எல்லையற்ற வீரத்தின் இருப்பிடமாகத் திகழும் சிவபெருமானும் , உலக நலம் பொருட்டு அனேக அசுரர்களை வென்றடக்கி அருள் புரிந்துள்ளார் . அவை , அவருடைய அளவற்ற ஆற்றலுக்கும் , வீரத்துக்கும் அடையாளமாக உள்ளன . அவை அனைத்தையும் நம்மால் நினைவில் நிறுத்த முடியாது என்பதால் ஆன்றோர்கள் அவற்றில் எட்டை வரிசைப் படுத்தி ” அஷ்ட வீரட்டம் ” என்று போற்றி நாம் வணங்க வகை செய்துள்ளனர் .
அவை :
பிரம்மனின் சிரம் கொய்தது , ( கண்டியூர் எனும் தலத்தில் )
எமனை காலால் உதைத்து அழித்தது .( திருக்கடவூர் எனும் திருத்தலத்தில் )
முப்புரம் எரித்தது ( திருவதிகை எனும் தலத்தில் )
யானையை உரித்து அதன் தோலை போர்வையாகப் போர்த்திக் கொண்டது ( வழுவூர் எனும் தலத்தில் )
தட்சனின் யாகத்தை அழித்தது ( திருப்பறியலூர் எனும் தலத்தில் )
அந்தகனை வதைத்தது ( திருக்கோவலூர் எனும் தலத்தில் )
காமனை அழித்தது ( கொருக்கை எனும் தலத்தில் )
ஜலந்தரனை அழித்தது ( திருவிற்குடி எனும் தலத்தில் )
இப்படி வரிசைப் படுத்தியுள்ளனர் .
இவற்றுள் , இரண்டில் மட்டும் பெருமான் தான் நேரடியாகச் செல்லாமல் தன அருட்பார்வையில் உண்டான உக்கிரகுமாரர்களாகிய வீரபத்திரர் , பைரவர் ஆகியோரை அனுப்பி , முறையே பிரம்மன் , தட்சன் ஆகியோர் தலைகளைக் கொய்து தண்டித்து அருள் புரிந்ததாக புராணம் கூறும் . அதிலும் வீரபத்திரரை அனுப்பி பெற்ற வெற்றி உன்னத வெற்றியாகவும் தனி வரலாறாகவும் போற்றப்படுகிறது . மேற்சொன்ன எட்டு வீரட்டங்களுள் , ஏழில் தேவர்களுக்கு உதவவே பெருமான் போர் புரிந்தார் . ஆனால் , தட்ச சங்காரத்தில் மட்டும் தேவர்களுக்கு எதிராகப் போரிட்டு அவர்களைக் கடுமையாக தண்டித்தார் . அவர்கள் ஒவ்வொருவரும் வீர குமாரனாகிய வீர பத்திரரால் தண்டிக்கப் பட்டது பெருமானின் தனித்தனி வீரதீர பராக்ரமங்களாகவே போற்றப் படுகின்றன
தட்சனையும் , அவனது யாகத்தையும் அழிக்க சிவபெருமானால் தனது நெற்றிக் கண்ணில் இருந்து தோற்றுவிக்கப் பட்ட வீரபத்திர மூர்த்தி தனிப் பெரும் தெய்வமாகவே போற்றப்படுகிறார் . பராசக்தியால் உண்டாக்கப் பட்ட பத்ரகாளி , அவருக்கு தேவியாகத் திகழ்கிறாள் . இவ்விருவரும் தட்ச யாகத்தை சம்ஹரித்த நிகழ்வு புராணங்கள் , வேதம் , மகாபாரதம் மகாஸ்காந்தம் பாகவதம் முதலானவற்றிலும் மற்றும் தமிழில் ,தட்சயாகபரணி , கந்தபுராணம் , காஞ்சிப்புராணம் , பறியலூர் புராணம் முதலியவற்றிலும் காணலாம் .
” வீரம் ” என்பதற்கு ” அழகு ” என்றும் , ” பத்திரம் ” என்பதற்கு ” காப்பவன் ” என்றும் பொருள் .
தென்னகத்துச் சைவர்கள் வீரபத்திரரை துணைத் தெய்வமாக தனிச் சன்னதியில் வைத்து வழிபடுகின்றனர் . பின் , வட நாட்டிலிருந்து வீர சைவர்கள் தென்னாட்டிற்குப் பரவிய பின்னரே வீரபத்திரருக்கு தனி ஆலயங்கள் அமைக்கும் வழக்கம் வந்ததென்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர் .
தமிழகத்தில் திருவண்ணாமலை , மயிலாப்பூர் , அனுமந்தபுரம் , தாராசுரம் , கும்பகோணம் , திருக்கடவூர் , மற்றும் பெரும்பேர்கண்டிகை முதலான தலங்களில் வீரபத்திரர் ஆலயங்கள் உள்ளன .
சென்னை – திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில் ஏறத்தாழ சென்னையிலிருந்து 3 5 கி.மீ தொலைவில் சிங்கபெருமாள் கோயில் எனும் ஊர் உள்ளது . இவ்வூரின் தென் கிழக்கே 7 கி. மீ தொலைவில் அமைந்துள்ள அனுமந்தபுரம் ஆலயம் வீரபத்திரருக்கான சிறப்பு ஆலயமாக கருதப்படுகிறது .
