கருத்துள்ள காரடையான் நோன்பு!

செய்திகள்

” ஐயனே .தேவனைப் போல் தோற்றமளிக்கும் தாங்கள் யார் ?” மார்பிலே வாடாத மாலையோடும் , கையிலே தண்டம் , பாசக்கயிற்றையும் பிடித்தவாறு தன்னருகே நின்று கொண்டிருக்கும் அந்த கரிய ஆடவனைப் பார்த்து கலக்கத்துடன் கேட்டாள் சாவித்திரி .

பதிலுக்கு அந்த ஆடவன் , வெகு சாவதானமாய்…

” பெண்ணே ! நான் எமன் !நீ பதிவிரதையாக இருப்பதாலேயே நான் உன் கண்களுக்குத் தெரிவதோடு பேசவும் செய்கிறேன் ! உன் கணவன் சத்யவானின் ஆயுள் முடிந்து விட்டபடியால் , நான் என் கடமையை நிறைவேற்ற வந்துள்ளேன் !.பொதுவாக மனிதர்களைக் கொண்டு செல்ல எனது தூதர்கள் தான் வருவார்கள் !உன் கணவன் சத்யவான் , சிறந்த தர்மவான் குணக்கடல் அதனால் தான் நானே நேரில் வந்தேன் !”

…பேசியவாறே, சாவித்ரியின் மடியில் தலை சாய்த்துப் படுத்துக் கிடந்த சத்யவானின் உயிரை தன் பாசக் கயிற்றால் பற்றியிழுத்தான் எமன்.

மறு கணம் சத்யவானின் உயிர் பிரிந்து, உடல் அசைவற்றதாகி அங்கேயே கிடக்க உயிரற்ற அந்த உடலை எடுத்துக் கொண்டு தெற்கு திசையை நோக்கி செல்ல ஆரம்பித்தான் எமன்.

நியமத்தாலும் , விரதத்தாலும் பல சித்திகள் பெற்றிருந்த சாவித்திரி, கணவனின் உயிரைப் பின் தொடர்ந்து செல்ல துவங்கினாள். அதனைக் கண்ட எமன் , ” பெண்ணே ஏன் என்னைப் பின்தொடர்கிறாய் ? திரும்பிப் போ ! உன் கணவனுக்குச் செய்ய வேண்டிய ஈமச் சடங்குகளை முறைப்படி செய்!.” .என்றான்.

‘தர்ம பிரபுவே! பெரியோர்களின் தரிசனம் கிட்டியவர்களுக்கு , எத் துன்பமும் நேரிடாது என்கிற வேதவாக்கு என் விஷயத்தில் பொய்த்து போய்விடும் போலிருக்கிறதே .நெறி தவறாது தர்மத்தைக் காப்பவரான தங்களை தரிசித்தும் கூட , எனக்கு கைம்பெண்ணாகும் நிலைமை உண்டாகப் போகிறதே !ஐயனே .எனக்கேற்படப் போகும் துன்பம், வேத வாக்கைப் பொய்த்து விடச் செய்து விடும் ”

தர்மத்தின் ஆணிவேர் போன்ற இக் கருத்துக்களை அவள் சொன்னதும் பெரு மகிழ்வு கொண்ட எமன் அவளை நோக்கி ,

” பெண்ணே உன் இனிமையான சொற்களால் என் மனம் மகிழ்ச்சி கொள்கிறது .அதன் காரணமாக உனக்கு வரம் அளிக்கவும் விரும்புகிறேன் !எது வேண்டுமானாலும் கேள் உன் கணவனின் உயிரைத் தவிர !”

” தர்ம தேவதையே என் மாமனார் தன கண்களை இழந்ததால், நாட்டை இழந்து கானகத்தில் வசித்து வருகிறார்  எனவே அவர் மீண்டும் கண் பார்வை அடைவதோடு , சூரியனுக்கு ஒப்பான பலம் மிக்கவராகவும் திகழ வேண்டும் !”

” தந்தேன் !.திரும்பிச் சென்று விடு !”

” கருணைக் கடலே !கணவனுக்கு அருகில் இருப்பதையே என் மனது பெரிதும் விரும்புகிறது !அவருடன் செல்வதே எனக்கு ருசிக்கிறது !.நான் சொல்வதைத் தொடர்ந்து கேட்பீராக சாதுக்களுடைய நட்பு என்றைக்கும் வீணாகாது எனவே சாதுக்களுடைய கூட்டத்துடனேயே வசிக்க வேண்டும் !”

” அறிவிர்சிறந்தவளே !பண்டிதர்களின் அறிவை மேம்படுத்தக் கூடிய வகையில் நீ கூறிய இச் சொற்கள் , என் மனதிற்கு இனிமையைத் தருகிறது !உனக்கு மேலும் ஒரு வரம் தர விரும்புகிறேன் எதுவாயினும் கேள் உன் கணவனின் உயிரைத் தவிர !.”

”தர்மசீலரே .என் மாமனாரின் நாட்டை பகைவர்கள் கவர்ந்து கொண்டனர் !அந்நாட்டை அவர் மீண்டும் அடைய வேண்டும் !.”

” அவ்வண்ணமே தந்தருளினோம் !இனி நீ திரும்பிச் செல் ”

” பெருமானே உங்களைப் போன்ற சாதுக்கள் மட்டுமே பகைவர்களிடமும் கருணைப் புரிகிறார்கள் இவ் வுலகின் இயற்கையான நியதி இது !.”

