style="text-align: center;">6ஆம் பத்து 5ஆம் திருமொழி
1488
கலங்க முந்நீர் கடைந்தமு தங்கொண்டு, இமையோர்
துலங்கல் தீர நல்கு சோதிச் சுடராய,
வலங்கை யாழி யிடங்கைச் சங்க முடையானூர்,
நலங்கொள் வாய்மை யந்தணர் வாழும் நறையூரே (6.5.1)
1489
முனையார் சீய மாகி அவுணன் முரண்மார்வம்,
புனைவா ளுகிரால் போழ்பட வீர்ந்த புனிதனூர்
சினையார் தேமாம்f செந்தளிர் கோதிக் குயில்கூவும்,
நனையார் சோலை சூழ்ந்தழ காய நறையூரே (6.5.2)
1490
ஆனைப் புரவி தேரொடு காலா ளணிகொண்ட,
சேனைத் தொகையைச் சாடி யிலங்கை செற்றானூர்,
மீனைத் தழுவி வீழ்ந்தெழும் மள்ளர்க் கலமந்து,
நானப் புதலில் ஆமை யொளிக்கும் நறையூரே (6.5.3)
1491
உறியார் வெண்ணெ யுண்டு உர லோடும் கட்டுண்டு,
வெறியார் கூந்தல் பின்னை பொருட்டுஆன் வென்றானூர்,
பொறியார் மஞ்ஞை பூம்பொழில் தோறும் நடமாட,
நறுநாண் மலர்மேல் வண்டிசை பாடும் நறையூரே (6.5.4)
1492
விடையேழ் வென்று மென்தோ ளாய்ச்சிக் கன்பனாய்,
நடையால் நின்ற மருதம் சாய்த்த நாதனூர்,
பெடையோ டன்னம் பெய்வளை யார்தம் பின்சென்று
நடையோ டியலி நாணி யொளிக்கும் நறையூரே (6.5.5)
1493
பகுவாய் வன்பேய் கொங்கை சுவைத்தா ருயிருண்டு,
புகுவாய் நின்ற போதகம் வீழப் பொருதானூர்,
நெகுவாய் நெய்தல் பூமது மாந்திக் கமலத்தின்
நகுவாய் மலர்மே லன்ன முறங்கும் நறையூரே (6.5.6)
1494
முந்து நூலும் முப்புரி நூலும் முன்னீந்த,
அந்த ணாளன் பிள்ளையை அந்நான்றளித்தானூர்,
பொந்தில் வாழும் பிள்ளைக் காகிப் புள்ளோடி,
நந்து வாரும் பைம்புனல் வாவி நறையூரே (6.5.7)
1495
வெள்ளைப் புரவைத் தேர்விச யற்காய் விறல்வியூகம்
விள்ள, சிந்துக் கோன்விழ வூர்ந்த விமலனூர்,
கொள்ளைக் கொழுமீ னுண்குரு கோடிப் பெடையோடும்,
நள்ளக் கமலத் தேற லுகுக்கும் நறையூரே (6.5.8)
1496
பாரை யூரும் பாரந் தீரப் பார்த்தன்தன்
தேரை யூரும் தேவ தேவன் சேருமூர்,
தாரை யூரும் தண்தளிர் வேலிபுடைசூழ,
நாரை யூரும் நல்வயல் சூழ்ந்த நறையூரே (6.5.9)
1497
தாமத் துளப நீண்முடி மாயன் தான்நின்ற
நாமத் திரள்மா மாளிகை சூழ்ந்த நறையூர்மேல்,
காமக் கதிர்வேல் வல்லான் கலிய னொலிமாலை, சேமத் துணையாம் செப்பு
மவர்க்குத் திருமாலே (6.5.10)