44. சுத்தமான குடிநீர்.
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
“சம் பிபாமோ அமும் வயம்” -யஜுர் வேதம்.
“சுத்தமானதை நாம் பருகுவோம்”.
அனைத்து விதத்திலும் முன்னேறி வளர்ந்து வரும் மேதாவிகள் நிறைந்த உலகத்தை நாம் பார்த்து வருகிறோம். மகிழ்ச்சியான விஷயமே!
ஆனால் உண்மையாகவே வளர்ந்து வருகிறோமா?சுத்தமான காற்றையோ, சுத்தமான நீரையோ, கலப்படமற்ற உணவையோ ஏற்க முடிகிறதா? எங்கு பார்த்தாலும் மாசு. இன்னும் சொல்லப்போனால் ஆன்மிகத்திலும் தர்மத்திலும் கூட மாசு.
சிறந்த நதிகளில் கூட நிம்மதியாக குளிக்க இயலவில்லை. கை நிறைய தண்ணீர் எடுத்து அருந்த முடியவில்லை.
ஹம்பி விஜயநகர யாத்திரை சென்றபோது வழியில் ஒரு சிறிய கிராமத்தில் ஒரு அன்பரின் இல்லத்தில் ஆதித்யம் ஏற்றோம். அது ஒரு தோட்டம். அதன் அருகில் சலசலவென்று பாய்ந்தது துங்கபத்திரா நதி. ராயர்களின் புகழுக்கும் அன்றைய வைபவத்துக்கும் சாட்சியாக ஓடும் நதி அது.
அந்த புண்ணிய நதியில் களைப்புத் தீர சற்று நேரம் ஸ்நானம் செய்து நீரை அருந்தலாம் என்று எண்ணினோம். ஆனால் அங்கிருந்த நண்பர், “இப்போதெல்லாம் இந்த நீரில் குளித்தால் உடல் அரிக்கிறது. நீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல. நோய் வருகிறது” என்று கூறித் தடுத்தார். “முனிசிபல் வாட்டர் பிடித்து காய்ச்சி வடிகட்டி பயன்படுத்துகிறோம்” என்றார்.
அத்தகைய மாசுக்குக் காரணம் சுற்றுப்புறத்தில் இருக்கும் தொழிற்சாலைகளில் இருந்து வந்து கலக்கும் கழிவுகள். அவை நீரை விஷமாக்கியுள்ளன.
இந்த நிலமை ஒவ்வொரு நதிக்கும் ஏற்பட்டுள்ளது. அதற்குத் துணையாக “‘இயற்கை ஒரு ஜடப்பொருள்’ என்ற பார்வையோடு உள்ளோம். ஞானத்தை காசு கொடுத்து வாங்கி விடலாம் என்ற அஞ்ஞானத்தை வளர்த்துக் கொண்டுள்ளோம். இயற்கையும் கடவுளே என்ற உண்மையைப் பார்க்க மறுக்கிறோம்.
அன்னையாக, தேவதையாக வழிபடப்படும் நதி தேவதைகளை பல வழிகளிலும் வேதனைக்கு உள்ளாக்குகிறோம். எங்கு சென்றாலும் தைரியமாக ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க முடியாத சூழலில் வாழ்கிறோம். முன்னோக்கிய பார்வை கொண்டவர்களாக நம்மை நினைத்துக் கொண்டுள்ளோம்.
ஆனால் நம் தாற்காலிக உல்லாசம், சுகம் தவிர வேறெதையும் பார்க்க இயலாமல் உள்ளோம். எத்தகைய சூழலுக்கு தள்ளப்பட்டு விட்டோம்…! தண்ணீர்கூட விலை கொடுத்து வாங்கிக் குடிக்க வேண்டிய நிலையில் உள்ளோம். அதில் கூட வியாபார மோசங்கள் பல. எத்தகைய அசுர மனநிலை பரவி வருகிறது பாருங்கள்…!
தசரதரின் பரிபாலனம் பற்றி விவரிக்கையில் வால்மீகி ராமாயணம், இனிப்பான, தூய்மையான நீர் வளம் இருந்ததாக தெரிவிக்கிறது.
நீரைப் பாதுகாக்கும் வழிமுறைகளையும் சுத்தமாக்கும் செயல்முறைகளையும் கூட வேதக் கலாச்சாரம் விவரிக்கிறது.
சிறந்த தூய்மையான நதி நீர் அருந்தக் கிடைக்க வேண்டும் என்ற சங்கல்பம் கொண்ட வேத நோக்கம் மேற்கூறிய ஸ்ருதி வாக்கியத்தில் தெளிவாகிறது.
மேலும் அதர்வண வேதம், “யத் பீபாமி சம்பிபாமி – யத் கிராமி சம் கிராமி – சம் கிராமோ அமும்வயம்” – சுத்தமான நீர் அருந்துவதும்சுத்தமானதையே ஏற்பதும் பிரதானமானது என்று கூறுகிறது.
சுத்தம், சுகாதாரம் இவற்றின் மீது வலுவான வழிமுறைகள் நம் கலாச்சாரத்தில் முக்கியமானவையாக இருந்தன என்பதைத் தெரிவிக்கும் ஆதாரங்கள் வேதங்களிலும் பின்னர் வந்த சாஸ்திரங்களிலும் விவரிக்கப்பட்டுள்ளன.
இந்த வேத சிந்தனை இன்றைய சமுதாயத்தில் ஏற்படும் போது மீண்டும் அன்றைய நிர்மலமான தேசத்தை அமைத்துக் கொள்ள முடியும். எண்ணம் தூய்மையாக இருந்தால் செயல் தூய்மையாக இருக்கும். அதன் மூலம் ப்ருத்வி தூய்மை அடையும். இயற்கை தூய்மை அடைந்தால் அதுவே முன்னேற்றம், வளர்ச்சி.
தினசரி ஒரு வேத வாக்கியம்: 44. சுத்தமான குடிநீர்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.