமிட்ட வாயில்களும், கதவு திறந்த இல்லங்களும் பால சூரியனுக்கு வரவேற்பளித்தன. தியான முத்திரையிலிருக்கும் கண்களும் இறைவனை நோக்கிய சிந்தனையும் சூரியனுக்கு மகிழ்ச்சியளித்தன. இயற்கையில் ஒவ்வொரு பறவையும் ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு காற்றலையும் சுப்ரபாத ஒளிக் கதிருக்கு பதில் வினை யாற்றுகின்றன. ப்ரக்ருதி முழுவதும் அழகான சிறந்த சுருதியில் நாதம் இசைக்கையில், அறிவுள்ளவன் என்று நினைக்கும் மானுடன் மட்டும் அபஸ்ருதியில் கொட்டாவி விடுகிறான்.
விடியற்காலை சூரிய வெப்பத்தில் உள்ள தெய்வீக சைதன்யத்தை தனி மனித சைதன்யத்தோடு இணைக்கும் சனாதனமான நற்பழக்க வழக்கங்களை மீண்டும் நாம் கடைப்பிடிக்கும் போது ஆரோக்கியமான சிந்தனைகள் கொண்ட அழகிய சமுதாயத்தை உருவாக்க முடியும்.
தினசரி ஒரு வேத வாக்கியம்: 45. இந்தநாள் இனியநாள்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.