நான்காம் திருமொழி – தன் முகத்து
(சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்)
கலிநிலைத்துறை
54:
தன்முகத்துச்சுட்டி தூங்கத்தூங்கத்தவழ்ந்துபோய்
பொன்முகக்கிண்கிணியார்ப்பப் புழுதியளைகின்றான்
என்மகன்கோவிந்தன்கூத்தினை இளமாமதீ.
நின்முகம்கண்ணுளவாகில் நீஇங்கேநோக்கிப்போ. (2) 1.
55:
என்சிறுக்குட்டன் எனக்கோரின்னமுதுஎம்பிரான்
தன்சிறுக்கைகளால் காட்டிக்காட்டியழைக்கின்றான்
அஞ்சனவண்ணனோடு ஆடலாடஉறுதியேல்
மஞ்சில்மறையாதே மாமதீ. மகிழ்ந்தோடிவா. 2.
56:
சுற்றும்ஒளிவட்டம் சூழ்ந்துசோதிபரந்தெங்கும்
எத்தனைசெய்யினும் என்மகன்முகம்நேரொவ்வாய்
வித்தகன்வேங்கடவாணன் உன்னைவிளிக்கின்ற
கைத்தலம்நோவாமே அம்புலீ. கடிதோடிவா. 3 .
57:
சக்கரக்கையன் தடங்கண்ணால்மலரவிழித்து
ஒக்கலைமேலிருந்து உன்னையேசுட்டிக்காட்டும்காண்
தக்கதறிதியேல் சந்திரா. சலம்செய்யாதே
மக்கட்பெறாத மலடனல்லையேல்வாகண்டாய். 4.
58:
அழகியவாயில் அமுதவூறல்தெளிவுறா
மழலைமுற்றாதஇளஞ்சொல்லால் உன்னைக்கூவுகின்றான்
குழகன்சிரீதரன் கூவக்கூவநீபோதியேல்
புழையிலவாகாதே நின்செவிபுகர்மாமதீ. 5.
59:
தண்டொடுசக்கரம் சார்ங்கமேந்தும்தடக்கையன்
கண்துயில்கொள்ளக்கருதிக் கொட்டாவிகொள்கின்றான்
உண்டமுலைப்பாலறாகண்டாய் உறங்காவிடில்
விண்தனில்மன்னிய மாமதீ. விரைந்தோடிவா. 6.
60:
பாலகனென்று பரிபவம்செய்யேல் பண்டொருநாள்
ஆலினிலைவளர்ந்த சிறுக்கனவன்இவன்
மேலெழப்பாய்ந்து பிடித்துக்கொள்ளும்வெகுளுமேல்
மாலைமதியாதே மாமதீ. மகிழ்ந்தோடிவா. 7.
61:
சிறியனென்றுஎன்னிளஞ்சிங்கத்தை இகழேல்கண்டாய்
சிறுமையின்வார்த்தையை மாவலியிடைச்சென்றுகேள்
சிறுமைப்பிழைகொள்ளில் நீயும்உன்தேவைக்குரியைகாண்
நிறைமதீ. நெடுமால் விரைந்துஉன்னைக்கூவுகின்றான். 8.
62:
தாழியில்வெண்ணெய் தடங்கையாரவிழுங்கிய
பேழைவயிற்றெம்பிரான்கண்டாய் உன்னைக்கூவுகின்றான்
ஆழிகொண்டுஉன்னையெறியும் ஐயுறவில்லைகாண்
வாழவுறுதியேல் மாமதீ. மகிழ்ந்தோடிவா. 9.
63:
மைத்தடங்கண்ணி யசோதைதன்மகனுக்கு இவை
ஒத்தனசொல்லி உரைத்தமாற்றம் ஒளிபுத்தூர்
வித்தகன்விட்டுசித்தன் விரித்ததமிழிவை
எத்தனையும்சொல்லவல்லவர்க்கு இடரில்லையே. (2) 10.