பெரியாழ்வார் திருமொழி முதல் பத்து

பெரியாழ்வார்

 

ஆறாம் திருமொழி – மாணிக்கக்கிண்கிணி

(கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்)

வெண்டளையால் வந்த கலித்தாழிசை

 

75:

மாணிக்கக்கிண்கிணியார்ப்ப மருங்கின்மேல்

ஆணிப்பொன்னால்செய்த ஆய்பொன்னுடைமணி

பேணிப்பவளவாய் முத்திலங்க பண்டு

காணிகொண்டகைகளால்சப்பாணி

கருங்குழல்குட்டனே. சப்பாணி. (2) 1.

 

76:

பொன்னரைநாணொடு மாணிக்கக்கிண்கிணி

தன்னரையாடத் தனிச்சுட்டிதாழ்ந்தாட

என்னரைமேல்நின்றிழிந்து உங்களாயர்தம்

மன்னரைமேல்கொட்டாய்சப்பாணி

மாயவனே. கொட்டாய்சப்பாணி. 2.

 

77:

பன்மணிமுத்து இன்பவளம்பதித்தன்ன

என்மணிவண்ணன். இலங்குபொற்றேட்டின்மேல்

நின்மணிவாய்முத்திலங்க நின்னம்மைதன்

அம்மணிமேல்கொட்டாய்சப்பாணி

ஆழியங்கையனே. சப்பாணி. 3 .

 

78:

தூநிலாமுற்றத்தே போந்துவிளையாட

வானிலாஅம்புலீ. சந்திரா. வாவென்று

நீநிலாநின்புகழாநின்ற ஆயர்தம்

கோநிலாவக்கொட்டாய்சப்பாணி

குடந்தைக்கிடந்தானே. சப்பாணி. 4.

 

79:

புட்டியில்சேறும் புழுதியும்கொண்டுவந்து

அட்டியமுக்கி அகம்புக்கறியாமே

சட்டித்தயிரும் தடாவினில்வெண்ணெயும்உண்

பட்டிக்கன்றே. கொட்டாய்சப்பாணி

பற்பநாபா. கொட்டாய்சப்பாணி. 5.

 

80:

தாரித்துநூற்றுவர் தந்தைசொல்கொள்ளாது

போருத்துவந்து புகுந்தவர்மண்ணாள

பாரித்தமன்னர்படப் பஞ்சவர்க்கு அன்று

தேருய்த்தகைகளால்சப்பாணி

தேவகிசிங்கமே. சப்பானி. 6.

 

81:

பரந்திட்டுநின்ற படுகடல் தன்னை

இரந்திட்டகைம்மேல் எறிதிரைமோத

கரந்திட்டுநின்ற கடலைக்கலங்க

சரந்தொட்டகைகளால்சப்பாணி

சார்ங்கவிற்கையனே. சப்பாணி. 7.

 

82:

குரக்கினத்தாலே குரைகடல்தன்னை

நெருக்கிஅணைகட்டி நீள்நீரிலங்கை

அரக்கர்அவிய அடுகணையாலே

நெருக்கியகைகளால்சப்பாணி

நேமியங்கையனே. சப்பாணி. 8.

 

83:

அளந்திட்டதூணை அவந்தட்ட ஆங்கே

வளர்ந்திட்டு வாளுகிர்ச்சிங்கவுருவாய்

உளந்தொட்டிரணியன் ஒண்மார்வகலம்

பிளந்திட்டகைகளால்சப்பாணி

பேய்முலையுண்டானே. சப்பாணி. 9.

 

84:

அடைந்திட்டுஅமரர்கள் ஆழ்கடல்தன்னை

மிடைந்திட்டு மந்தரம்மத்தாகநாட்டி

வடம்சுற்றிவாசுகி வன்கயிறாக

கடைந்திட்டகைகளால்சப்பாணி

கார்முகில்வண்ணனே. சப்பாணி. 10.

 

தரவு கொச்சகக்கலிப்பா

 

85:

ஆட்கொள்ளத்தோன்றிய ஆயர்தங்கோவினை

நாட்கமழ்பூம்பொழில் வில்லிபுத்தூர்ப்பட்டன்

வேட்கையால்சொன்ன சப்பாணிஈரைந்தும்

வேட்கையினால்சொல்லுவார் வினைபோமே. (2) 11

 

 

Leave a Reply