சாலை ஓரத்தில் வடக்கு நோக்கியவாறு பெரிய அளவில் ஆலயம் அமைந்துள்ளது . ஆலயத்தின் முன்புறம் பெரிய குளமும் , கிணறும் உள்ளன . ஆலய முகப்பினைக் கடந்ததும் , நீளமான தகர கொட்டகை உள்ளது . அதை ஒட்டி ஆலயத்தைச் சுற்றி அகன்ற பிராகாரம் உள்ளது . பிராகாரத்தில் அமைந்துள்ள துர்க்கை சன்னதி , மற்றும் பத்ரசண்டீசர் சன்னதியையும் வணங்கி , பிராகாரத்தை வலம் வந்து மகாமண்டபத்தை அடைகிறோம் . அங்குள்ள நந்திதேவரை வணங்கி , பின் உல் வாயிலிலுள்ள முருகன் , விநாயகரை வணங்கி .கிழக்கு நோக்கிய சன்னதியில் எழுந்தருளியிருக்கும் பத்ரகாளியையும் வணங்கி பின் அர்த்தமண்டபம் கடந்து கருவறையில் வீற்றிருக்கும் வீரபத்திரரை தரிசிக்கிறோம் .
கிட்டத் தட்ட எட்டு அடி உயரம் கொண்ட கம்பீரமான உருவத்துடன் , மேற்கரங்களில் வில்லும் , அம்பும் , கீழ்க் கரங்களில் கத்தி , கேடயத்தையும் தாங்கியவராக எழுந்தருளியுள்ளார் ! இவரைச் .சுற்றி அமைந்துள்ள கல்திருவாசியில் வலது கால் புறத்தில் தட்சன்
நின்றிருக்க .வீரபத்திரரின் தலையில் சிவலிங்கம் அமைந்துள்ளது ! வீரபத்திரர் எழுந்தருளிய சுவாரசியமான வரலாற்றை சற்று பார்ப்போமா
தட்ச சம்ஹாரத்திற்குப் பின் , வீரபத்திரரும் , பத்ரகாளியும் தமது கணங்களுடன் பெருமானை வணங்கபெருமான் அவர்களை தென்னகம் சென்று குடியேறும்படி அனுக்ரஹிக்க அதன் படி அவர்கள் விண் வழியே சென்று கொண்டிருந்த போது
வெற்றிலைத் தோட்டத்தின் நடுவே அமைந்துள்ள இந்த இடம் அவர்களுக்குப் பிடித்துப் போகவே .இங்கு தங்கினர் .
தட்ச யாகத்தில் உயிரிழந்து பேய்களான மனிதர்களும் , தேவர்களும் அவர்களைப் பின் தொடர்ந்து வந்தனர் . வீரபத்திரர் இங்கு சிவ பூஜை செய்து அவர்களுக்கு விபூதி அளிக்க அவர்களின் பேய் வடிவம் ஒழிந்தது !.மனம் மகிழ்ந்த அவர்கள் அவரை வணங்கி ,
” சிவ குமாரனே எங்கள் மனக்கலக்கம் அழிந்ததுடன் பேய் வடிவமும் தொலைந்தது போல் உம்மை வழிபடும் அன்பர்களுக்கும் நடை பெற வேண்டும் ” என்று வேண்டினர் . அதன் படி இன்றளவும் மன நலம் குன்றியோர் , மற்றும் பில்லி, சூன்யம் , ஏவல் இவற்றால் துன்புறுவோர் இங்கு வந்து இவரை வழிபட்டு குறை நீங்கப் பெறுகிறார்கள் !
” அரன் ” மைந்தனாகிய வீரபத்திரர் வீற்றிருப்பதால் இத்தலம் அரன்மைந்தபுரம் என்றழைக்கப்பட்டு , பின் மருவி .அனுமந்தபுரம் ஆனதென்பர் .
இவ்வாலயத்தில் எழுந்தருளியிருக்கும் வீரபத்திரருக்கு ஒரு விசேஷ அம்சம் உண்டு !
அதாவது , இம் மூர்த்தி தன்னை உள்ளன்புடன் வழிபடுவோர்க்கு
காலை வேளையில் குழந்தைப் பொலிவுடனும் ,
உச்சி வேளையில் வாலிபத்தோற்றத்துடனும் ,
மாலை வேளையில் வயோதிகததோற்றத்துடனும் காட்சியளிக்கிறார் !!
அதிலும் வெள்ளிக் கவசத்துடன் காணும் போது மனம் பரவசமாகிறது !,,,நெஞ்சு குளிர்கிறது !
இக்கோயிலில் நான்குகால பூஜை சிவாச்சாரியாரால் நடத்தப் படுகிறது .
மகா சிவராத்திரியில் பெரிய இடப வாகனத்தில் வீரபத்திரர் வீதியுலா வரும் காட்சி கண்கொள்ளா காட்சியாகும் . இவருக்கு வெற்றிலைப் படல் சாற்றுவது மிக விசேஷமான பிரார்த்தனையாகக் கருதப் படுகிறது . ( வெற்றியைக் குறிக்கும் இலையே வெற்றிலையாகும் )
வெற்றிலைபடல் என்பது , சுவாமியைச் சுற்றி அதற்கென உள்ள பிரபையில் வெற்றிலைகளை பொருத்தி அமைக்கின்றனர் . அரை வெற்றிலைப் படலுக்கு
6400 வெற்றிலைகளும் , முழுப்படலுக்கு 12800 வெற்றிலைகளும் பயன் படுத்தப் படுகின்றன . மேலும் வெண்ணைக்காப்பும் இங்கு சிறந்த பிரார்த்தனையாகும் . ஒவ்வொரு அமாவாசையன்றும் திரள் திரளாக மக்கள் வந்து வழிபாடு செய்கிறார்கள் !குறிப்பாக மன நலம் குன்றியோர் , பில்லி சூன்யம் இவைகளால் பாதிக்கப் பட்டோர்களுக்கு சிறப்பு வழிபாடு செய்து நீக்கப் படுகின்றன .
– கட்டுரை: திருமதி தங்கம் கிருஷ்ணமூர்த்தி, லண்டன்