e0af81e0aeaee0af8d-e0ae85e0ae9ee0af8de0ae9ae0aeb2e0aebf.jpg" style="display: block; margin: 1em auto">
அருள்மிகு அஞ்சலிவரத ஆஞ்சநேயர் திருக்கோவில், மேட்டுப்பட்டி, சின்னாளப்பட்டி அருகில், திண்டுக்கல்
துன்பங்களை தீர்க்கும் அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோவில்.
திருமண வாய்ப்பு, வேலை வாய்ப்பு, குழந்தைப்பேறு, தேர்வில் வெற்றி, வழக்குகளில் வெற்றி போன்ற பல்வேறு நற்பயன்களை அருளுகிறார் திண்டுக்கல் அஞ்சலிவரத ஆஞ்சநேயர்.
சனி ராகு போன்ற கிரகங்களால் வரும் துன்பங்களைத் தீர்த்து பணி உயர்வு திருமண வாய்ப்பு குழந்தைப்பேறு வழக்குகளில் வெற்றி போன்ற பல்வேறு நற் பயன்களை அருளுகிறார் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகிலுள்ள மேட்டுப்பட்டியில் கோவில் கொண்டிருக்கும் அஞ்சலிவரத ஆஞ்சநேயர்.
தல வரலாறு :
பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய அனுமன் இந்த இடத்தில் தான் தியான கோலத்தில் இருப்பதாகவும் இங்கு தனக்குக் கோவில் ஒன்று அமைக்கும்படியும் கூறினார்.
இதைத் தொடர்ந்து அந்த பக்தரின் முயற்சியினால் அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டிருக்கிறது. கோவிலில் மூலவரான ஆஞ்சநேயர் ‘வணங்கிய நிலை’யில் 16 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறார்.
கால்களில் காலணி அணிந்து இடுப்பில் கத்தி சொருகியபடி கதாயுதத்துடன் போர்க்கோலத்தில் இருப்பது போன்று அவரது உருவம் வடிக்கப்பட்டிருக்கிறது.
நைமிசாரண்யத்தில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய சாளக்கிராமத்தினால் செய்யப்பட்டது இந்தச் சிலை. அனுமனின் வலது கண் சூரியன்; இடது கண் சந்திரன். இவரது கேசம் ஒளிவட்டம் போன்றும் வடிக்கப்பட்டுள்ளது.
ஜடாமுடியுடன் காட்சியளிக்கும் இவரை வணங்கினால் கல்வி செல்வம் ஆகியவற்றுடன் நீண்ட ஆயுள் கிடைக்கும். அனுமனின் வால் காலை நோக்கிக் கீழாக அமைந்திருக்கிறது. மேலும் இத்தல அனுமனை வழிபட்டால் சனி ராகு போன்ற கிரகங்களின் தோஷங்கள் நீங்கி நற்பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்தக் கோவிலின் விமானத்தில் சுந்தர காண்டத்தின் 64 காட்சிகள் சிற்பங்களாக அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆஞ்சநேயர் போர்க்கோலத்தில் இருப்பதால் கோவிலின் மகாமண்டபத்தில் அவரது துணைவர்களான நளன் நீலன் அங்கதன் குமுதன் சுக்ரீவன் ஜாம்பவான் ஜிதன் ஜூவிதன் என எட்டு பேர்களின் உருவச்சிலைகளும் இடம் பெற்றிருக்கின்றன.
கோவில் வளாகத்தில் ராமர் சீதை லட்சுமணர் சிலைகளும் கோவிலின் சுற்றுப்பகுதியில் லட்சுமி சரஸ்வதி சிலைகளும் இருக்கின்றன.
ராமாயண காலத்தில் அனுமன் சஞ்சீவி மலையை எடுத்துச் செல்லும் போது இங்கு அவருடைய கால் பதிந்ததாகவும் சஞ்சீவி மலையிலிருந்து விழுந்த சிறுபகுதியே கோவிலின் எதிரில் உள்ள சிறு மலை என்றும் கூறுகின்றனர்.
சிறப்பு வழிபாடுகள் :
ஆஞ்சநேயர் பிறந்த நட்சத்திரமான மூலம் நட்சத்திர நாட்களிலும் சனிக்கிழமைகளிலும் இங்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
தை மாதம் முதல் நாளில் 5008 கரும்புகளைக் கொண்டு சிறப்பு அலங்காரம் சித்திரை மாதம் முதல் நாளில் பத்தாயிரம் கனிகளைக் கொண்டு அலங்காரம்
ஆடி அமாவாசை அன்று தங்கக்காப்பு அலங்காரம் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் முதலாவது சனிக்கிழமை ராஜ அலங்காரம் இரண்டாவது சனிக்கிழமையில் செந்தூர அலங்காரம் மூன்றாவது சனிக்கிழமை பச்சை அலங்காரம் நான்காவது சனிக் கிழமை சஞ்சீவி மலையைத் தூக்கி வரும் அலங்காரம் ஐந்தாவது சனிக்கிழமை பத்மாசனத்தில் தியான அலங்காரம் என்று பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.
இவ்வாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் ஆண்டு வழிபாடு நடக்கிறது. இதைத் தொடர்ந்து வரும் மூலம் நட்சத்திர நாளில் 508 லிட்டர் பாலாபிஷேகம் 108 கலசாபிஷேகம் 7 வருணாபிஷேகம் நடைபெறுகின்றன. அடுத்த நாள் மகாபாரத காலத்தில் பீமனுடன் வாதம் புரிந்த வயோதிக ஆஞ்சநேயர் அலங்காரம் அதையடுத்து கருடர் வராகர் நரசிம்மர் ஹயக்கிரீவர் மற்றும் ஆஞ்சநேயரின் வடிவம் கொண்ட பஞ்சமுக ஆஞ்சநேயர் என்று சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெறுகிறது.
அமைவிடம் :
திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் சாலையில் 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சின்னாளபட்டி. இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேட்டுப்பட்டியில்தான் அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோவில் இருக்கிறது.
கோவில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அனைத்தும் அருளும் அஞ்சலி வரத அனுமான்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.