6ஆம் பத்து

திருமங்கையாழ்வார்

style="text-align: center;">6ஆம் பத்து 8ஆம் திருமொழி

1518

மான்கொண்ட தோல்மார்வில் மாணியாய், மாவலிமண்

தான்கொண்டு தாளால் அளந்த பெருமானை

தேன்கொண்ட சாரல் திருவேங் கடத்தானை

நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே (6.8.1)

1519

முந்நீரை முன்னாள் கடைந்தானை மூழ்த்தநாள்

அந்நீரை மீனா யமைத்த பெருமானை

தென்னாலி மேய திருமாலை யெம்மானை

நன்னீர் வயல்சூழ் நறையூரில் கண்டேனே (6.8.2)

1520

தூவாய புள்ளூர்ந்து, வந்து துறைவேழம்

மூவாமை நல்கி முதலை துணித்தானை

தேவாதி தேவனைச் செங்கமலக் கண்ணானை

நாவாயு ளானை நறையூரில் கண்டேனே (6.8.3)

1521

ஓடாவரியாய் இரணியனை யூனிடந்த

சேடார் பொழில்சூழ் திருநீர் மலையானை

வாடா மலர்த்துழாய் மாலை முடியானை

நாடோறும் நாடி நறையூரில் கண்டேனே (6.8.4)

1522

கல்லார் மதில்சூழ் கடியிலங்கைக் காரரக்கன்

வல்லாகங் கீள வரிவெஞ் சரம்துரந்த

வில்லானை, செல்வவிபீடணற்கு வேறாக

நல்லனை நாடி நறையூரில் கண்டேனே (6.8.5)

1523

உம்பருலகோடு உயிரெல்லாம் உந்தியில்

வம்பு மலர்மேல் படைத்தானை மாயோனை

அம்பன்ன கண்ணாள் அசோதைதன் சிங்கத்தை

நம்பனை நாடி நறையூரில் கண்டேனே (6.8.6)

1524

கட்டேறு நீள்சோலைக் காண்டவத்தைத் தீமூட்டி

விட்டானை மெய்யம் அமர்ந்த பெருமானை

மட்டேறு கற்பகத்தை மாதர்க்காய் வண்துவரை

நட்டானை நாடி நறையூரில் கண்டேனே (6.8.7)

1525

மண்ணின்மீ பாரங் கெடுப்பான் மறமன்னர்

பண்ணின்மேல் வந்த படையெல்லாம் பாரதத்து

விண்ணின்மீ தேற விசயன்தே ரூர்ந்தானை

நண்ணிநான் நாடி நறையூரில் கண்டேனே (6.8.8)

1526

பொங்கேறு நீள்சோதிப் பொன்னாழி தன்னோடும்

சங்கேறு கோலத் தடக்கைப் பெருமானை

கொங்கேறு சோலைக் குடந்தைக் கிடந்தானை

நங்கோனை நாடி நறையூரில் கண்டேனே (6.8.9)

1527

மன்னு மதுரை வசுதேவர் வாழ்முதலை

நன்னறையூர் நின்ற நம்பியை வம்பவிழ்தார்

கன்னவிலும் தோளான் கலிய னொலிவல்லார்

பொன்னுலகில் வானவர்க்குப் புத்தேளி ராகுவரே (6.8.10)

Leave a Reply