” பெண்ணே தாகம் கொண்ட மனிதனுக்கு தண்ணீர் கிட்டியது போலிருக்கிறது உனது இந்த தேன் போன்ற இனிய சொற்கள் !மூன்றாவதாய் உனக்கு ஒரு வரத்தையளிக்க விரும்புகிறேன் கேள் உன் கணவனின் உயிரைத் தவிர .”

” வள்ளலே என் தந்தையார் அஸ்வபதி ஆண் வாரிசு இல்லாமல் துன்புறுகிறார் .எனவே அவருக்கு அழகும் , அறிவும் , ஆற்றலும் , ஆயுளும் மிக்க ஆண் பிள்ளைகள் பிறக்க வேண்டும் !.” ” தந்தோம் .நெடுந்தூரம் வந்து விட்டாய் இனி நீ திரும்பிச் செல் !”

” ஐயனே கணவன் அருகிலிருப்பதால் எனக்கு தூரம் தோன்றவில்லை .சிரமம் தெரியவில்லை சூரிய புத்திரரான தாங்கள் ஏற்றத்தாழ்வுக்கு இடமின்றி நடுநிலையான ஆட்சி நடத்துவதாலேயே ” தர்மராஜா ” என்றழைக்கப்படுகிரீர் !ஒரு மனிதனுக்கு சாதுக்களிடம் உண்டாவது போன்ற நம்பிக்கையை அவன் தன்னிடத்தே கூட கொள்வதில்லை !அனைவரும் தங்களைப் போன்ற சாதுக்களின் நட்பையே பெரிதும் விரும்புகின்றனர் !”

” குணமேம்பாடுடையவளே நீ கூறியது போன்ற உயர்ந்த வார்த்தைகளை இதற்கு முன்பு யாரிடமும் நான் கேட்டதில்லை!என் மகிழ்வின் பொருட்டு நான்காவது வரத்தையும் உனக்கு அளிக்க விரும்புகிறேன் கேள் உன் கணவனின் உயிரைத் தவிர !.”

” பெருமானே எனக்கும் , சத்தியவானுக்கும் குலத்தை மேம்படுத்தும் பொருட்டு பலமும் , சக்தியும் , ஆற்றலும் , ஆயுளும் மிக்க நூறு பிள்ளைகள் வேண்டும் ” ” நான்காவது வரத்தையும் தந்தோம் இனி நீ திரும்பிச் செல் ”

” சொன்ன சொல் தவறாதவரே .தங்களைப் போன்ற பெரியோர்கள் வரத்தைக் கொடுத்து விட்டு ,பின்பு ஏன் கொடுத்தோம் என்று வாட்டமடைய மாட்டார்கள் ! தர்மவானே சற்று முன்பு தாங்கள் எனக்கு ” புத்திரபாக்கியம் ” எனும் வரத்தை அருளியுள்ளீர்கள் . என்னைப் போன்ற பதிவிரதைகள் எப்போதும் கணவன் மூலம் புத்திரர்களை உண்டு பண்ணிக் கொள்வதே தர்மம் !.அத்தகைய பாக்கியம் தம்பதிகளின் சேர்க்கையினாலன்றோ உருவாகும் ? எனவே , தாங்கள் அளித்த இவ் வரத்தை உறுதிப் படுத்த வேண்டுமெனில் , என் கணவர் பிழைக்க வேண்டும்  உம்முடைய வாக்கு சத்தியவாக்காய்த் திகழ வேண்டும் ”

சாவித்ரியின் இவ்வார்த்தைகளைக் கேட்டதும் அசந்து போய்விட்டான் எமன் !. வெகு சாமர்த்தியமாய்த் தன்னை மடக்கிவிட்டதை உணர்ந்தான் !அவளது அறிவுகூர்மையையும் , பதிவிரதாதர்மத்தையும் எண்ணி மெச்சியவனாய் பாசக் கயிற்றை அவிழ்த்து விட்டவாறு ,

” பெண்ணே குலத்தை மகிழ்விப்பவளே இதோ உன் கணவன் மகிழ்ச்சியோடு இவனை அழைத்துச் செல் . இவன் நானூறு ஆண்டுகள் உன்னோடு வாழ்வான் !.” சத்தியவானின் உயிரை விட்டு விட்டுச் சென்றான் எமன் !

பதிவிரதையான சாவித்ரியால் அவள் கணவன் , மாமனார் , மாமியார் , தாய் மற்றும் தந்தை அனைவரும் கரை ஏற்றப்பட்டதுடன் அவர்கள் குலமும் தழைத்தது !

மேற்கண்ட இச் சரிதமானது , ” பதிவிரதா மகாத்மிய பருவத்தில் ” மார்கண்டேய மகரிஷி தர்மபுத்திரருக்கு கூறுவதாய் அமைந்துள்ளது.

” உருக்காத வெண்ணையும் ஓரடையும் நான் படைத்தேன் ஒரு காலும் என் கணவன் பிரியாதிருக்க வேண்டும் ” என்று உமையவளை பிரார்த்தனை செய்தபடி மஞ்சள் கயிற்றை கழுத்தில் அணிந்து மங்கையர் அனைவரும் வேண்டிய வரங்களைப் பெறுவோமாக!

 

Leave a Reply